Tamil Re-releases: சுப்ரமணியபுரம் முதல் மூன்று முகம் வரை... இந்த வாரம் ரீ-ரிலீஸான படங்களின் லிஸ்ட்!
சென்னை: வெள்ளிக் கிழமையான இன்று தமிழில் புதிய படங்கள் எதுவும் ரிலீஸாகவில்லை.
அடுத்த வாரம் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் வெளியாகவுள்ளதால், சின்ன பட்ஜெட் படங்கள் கூட இன்று ரிலீஸாகவில்லை.

அதனால் தமிழில் ஏற்கனவே சூப்பர் ஹிட் அடித்த 10 படங்கள் இன்று ரீ-ரிலீஸாகியுள்ளன.
சுப்ரமணியபுரம், பிகில், சிவாஜி தி பாஸ் உட்பட இன்று ரீ-ரிலீஸான படங்களின் லிஸ்ட்டை இப்போது பார்க்கலாம்.
தமிழில் ரீ-ரிலீஸான படங்களின் லிஸ்ட்: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் வரும் 10ம் தேதி ரிலீஸாகிறது. ஜெயிலருக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுவதால், இந்த வாரம் எந்த புதிய படங்களும் வெளியாகவில்லை. இதனால், ஏற்கனவே சூப்பர் ஹிட் அடித்த படங்கள் இன்று ரீ-ரிலீஸாகியுள்ளன. அதன்படி மொத்தம் 10 படங்கள் வரை ரீ-ரிலீஸாகிவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதில் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் சுப்ரமணியபுரம். சசிகுமாரின் முதல் படமாக உருவான சுப்ரமணியபுரம் வெளியாகி 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. தமிழ் சினிமாவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய இந்தப் படம், இப்போதும் சசிகுமாருக்கு பேர் சொல்லும் படைப்பாக காணப்படுகிறது. இந்நிலையில், 15இயர்ஸ் ஆஃப் சுப்ரமணியபுரம் என்ற கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக, இன்று ரீ-ரிலீஸாகியுள்ளது இப்படம். இதனை ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.
அதேபோல், சிம்புவின் பத்து தல திரைப்படமும் இன்று வெளியாகியுள்ளது. கடந்த மார்ச் மாதம் இறுதியில் வெளியான பத்து தல கலவையான விமர்சனங்களையே பெற்றது. அதேபோல், வசூலிலும் பெரிதாக கவனம் ஈர்க்கவில்லை. ஆனாலும், பத்து தல இன்று ரீ-ரிலீஸாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், விஜய் - அட்லீ - ஏஆர் ரஹ்மான் கூட்டணியில் வெளியான மெர்சல், பிகில் படங்களும் இன்று ரீ-ரிலீஸாகியுள்ளன.
மணிரத்னம் ரசிகர்களுக்காக அவரது சூப்பர் ஹிட் படங்களும் இன்று ரீ-ரிலீஸாகியுள்ளன. துல்கர் சல்மான் நடித்த 'ஓக்கே கண்மணி', சிம்பு, அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி நடித்த 'செக்க சிவந்த வானம்', விக்ரம், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியான 'ராவணன்' என மூன்று படங்கள் மணிரத்னம் ரசிகர்களுக்காக ரீ-ரிலீஸாகியுள்ளன. அதேபோல், சூர்யாவின் '24' திரைப்படமும் இன்று வெளியாகியுள்ளது.
அடுத்த வாரம் ஜெயிலர் வெளியாகவுள்ளதால், சூப்பர் ஸ்டார் ரசிகர்களுக்கு வைப் கொடுக்க இந்த வாரம் இரண்டு திரைப்படங்கள் ரீ-ரிலீஸாகியுள்ளன. ரஜினி - ஷங்கர் கூட்டணியில் முதன்முறை உருவான சிவாஜி தி பாஸ் படம் இன்று ரீ-ரிலீஸாகியுள்ளது. அதேபோல், ரஜினியின் எவர்க்ரீன் ஆக்ஷன் படமான மூன்று முகம் இன்று மீண்டும் வெளியிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications