மொத்தத்தையும் அள்ளிடலாம்.. தங்கலான் படத்தின் தமிழக உரிமை.. எத்தனை கோடிக்கு விற்பனையானது தெரியுமா?
சென்னை: இயக்குனர் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் நடிகர் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் தங்கலான். இந்த படம் வியாழக்கிழமை வெளியாக உள்ள நிலையில், தங்கலான் படத்தின் தமிழக திரையரங்க உரிமை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்த கரிகாலனாக அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்திய நடிகர் விக்ரம், தங்கலான் படத்திற்காக நீண்ட தாடி, தலைமுடியுடன் பண்டைய கால காட்டுவாசி போல வித்தியாசமான தோற்றத்துடன் உடலை வறுத்திக்கொண்டு நடித்துள்ளார். விக்ரமை பொருத்தவரை நடிப்பு என்று வந்துவிட்டால், மனுஷன் இறங்கி நடித்து விடுவார். அதற்கு உதாரணமான ஐ படம், கோப்ரா படத்தை சொல்லலாம். இந்த இரண்டு படத்திலும் கெட்டப்பை மாற்றி நடித்திருப்பார். தங்கலான் படத்தின் தோற்றத்திற்காக விக்ரம் பல மணிநேரம் மேக்கப் போட்டு நடிக்கிறார்.

சிறப்பான நடிப்பு: இந்த படத்தின் மேக்கிங் வீடியோவை பார்த்த போது, இதற்காக ஒட்டுமொத்த படக்குழுவும் எப்படி கஷ்டப்பட்டு கடுமையாக உழைத்து உள்ளனர் என்பதை பார்க்க முடிந்தது. விக்ரம் மட்டுமில்லாமல், மாளவிகா மோகன், பார்வதி திருவோத்து, பசுபதி என ஒவ்வொரு கதாபாத்திரமும் தங்களது கதாபாத்திரம் திரையில் சிறப்பாக வரவேண்டும் என்று, உடலை கஷ்டப்படுத்திக்கொண்டு நடித்துள்ளனர்.
ஆஸ்கருக்கு விண்ணப்பம்: இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான தங்கலான் படம் நீண்ட எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆகஸ்ட் 15ந் தேதி வெளியாக உள்ளது. ஸ்டுடியோ கிரீன் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம் பெற்ற மினிக்கி மினிக்கி பாடல் தற்போது இணையத்தில் டிரெண்டிங்கில் இருக்கிறது. ஆங்கிலேயர் காலத்தில் நடந்த கேஜிஎஃப் சம்பவத்தை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்த படம் ஆஸ்கருக்கு விண்ணப்பித்து இருப்பதாக தயாரிப்பாளர் தனஞ்செயன் தெரிவித்து இருந்தார்.
பல கோடிக்கு உரிமை: இந்நிலையில் தங்கலான் படத்தின் முன்பதிவு 10ந் தேதி தொடங்கிய நிலையில், ப்ரீ புக்கிங்கில் மட்டும் ரூ. 1.8 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அது மட்டுமில்லாமல், தங்கலான் திரைப்படத்தின் தமிழக திரையரங்க உரிமை ரூ. 25 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது என சொல்லப்படுகிறது. தங்கலான் படம் பெரும் தொகைக்கு விற்பனையாகி இருப்பதற்கு காரணம், பா ரஞ்சித்தின் இயக்கத்தின் மீது இருக்கும் நம்பிக்கையும், விக்ரமின் அசுரத்தனமான நடிப்பின் மீது இருக்கும் நம்பிக்கையின் காரணமாக இவ்வளவு பெரிய தொகைக்கு விநியோகஸ்தர்கள் வாங்கியுள்ளதாக பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











