போர்வைக்குள் கேமரா.. திருட்டுத்தனமாக புது படத்தை பதிவு செய்தோம்.. தமிழ் ராக்கர்ஸ் குழு வாக்குமூலம்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் திரையரங்கில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் நிலையில், வேட்டையன் படத்தை திருட்டுத்தனமாக பதிவு செய்த தமிழ் ராக்கர்ஸ் நிர்வாகிகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில், அவர்கள் திரையரங்குகளில் திருட்டுத்தனமாகப் புதிய படங்களை பதிவு செய்தது எப்படி என்பதை விளக்கமாக கூறியுள்ளனர்.
தியேட்டரில் எந்த புதிய படங்கள் வெளியானாலும் அடுத்த ஒரு மணிநேரத்தில் தமிழ் ராக்கர்ஸ் என்ற இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு வருவது திரை உலகினர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறது. இந்த இணையதளத்தை முடக்க பெரும் முயற்சி செய்தும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில், கடந்த ஜூலை மாதம் கேரளா போலீசார் அதிரடியாக மதுரையில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தின் முக்கிய நிர்வாகியை கைது செய்துள்ளனர்.

தமிழ் ராக்கர்ஸ்: இதைத்தொடர்ந்து, போலீசார் தியேட்டரில் அதிரடி வேட்டை நடத்தி வந்த நிலையில், செல்போனில் வேட்டையன் திரைப்படத்தை பதிவு செய்துகொண்டு இருந்த இரண்டு ஐடி ஊழியர்களை கேரளா மாநில காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில் இருவரும் தமிழ் ராக்கர்ஸ் இணையத்தளத்தில் திரைப்படங்களை திருட்டுத்தனமாக பதிவு செய்து பதிவேற்றி வந்த கும்பலை சேர்ந்தவர்கள் என்பது அம்பலமானது. இவர்களுக்கு படத்தை பதிவேற்றுவதால் ரூ.40 ஆயிரம் முதல் சில இலட்சம் வரை பணம் வரும் என்று கைது செய்யப்பட்ட குமரேசன், பிரவீன் குமார் தெரிவித்துள்ளனர்.
இப்படித்தான் வீடியோ எடுத்தோம்: இதனால் தமிழ் மொழி படங்கள் வெளியாகும் நேரத்தில் பக்கத்து மாநிலமான கேரளா மற்றும் கர்நாடகாவில் மக்கள் கூட்டம் குறைவாக இருக்கும் தியேட்டரை தேர்வு செய்து , கூடுதல் இருக்கைகளை முன்கூட்டியே புக்கிங் செய்து செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். பின் திரையரங்கு நிர்வாகத்திற்கு கூட தெரியாமல் செல்போனை வைத்து படம் முழுவதையும் வீடியோ எடுத்து, அதனை பதிவேற்றம் செய்து வந்துள்ளனர்.
போர்வைக்குள் கேமரா: மேலும், திரையரங்குகளில் திருட்டுத்தனமாகப் புதிய திரைப்படங்களை பதிவு செய்தது எப்படி என்பது குறித்து அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். அதில், முக்கிய திரைப்படங்கள் வெளியாக முதல் நாளில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் படுத்துக்கொண்டே திரைப்படம் பார்க்கும் வகையிலான திரையரங்குகளில் முதல் வரிசையில் ஐந்து இருக்கைகளை முதலிலேயே முன் பதிவு செய்துவிடுவோம். வரிசையாக அமர்ந்து இருக்கும் ஐந்து பேரில் நடுவில் இருப்பவர் போர்வை போர்த்திக் கொண்டு கேமராவை அதில் வைத்து வீடியோ எடுத்ததாக போலீசில் அவர்கள் வாக்கு மூலம் கொடுத்துள்ளனர்.
வேட்டையன் திரைப்படத்தை வீடியோ எடுத்தபோது இவர்கள் சிக்கியுள்ளனர். முன்னதாக ராயன் திரைப்படத்தை திருவனந்தபுரத்தில் உள்ள திரையரங்கில் வீடியோ எடுத்த தமிழ் ராக்கர்ஸ் அட்மின் கைது செய்யப்பட்டு, இணையம் முடக்கப்பட்டு இருந்த நிலையில், கூடுதலாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











