ரஜினி, அஜித் சம்பளத்துக்கு கட்டுப்பாடு.. முன்னணி நடிகர்களுக்கு கடிவாளம்.. தயாரிப்பாளர் சங்கம் அதிரடி
சென்னை: தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா உள்ளிட்டோர் முன்னணி நடிகர்களாக வலம் வந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஒரு படத்துக்கு 200 கோடி ரூபாய்வரை சம்பளமாக வாங்குகிறார்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில் அவர்கள் வாங்கும் சம்பளத்துக்கு கட்டுப்பாடு விதித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் இன்றைய பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது.
கோலிவுட்டின் முன்னணி நடிகர்களாக ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு, விக்ரம் உள்ளிட்டோர் திகழ்ந்துவருகிறார்கள். கடந்த பல வருடங்களாக திரைத்துறையில் கோலோச்சிவரும் இவர்கள் ஏகப்பட்ட கஷ்டங்கள், விமர்சனங்களை கடந்து இன்று தங்களுக்கென தனி சாம்ராஜ்ஜியத்தையே உருவாக்கி வைத்திருக்கிறார்கள். அவர்கள் படம் ரிலீஸானால் ரசிகர்களுக்கு அன்றைய தினம் பண்டிகை தினம்தான்.
சறுக்கலில் பெரிய ஹீரோக்கள்: ஆனால் மேற்கூறிய நடிகர்களின் சமீபத்திய படங்கள் பெரிதாக ஹிட்டாகவில்லை. ரஜினியின் கூலி, கமலின் தக் லைஃப், விஜய்யின் கோட், அஜித்தின் விடாமுயற்சி, குட் பேட் அக்லி, சூர்யாவின் ரெட்ரோ, விக்ரமின் வீர தீர சூரன் என அந்த லிஸ்ட் நீண்டுகொண்டே செல்கிறது. அதிக பட்ஜெட்டை கொட்டி எடுக்கப்படும் பெரிய ஹீரோக்களின் படங்கள் புஸ்வானமாக போவது தமிழ் திரைத்துறைக்கே கெட்ட சகுனமாக திரை ஆர்வலர்களால் பார்க்கப்படுகிறது.

நடிகர்களின் சம்பளம்: அதேபோல் அவர்களது ஒரு படம் தோல்வியடைந்தால் அவர்கள் அடுத்த படத்தில் சம்பளத்தை குறைக்க மறுத்து; உயர்த்தத்தான் செய்கிறார்கள் என்ற பேச்சும் இருக்கிறது. அவர்களது சம்பளம் எல்லாம் அசால்ட்டாக 200 கோடி ரூபாய்வரை சம்பளமாக வாங்குகிறார்கள் கோலிவுட்டிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. படம் பெரிய வெற்றி பெறாவிட்டாலும் அடுத்தடுத்த படங்களுக்கு அவர்கள் அதே சம்பளத்தை வாங்குவதை நிறுத்த வேண்டும் என்ற குரல்களும் நீண்ட காலமாக ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.
மறுக்கும் நடிகர்கள்?: ஆனால் அந்த குரல்களை தங்களது செவிகளிலேயே அவர்கள் போட்டுக்கொள்வதாக தெரியவில்லை. ரஜினிகாந்த் கூலி படத்துக்கு முன்னதாக நடித்த வேட்டையன் படம் பெரிய வெற்றியெல்லாம் இல்லை. ஆனால் அவர் கூலிக்கு அதிக சம்பளம் பெற்றதாகவே தெரிகிறது. அதே நிலைமைதான் மற்ற முன்னணி நடிகர்களுக்கும் இருக்கிறது. இந்நிலையில் அவர்களது சம்பளத்துக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் கட்டுப்பாடு விதித்திருக்கிறது.
புதிய தீர்மானங்கள்: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழு இன்று கூடியது.அதில் மொத்தம் 23 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவற்றில் இரண்டு தீர்மானங்கள் முக்கியமானவையாக கருதப்படுகிறது. அதாவது, திரைப்படங்களில் நடிப்பதற்காக கொடுத்த கால்ஷீட்டை வெப் சீரிஸ்களுக்கு நடிகர்கள் கொடுத்தால் அதற்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் ஒத்துழைப்பு வழங்கக்கூடாது என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
சம்பளத்துக்கு கட்டுப்பாடு: அதேபோல் ஒரு படத்துக்கு முழு ஊதியம் பெறுவதற்கு பதிலாக முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, சிம்பு, விஷால், தனுஷ், விக்ரம், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் படம் வியாபாரமாகும் தொகையில் பங்கு பெற்றுதான் நடிக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இந்த தீர்மானங்கள் தமிழ் திரைத்துறையில் புதிய மாற்றத்தை கொண்டு வருமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











