தேர்தல் முடிந்தும் தீராத தலைவலி.. ரத்னகுமாரின் ’29’ படத்தின் நிலைமை என்ன ஆகும்?.. ’கருப்பு’ கர்ஜிக்குமா?
சென்னை: விஜய்யின் மாஸ்டர் மற்றும் லியோ உள்ளிட்ட படங்களுக்கு வசனகர்த்தாவாக லோகேஷ் கனகராஜ் உடன் இணைந்து பணியாற்றிய ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள '29' திரைப்படம் மே 8ம் தேதி நாளை வெளியாகவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் அரசியல் சூழல் காரணமாக ரசிகர்கள் தியேட்டருக்குச் செல்வார்களா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
சமீபத்தில் அளித்த பேட்டியில் ரத்னகுமார் மே 7ம் தேதி தளபதி விஜய் சிஎம் ஆகிறார். அவர் ஆட்சியில் வெளியாகும் முதல் சினிமாவாக தன்னுடைய படம் இருக்கும் என மகிழ்ச்சி தெரிவித்தார்.

ஆனால், மே 7ம் தேதி நேரு ஸ்டேடியம் ரெடியானாலும் விஜய்க்கு போதுமான ஆதரவை திமுகவின் கூட்டணி கட்சிகள் தர மறுத்து வரும் நிலையில், விஜய் முதல்வராக முடியாத சூழல் உருவாகியுள்ளது.
ஏப்ரல் மாதம் ஏமாற்றம்: இந்த ஆண்டு தமிழ் சினிமா 4 மாதங்களில் அதிகபட்சமாக 4 வெற்றிப் படங்களை மட்டுமே கொடுத்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது என்கின்றனர். அதிக வசூலை ஈட்டிய வெற்றிப் படங்களாக தாய் கிழவி, யூத், வித் லவ் மற்றும் தலைவர் தம்பி தலைமையில் உள்ளிட்ட படங்கள் மட்டுமே உள்ளன. கடந்த ஏப்ரல் மாதம் வெளியான லவ் இன்சூரன்ஸ் கம்பெனி மற்றும் தனுஷின் கர போன்ற பெரிய படங்கள் படுதோல்வியை சந்தித்து ஏப்ரல் மாதத்தில் ஏமாற்றத்தையே தமிழ் திரையுலகுக்கு தந்துள்ளன.

மே மாதமும் மோசம்: இந்நிலையில், மே மாதமாவது படங்கள் வெற்றி வாகை சூடுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. இந்த வாரம் ரத்னகுமார் இயக்கத்தில் ரெட்ரோ படத்தில் வில்லனாக நடித்த விது மற்றும் அயோத்தி , கிஸ் படங்களில் நடித்த ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ள '29' படம் நாளை மே 8ம் தேதி வெளியாகிறது. அடுத்த வாரம் சூர்யா நடித்துள்ள 'கருப்பு' படம் மே 14ம் தேதி திரைக்கு வருகிறது. ஆனால், இந்த 2 படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக எதிர்பார்ப்பு இல்லை என்றே கூறுகின்றனர்.
விஜய் அரசியல் படம் தான் ஹைலைட்: ஜன நாயகன் படம் தான் ஜனவரி 9ம் தேதி வெளியாகாமல் இன்று வரை சென்சார் கிடைக்காமல் தவித்து வருகிறது என்று பார்த்தால் விஜய்யின் ரியல் ஜன நாயகன் படமான முதலமைச்சர் விஜய் என்கிற படமும் இன்னமும் ரிலீஸ் ஆகாமல் ரசிகர்களை பாடாய்படுத்தி வருகிறது. தேர்தல் முடிவுகள் வந்த பின்னரும் தீராத தலைவலியாக விஜய்க்கு அரசியல் அழுத்தங்கள் தொடர்ந்துக் கொண்டே வருகின்றன.
கருப்பு கர்ஜிக்குமா?: ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா நடிப்பில் வெளியாகவுள்ள கருப்பு படத்தின் ட்ரெய்லரை படக்குழு ரிலீஸ் செய்யவே இன்னமும் யோசித்து வருவதால் படத்தின் மீது பெரிதாக எதிர்பார்ப்புகள் சூர்யா ரசிகர்களிடமே குறைந்து காணப்படுகிறது. கங்குவா, ரெட்ரோ வரிசையில் இந்த படமும் சூர்யாவுக்கு சொதப்பி விடுமோ என்கிற அச்சமும் எழுந்துள்ளது. உடனடியாக ட்ரீம் வாரியர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் எழுப்பினால் தான் கருப்பு கர்ஜிக்கும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications