புஷ்பலதா மரணம்.. நிறைவான வாழ்க்கை வாழ்ந்திருக்காங்க.. மனமுடைந்து பேசிய கார்த்தி, சிவக்குமார்
சென்னை: தமிழ் திரையுலகில் இருந்தவர்களில் பழம்பெரும் நடிகையாக வலம் வந்தவர் நடிகை புஷ்பலதா. இவர் வயது மூப்பு காரணமாக நேற்று அதாவது, பிப்ரவரி 4ஆம் தேதி மரணமடைந்தார். இது தொடர்பான தகவல் திரையுலத்தினரை கவலையில் ஆழ்த்தியது. இந்நிலையில் அவரது வீட்டிற்கு நடிகர் சங்க பொருளாளரும் நடிகருமான கார்த்தி, அவரது தந்தை சிவக்குமார் நேரில் சென்று அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினர்.
பழம்பெரும் நடிகை புஷ்பலதா தனது 87 வது வயதில் மரணமடைந்துள்ளார். இவர் கொங்கு நாட்டுத் தங்கம் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்தார். கதாநாயகியாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வந்தார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், முத்துராமன் உள்ளிட்ட பல மூத்த நடிகர்களுடன் அதாவது அவர் காலத்தில் திரையுலகில் டாப்பில் இருந்த நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான நான் அடிமை இல்லை படத்தில், ரஜினியின் அத்தை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தக் கதாபாத்திரம் வில்லி கதாபாத்திரம் ஆகும்.

இல்லற வாழ்க்கை: நானும் ஒரு பெண் என்ற படத்தில் நடித்த போது, உடன் நடித்த ஏ.வி.எம் ராஜனுடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாற, இருவரும் திருமணம் செய்து கொண்டனர். புஷ்பலதா - ஏ.வி.எம். ராஜன் தம்பதியர்க்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்களில் மகாலட்சுமி என்பவர் படங்களில் நடித்துள்ளார். புஷ்பலதா வயது மூப்பு மற்றும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால், கடந்த சில ஆண்டுகளாக வீட்டைவிட்டு வெளியே வராமல் இருந்துள்ளார். மருத்துவரின் அறிவுரையினால்தான் வீட்டில் இருந்துள்ளார்.
சிவக்குமார்: இவரது மறைவுச் செய்தி தமிழ் திரையுலகை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் நடிகர் சங்க பொருளாளர், நடிகருமான கார்த்தி, அவரது தந்தையும் நடிகருமான சிவக்குமார் என இருவரும் புஷ்பலதா வீட்டுக்குச் சென்று, அவரது கணவரும் பழம்பெரும் நடிகருமான ஏ.வி. எம். ராஜன் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

மனமுடைந்து: அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கார்த்தி, " ஏ.வி. ராஜன் மற்றும் புஷ்பலதா தம்பதியர், ஒரு நிறைவான வாழ்க்கையை வாழ்ந்துள்ளார்கள். குழந்தைகள், பேரன் பேத்திகள் என முழுமையான வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். எங்கு சென்றாலும் ஒன்றாக தான் செல்வார்கள். வயது மூப்பு காரணமாக இறந்துள்ளார். புஷ்பலதா அம்மாவின் குடும்பத்தினருக்கு நடிகர் சங்கம் என்றைக்கு பக்கபலமாக இருக்கும்" என மனமுடைந்து உருக்கமாக பேசினார். இது தொடர்பான தகவல்களும் வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.


Click it and Unblock the Notifications











