தமிழ்நாடு அரசு புறக்கணித்த சார்பட்டா பரம்பரை.. எளிய மனிதனின் வெற்றியை புறக்கணித்ததற்கு சமம்
சென்னை: தமிழ்நாடு அரசு சார்பில் 2016ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரையிலான சிறந்த திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகளுக்கான விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. இந்த விருதுகள் வழங்கப்பட்டது ஒருபக்கம் பாராட்டை பெற்றாலும் மறுபக்கம் விமர்சனங்களை பெற்றிருக்கின்றன. முக்கியமாக சார்பட்டா பரம்பரை திரைப்படத்துக்கு விருது வழங்கப்படாதது மிகப்பெரிய விவாதங்களை கிளப்பியிருக்கிறது.
விருது என்பது ஒரு கலைஞருக்கு பெருமையோ, அங்கீகாரமோ மட்டும் இல்லை. அது ஒருவகையில் அந்த கலைஞர் தொடர்ந்து பயணிப்பதற்கான கச்சா பொருள். அதனால்தான் ஆஸ்கர் முதல் உள்ளூர் மேடையில் கொடுக்கப்படும் விருது வரை கலைஞர் அதை முக்கியமாக பார்க்கிறார். அதற்காக ஓடி ஓடி உழைத்துக்கொண்டிருக்கிறார். ஒரு விருது ஒரு கலைஞனை ஒரு யுகத்துக்கும் சளைக்காமல் ஓட வைக்கக்கூடிய தெம்பை கொடுக்கக்கூடியது.
தமிழ்நாடு அரசு விருது: தமிழ்நாடு அரசு சார்பிலும் திரைப்படங்கள் மற்றும் திரைப்பட கலைஞர்களுக்கான விருது வழங்கப்படும் நடைமுறை கடந்த பல வருடங்களாக இருக்கிறது. முன்பெல்லாம் வருடத்துக்கு ஒருமுறை தமிழ்நாடு அரசு விருதுகள் கொடுக்கப்படும். சமீப காலமாக ஐந்து வருடங்களுக்கோ அல்லது அதற்கும் மேற்பட்ட வருடங்களுக்கோ சேர்த்து வழங்கும் நடைமுறையாக அது மாற்றப்பட்டிருக்கிறது. இதுவே முதலில் மாற்றப்பட வேண்டும் என்பதுதான் பலரது கருத்து.

இந்த முறையும் அப்படித்தான்: இந்த முறையும் அதே நடைமுறையை செயல்படுத்தியிருக்கிறது தமிழ்நாடு அரசு. 2016ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரையிலான சிறந்த தமிழ் திரைப்படங்கள், கலைஞர்களுக்கான விருதை சமீபத்தில் அறிவித்தது அரசு. அதில் ஏகப்பட்ட படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன. நடிகர்கள், நடிகைகளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அது பாராட்டை பெற்றாலும் மறுபக்கம் கடுமையான விமர்சனத்தையும் சந்தித்திருக்கின்றன.
என்ன விமர்சனம்?: அதாவது சிறந்த திரைப்படத்துக்கான விருது பட்டியலில் ரொம்பவே எதிர்பார்க்கப்பட்ட பா.இரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை படத்துக்கு இடம் இல்லாததுதான் அது. சார்பட்டா பரம்பரை திரைப்படம் தமிழ் திரைப்பட துறையில் மட்டுமில்லை இந்திய திரைத்துறையிலேயே மிக மிக முக்கியமான திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏன் முக்கியத்துவம்?: இந்திய திரைத்துறையில் இதுவரை விளையாட்டு தொடர்பான எத்தனையோ திரைப்படங்கள் வந்திருக்கின்றன. அந்த திரைப்படங்கள் வகுத்து வைத்த விதிகளை எல்லாம் உடைத்துவிட்டு புதிய விதியை கட்டமைத்தது அந்தப் படம். ஸ்போர்ட்ஸ் ஜானர் என்றாலே மயிர் கூச்செரியும் காட்சிகள் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்ற பழைய ஃபார்முலா முதற்கொண்டு; ஒரு ஸ்போர்ஸ் படம் உண்மைக்கு எவ்வளவு நெருக்கமாக வேண்டும் என்ற புதிய ஃபார்முலா வரை அத்தனையும் அந்தப் படத்தில் இடம்பெற்றது.
