இந்த ஏரியாவையும் விட்டு வைக்கலையே.. லாக்டவுன்ல இந்த தமிழ் ராக்கர்ஸ் பண்ற வேலையை பார்த்தீங்களா?
சென்னை: கொரோனா லாக்டவுனிலும் தமிழ் ராக்கர்ஸ், தங்கள் வேலையை கச்சிதமாக செய்துவருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் திரைப்படங்களை திருட்டுத்தனமாக ஆன்லைனில் வெளியிடும் வேலையை செய்து வருகிறது, தமிழ் ராக்கர்ஸ் இணையதளம்.
சில படங்களை, ரிலீஸ் ஆன சில மணி நேரங்களிலேயே வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்தும் இருக்கிறது, இந்த இணையதளம்.

தமிழ் ராக்கர்ஸ்
முதலில் தமிழ்த் திரைப்படங்களை மட்டும் வெளியிட்டுக் கொண்டிருந்த இந்த இணையதளம் பிறகு மெள்ள மெள்ள தனது எல்லையை விரிவுபடுத்தியது. மற்ற மொழி படங்களையும் திருடத் தொடங்கியது. தெலுங்கு, மலையாளம், இந்தி படங்களையும் இந்த தமிழ் ராக்கர்ஸ் விட்டு வைக்கவில்லை. அனைத்தும் தியேட்டர் பிரின்ட் என்பதால், இந்த படங்களை வெளிநாட்டு தியேட்டர்களில் திருட்டுத்தனமாக பதிவு செய்து வெளியிடுவதாகக் கூறப்படுகிறது.

முடியவில்லை
இந்த தமிழ் ராக்கரஸை ஒழிக்க, தமிழ்த் தயாரிப்பாளர்கள் சங்கம் கடும் முயற்சி எடுத்தும் முடியவில்லை. சினிமாகாரர்களுக்கு தண்ணி காட்டி வரும் இந்த இணையதளம், இந்த லாக்டவுனில் அமைதியாக இருக்கும் என்று நினைத்தால், அதையும் மாற்றி இருக்கிறது. லாக்டவுன் காரணமாக மொத்த சினிமாதுறையும் முடங்கிக் கிடக்கிறது.

சினிமா தொழில்
நடிகர், நடிகர்கள், இயக்குனர்கள் உள்ளிட்டவர்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். தியேட்டர்கள் திறக்கப்படவில்லை என்பதால் சினிமா தொழில் பாதிப்படைந்துள்ளது. பொதுவாக தமிழ் ராக்கர்ஸ், தியேட்டர்களில் இருந்துதான் படங்களை பதிவு செய்வது வழக்கம் என்பதால், இப்போது அதற்கு வாய்ப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஜாக்குலின் பெர்ணாண்டஸ்
இதனால், தனது வேலையை மற்ற ஏரியாவில் காட்டத் தொடங்கி இருக்கிறது, தமிழ் ராக்கர்ஸ். அதாவது ஓ.டி.டி.பிளாட்பார்ம்களில் வெளியாகியுள்ள வெப்சீரிஸ்களை அப்படியே சுட்டு வெளியிட்டிருக்கிறது, இந்த இணையதளம். பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்ணாண்டஸ் நடித்துள்ள வெப் சீரிஸான Mrs. Serial Killer நெட்பிளிக்ஸில் வெளியான சில நிமிடங்களிலேயே திருட்டுத்தனமாக ரிலீஸ் செய்துவிட்டனர்.

இணையதளம்
இதே போல அமேசான் பிரைமில் இருந்து, ஃபோர் மோர் ஷாட்ஸ் பிளீஸ் தொடரின் 2 ஆம் பாகம், ஹாட் ஸ்டாரில் இருந்து ஸ்பெஷல் ஆப்ஸ் உட்பட பல தொடர்களை திருட்டுத்தனமாக ரிலீஸ் செய்துள்ளது. திரைப்படங்களை மட்டுமே திருட்டுத்தனமாக வெளியிட்டுக் கொண்டிருந்த இந்த இணையதளம், ஓ.டி.டி.பிளாட்பார்முக்கும் வந்திருப்பது அந்த நிறுவனங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications