ஐபிஎல் போட்டி நிறைவு விழா.. ஏஆர் ரஹ்மான் இசைக்கச்சேரி.. ஆதிக்கம் செலுத்திய தமிழ் பாடல்கள்!
அகமதாபாத் : ஐபிஎல் 2022 தற்போது நிறைவு பெற்றுள்ளது. நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்று முதல்முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது.
முன்னதாக ஐபிஎல் போட்டியின் நிறைவு விழா குஜராத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
இதில் ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டனர். இசைப்புயல் ஏஆர் ரஹ்மானின் இசைக் கச்சேரியும் நடைபெற்றது.

ஐபிஎல் 2022 தொடர்
இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் கடந்த சில வாரங்களாக களைகட்டிய நிலையில் நேற்றைய தினம் இந்த தொடரின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் பங்கேற்ற குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்று முதல்முறையாக கோப்பையை கைப்பற்றியுள்ளது.

ஐபிஎல் 2022 நிறைவு விழா
முன்னதாக இந்த தொடரின் நிறைவு விழா குஜராத் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் குவிந்திருந்தனர். அவர்களின் கைத்தட்டல்களுக்கிடையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக ரன்பீர் சிங், 83 படத்தின் ஒரு பாடலுக்கு நடனமாடினார்.

ஏஆர் ரஹ்மான் இசைக்கச்சேரி
தொடர்ந்து ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரஹ்மான் தன்னுடைய இசைக் கச்சேரியை துவங்கினார். முதல் பாடலாக வந்தே மாதரம் பாடலை தமிழில் பாடி இந்தக் கச்சேரியை ஏஆர் ரஹ்மான் துவக்கினார். அடுத்தடுத்து பாலிவுட்டின் பல பாடல்களை அவர் பாடினாலும் காதலன் படத்தில் வரும் முக்காலா பாடல், பாய்ஸ் படத்தின் மாரோ மாரோ தமிழ் பாடல்களையும் அவர் இந்த நிகழ்ச்சியில் பாடினார்.

களைகட்டிய வாத்தி கம்மிங் பாடல்
முன்னதாக விஜய்யின் வாத்தி கம்மிங் பாடலுக்கும் ரன்பீர் சிங் நடனமாடினார். தொடர்ந்து ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலும் கச்சேரியில் பாடப்பட்டது. இவ்வாறு இந்தக் கச்சேரியில் தமிழ் பாடல்கள் அதிகமாக ஆதிக்கம் செலுத்தின. ஏஆர் ரஹ்மானின் இந்த இசைக் கச்சேரியில் ஏராளமான பாடகர்கள் கலந்துக் கொண்டு பாடல்களை பாடினர்.

தமிழ் மொழிப்பற்று
ஏஆர் ரஹ்மான் தமிழராக இருந்தாலும் பாலிவுட்டில் அதிகமான பாடல்களுக்கு இசையமைத்து வருகிறார். தற்போது ஹாலிவுட்டிலும் இவரது இசைப்பயம் தொடர்ந்து வருகிறது. ஆயினும் தன்னுடைய தாய் மொழியை மறக்காமல் ஆஸ்கர் வரையில் தமிழை கொண்டு சேர்த்தவர் ஏஆர் ரஹ்மான்.


Click it and Unblock the Notifications