முக்கியமான படம்: குறிப்பாக விளையாட்டு என்பதே எதார்த்தம்தான். இந்திய திரையில் பல விளையாட்டு திரைப்படங்கள் அந்த எதார்த்தத்தை ஊறுகாய்க்குத்தான் தொட்டிருப்பார்கள். ஆனால் இரஞ்சித்தோ சார்பட்டா பரம்பரையில் எதார்த்தத்தத்தை ரசிகர்களுக்கு பெரிய படையலே வைத்திருப்பார். உதாரணமாக, கபிலன் பாக்ஸிங் ரிங் ஏறுவதற்கு முன்பு தனது வாத்தியாரின் கவனத்தை கவரும் ஒரு காட்சி போதும். அந்த அளவுக்கு அந்த சீனை இயல்பு குழையாமலும் அதேநேரம் மாஸ் குறையாமலும் எடுத்திருப்பார் இயக்குநர்.
அதேபோல் சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் இழையோடும் அரசியலும் மிக மிக முக்கியமானது. எமர்ஜென்சி என்ற ஆபத்தான காலகட்டத்தை ஒரு கட்சி எப்படி எதிர்கொண்டது, கட்சியில் இருக்கும் அடிமட்ட தொண்டனும் தங்களை ஒடுக்கும் அதனை எப்படி காத்திரமாக எதிர்த்தான் என்பதை எந்த ஜோடனையும் இல்லாமல் பதிவு செய்திருந்தார். மேலும் எளிய மக்களின் வாழ்வியல், வறுமையிலும்கூட விளையாட்டை எப்படி நேசித்தார்கள், அதிலும் ஒடுக்கப்பட்ட ஒருவனை மேலே ஏற விடாமல் தடுக்க என்னென்ன தகிடு தத்தங்கள் செய்யப்படுகின்றன; வார்த்தைகளால் அவனை எப்படி உளவியல் ரீதியாக சிதைக்க முயற்சிக்கிறார்கள் என அத்தனையுமே படத்தில் டாப் கிளாஸ்.
இதுவரை இந்தியாவில் வந்திருக்கும் பாக்ஸிங் படங்களை எடுத்துக்கொண்டால்; எளிய மனிதன் ஒருவன்தான் அந்த விளையாட்டின் கதாநாயகன்; அந்த ரிங்குக்குள் எலைட் வகுப்பை சேர்ந்த ஒருவனுக்கு இடமே இல்லை என்பதை எஸ்.பி.ஜனநாதன் கதை எழுதிய பூலோகம் படத்தில் கொஞ்சம் பார்க்கலாம். அதற்கு பிறகு முழுக்க முழுக்க எந்த சமரசமும் இன்றி காட்சிப்படுத்தியது பா.இரஞ்சித். இப்படி பல முக்கியத்துவம் கொண்ட ஒரு படத்தை தமிழ்நாடு அரசு புறக்கணித்திருப்பது கண்டிப்பாக அதிர்ச்சிக்குரிய ஒன்றுதான்.
எனில் அந்த வருடத்தில் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் படம் நல்ல படம் இல்லை என்று சொல்லவரவில்லை. ஆனால் ஒரு நல்ல படைப்பை கொண்டாடுவதற்காக இன்னொரு தரமான படைப்பை ஒதுக்குவது எந்த விதத்திலும் நியாயம் ஆகாது. அது அந்த கலைஞனுக்கு செய்யும் துரோகம். எனவே விருது வழங்கும் முறையில் கொஞ்சம் மாற்றத்தை கொண்டு வந்தால் இதுபோன்ற விமர்சனங்களையும் தவிர்க்கலாம். எது எப்படியோ சார்பட்டா பரம்பரை புறக்கணிக்கப்பட்டது ஒரு எளிய மனிதனின் வெற்றி புறக்கணிக்கப்பட்டதற்கு சமம் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications











