SK முதல் D வரை.. நயன் முதல் ஆண்ட்ரியா வரை.. விருதுகளை அள்ளிக் கொடுத்த துணை முதல்வர் உதயநிதி!
தமிழ்நாடு அரசு திரைப்பட மற்றும் சின்னத்திரை விருதுகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் இன்று கோலாகலமாக நடைபெற்றது. துணை முதல்வரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், 2016 முதல் 2022ஆம் ஆண்டுக்கான திரைப்பட விருதுகளையும், 2014 முதல் 2022ஆம் ஆண்டுக்கான சின்னத்திரை விருதுகளையும் வழங்கி கலைஞர்களைக் கௌரவித்தார்.
இந்த விழாவில், சிறந்த நடிகர், நடிகைகளாகத் தெரிவு செய்யப்பட்ட சூர்யா, தனுஷ், கார்த்தி, பார்த்திபன், ஜோதிகா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சாய் பல்லவி உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பலர் உதயநிதி ஸ்டாலினிடம் விருதுகளைப் பெற்றுக்கொண்டனர். திரைப்படத் துறையை ஊக்குவிப்பதன் ஒரு பகுதியாக, சிறந்த தமிழ்த் திரைப்படங்கள், நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு மாநில அரசு சார்பில் ஆண்டுதோறும் இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.
திரைப்பட விருதுகளுடன், 2014 முதல் 2022ஆம் ஆண்டுக்கான சின்னத்திரை விருதுகளும் அறிவிக்கப்பட்டன. சிறந்த நெடுந்தொடர்கள், கதாநாயகன், கதாநாயகி, சாதனையாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் போன்ற பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. மேலும், தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான (2015-16 முதல் 2021-22) விருதுகளும் தேர்வு செய்யப்பட்டிருந்தன.
2016 முதல் 2022ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகர்களாக விஜய் சேதுபதி, கார்த்தி, தனுஷ், ஆர். பார்த்திபன், சூர்யா, ஆர்யா, விக்ரம் பிரபு ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதேபோல், சிறந்த நடிகைகளுக்கான விருதுகளை கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, ஜோதிகா, மஞ்சு வாரியர், அபர்ணா பாலமுரளி, லிஜோமோல் ஜோஸ், சாய் பல்லவி ஆகியோர் பெற்றனர்.
சிறந்த திரைப்படங்களுக்கான விருதைப் பெற்றவை: மாநகரம், அறம், பரியேறும் பெருமாள், அசுரன், கூழாங்கல், ஜெய்பீம், கார்கி ஆகிய ஏழு படங்களும் அந்தந்த ஆண்டுக்கான சிறந்த படைப்புகளாகப் பாராட்டப்பட்டன. விழாவில் திரைப்பட மற்றும் சின்னத்திரை பிரபலங்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்ட திரைப்பட விருதுகள் குறித்த மேலும் சில விவரங்கள்: 2017ஆம் ஆண்டுக்கான சிறந்த இயக்குநர் விருதை 'மாநகரம்' திரைப்படத்திற்காக லோகேஷ் கனகராஜ் வென்றார். 'தரமணி' படத்திற்காக ராம் சிறந்த உரையாடல் ஆசிரியராகத் தேர்வு செய்யப்பட்டார். இதே ஆண்டு 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்திற்காக எச். வினோத் சிறந்த கதாசிரியர் விருதைப் பெற்றார்.

வட சென்னை டீம்: 2018ஆம் ஆண்டுக்கான சிறந்த வில்லன் நடிகர் விருதை 'வடசென்னை' திரைப்படத்திற்காக சமுத்திரக்கனி தட்டிச் சென்றார். 'பரியேறும் பெருமாள்' படத்திற்காக மாரி செல்வராஜ் சிறந்த இயக்குநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே 2017இல், 'வடசென்னை' படத்திற்காக அமீர் சிறந்த குணச்சித்திர நடிகர் விருதையும், சந்தோஷ் நாராயணன் சிறந்த இசையமைப்பாளர் விருதையும் பெற்றனர். 'மோகினி' படத்திற்காக யோகி பாபு சிறந்த நகைச்சுவை நடிகராக கௌரவிக்கப்பட்டார். 2022இல் 'பொன்னியின் செல்வன்' படத்திற்காக சிறந்த இசையமைப்பாளர் விருதை இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் வென்றார். வெவ்வேறு ஆண்டுகளில் வெளியான திரைப்படங்களுக்கான சிறந்த கலைஞர்கள் மற்றும் படைப்புகள் இந்த விழாவில் கௌரவிக்கப்பட்டன.
சீரியல்: சின்னத்திரை விருதுகளைப் பொறுத்தவரை, எம். ராஜ்குமார், ஆர். பாண்டியராஜன், கெளசிக், கிருஷ்ணா, தலைவாசல் விஜய், வ. சஞ்சீவ், ஜெய் ஆகாஷ், கார்த்திக் ராஜ், சஞ்சீவ் ஆகியோர் சிறந்த கதாநாயகர்களாகவும்; ஆர். ராதிகா சரத்குமார், வாணி போஜன், நீலிமா ராணி, சங்கவி, ரேவதி, ரேஷ்மா, ஷபானா ஷாஜகான், கேப்ரயெல்லா செல்லஸ், சைத்ரா ஆகியோர் சிறந்த கதாநாயகிகளாகவும் தேர்வு செய்யப்பட்டனர். சிறந்த நெடுந்தொடர்களாக 'அழகி', 'ரோமாபுரி பாண்டியன்', 'ராமானுஜர்', 'நந்தினி', 'பூவே பூச்சூடவா', 'செம்பருத்தி', 'ராசாத்தி', 'சுந்தரி', 'எதிர்நீச்சல்' ஆகிய தொடர்கள் விருதுகளை வென்றன. இந்த விருதுகள் சின்னத்திரை கலைஞர்களின் தொடர் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அமைந்தன.
பரிசு விபரம்: விருது விழா நிகழ்வில் அமைச்சர்கள் சேகர்பாபு, சுவாமிநாதன் மற்றும் தமிழக அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்றனர். சிறந்த நடிகர், நடிகையர் மற்றும் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தலா ஒரு பவுன் தங்கப் பதக்கம், நினைவுப் பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன. சிறந்த திரைப்படங்களுக்கு முதல் பரிசாக ₹2 லட்சமும், இரண்டாம் பரிசாக ₹1 லட்சமும், மூன்றாம் பரிசாக ₹75,000 வழங்கப்பட்டது. சிறப்புப் பரிசாக ₹75,000 மற்றும் பெண்களைப் பற்றி உயர்வாகச் சித்தரிக்கும் படங்களுக்கான சிறப்புப் பரிசாக ₹1.25 லட்சமும் அளிக்கப்பட்டது. சின்னத்திரை பிரிவில் சிறந்த நெடுந்தொடர்களுக்கு முதல் பரிசாக ₹2 லட்சமும், இரண்டாம் பரிசாக ₹1 லட்சமும் வழங்கப்பட்டது. சிறந்த கதாநாயகன், கதாநாயகி மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தலா ஒரு பவுன் தங்கப்பதக்கம், நினைவுப்பரிசு, மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டு பாராட்டப்பட்டது.


Click it and Unblock the Notifications











