For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  எஸ்.வி. சேகரின் 'படுக்கை போஸ்ட்'டை எழுதியவரின் வீடு முன்பு தமிழ் பெண்கள் போராட்டம்

  By Siva
  |
  அமெரிக்காவில் எஸ்.வி. சேகருக்கு எதிராக போராட்டம்- வீடியோ

  கலிபோர்னியா: பெரிய ஆட்களுடன் படுக்காமல் அவர்களால் ஒரு ரிப்போர்ட்டராகவோ செய்தி வாசிப்பவரோ ஆகி விட முடியாது என்று எஸ்.வி. சேகர் பகிர்ந்த போஸ்டை எழுதிய திருமலைராஜனை கண்டித்து அமெரிக்காவில் போராட்டம் நடைபெற்றது.

  பெண்களை இழிவுபடுத்தி "மதுரை யூனிவர்சிட்டியும், கவர்னரும், பின்னே கன்னிப்பெண்ணின் கன்னமும்" என்று முகநூல் பதிவுபோட்ட "திருமலை ச"-வுக்கு எதிராக கலிபோர்னியாவின் வளைகுடாப் பகுதியில் பெண்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இவரின் முகநூல் பதிவைத்தான் எஸ்.வி. சேகர் பகிர்ந்து, அவர் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு தலைமறைவானார். எஸ்.வி. சேகரின் வழக்கில் அவர் பகிர்ந்த பதிவை எழுதிய "திருமலை ச" யாரெனத் தெரியவில்லை என்று அவரது வழக்கறிஞர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. அரசு வழக்கறிஞரும் அதே கருத்தையே தெரிவித்துள்ளார்.

  Tamil women protest outside the residence of Thirumalairajan in the USA

  அந்த "திருமலை ச" என்பவரின் இயற்பெயர் திருமலைராஜன் சடகோபன். இவர் கலிபோர்னியாவில் உள்ள மவுண்டன் ஹவுஸ் என்ற நகரத்தில் வசித்து வருகிறார். "பெரிய ஆட்களுடன் படுக்காமல் அவர்களால் ஒரு ரிப்போர்ட்டராகவோ செய்தி வாசிப்பவரோ ஆகி விட முடியாது" என்று பெண்களை இழிவுபடுத்திய தனது பதிவுக்கு, எஸ்.வி. சேகரின் மீது வழக்குகள் பதியப்பட்ட பின்னரும் இவர் வருத்தமேதும் தெரிவிக்காமல் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வலம் வருவது வளைகுடாப் பெண்களை மனவழுத்தத்துக்கு உள்ளாக்கியது. எனவே, அவர்கள் திருமலையை மன்னிப்பு கேட்கச் சொல்லும் முயற்சியை முன்னெடுத்தனர்.

  முதற்கட்டமாக, திருமலை மன்னிப்பு கேட்க வேண்டுமென்ற கோரிக்கையை வைத்து ஆன்லைன் விண்ணப்பமொன்றை (https://www.gopetition.com/petitions/condemn-against-thirumalai-sa.html) உருவாக்கினர். அதில் இதுவரை ஏறக்குறைய 500பேர் கையொப்பமிட்டிருக்கின்றனர். இதனால், இருபக்கமும் அக்கறை கொண்ட நண்பர்கள் பேச்சுவார்த்தையை முன்னெடுத்தனர். அவர்களிடம், மன்னிப்பு கோருவது பற்றிய ஏதும் பேசாமல், அவர் சில திசைத்திருப்பும் முயற்சியில் ஈடுபட்டதால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

  பின்னர், திருமலைக்கு பதிவஞ்சல்(Registered Post) மூலம் ஒரு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டது. அதில், திருமலை எழுத்து மூலமும், காணொளி மூலமும் பொதுமன்னிப்பு கோர வேண்டும் என்று பெண்கள் தங்களின் கோரிக்கையாக முன்வைத்தனர். அதற்கு, இந்தியாவில் எஸ்.வி. சேகரின் வழக்கின் முன்னேற்றத்தை கவனிக்கவும், தமது வழக்கறிஞர்களிடம் கலந்தாய்வு செய்யவும் திருமலை ஒரு மாதகால இடைவெளியை நண்பர்கள் மூலம் கேட்டார்.

  பெரிய ஆட்களுடன் படுத்தால்தான் பெண்கள் வேலைக்குப் போக முடியும் என்று எழுத சில நிமிடங்கள் கூட எடுத்துக்கொள்ளாத திருமலைக்கு, மன்னிப்புக் கேட்க ஒரு மாதம் ஏன் என்பது பெண்களின் கேள்வியாக இருந்தது. எனவே, அறவழிப் போராட்டமொன்றை நடத்த கலிபோர்னியா வளைகுடாப்பகுதிப் பெண்கள் முடிவு செய்தனர்.

  Tamil women protest outside the residence of Thirumalairajan in the USA

  மே 19, 2018 அன்று மாலை 3 மணியளவில் திருமலைராஜன் வீட்டிற்கு முன்னால் அறவழிப் போராட்டம் நடத்த முடிவுசெய்து, அவரின் வீட்டருகே உள்ள மவுண்டன் ஹவுஸ் உயர்நிலைப்பள்ளியின் (Mountain House High School) கட்டிடத்தில் ஏறத்தாழ 60க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடினர். திருமலையை மன்னிப்புக் கேட்கச் சொல்லி பதாகைகளைக் கையிலேந்தி, அமைதிப் போராட்டத்தின் அடையாளமாக தங்கள் வாயில் கறுப்புத் துணியைக் கட்டிக்கொண்டு மவுண்டன் ஹவுஸ் உயர்நிலைப்பள்ளியிலிருந்து திருமலையின் வீடு நோக்கி ஊர்வலம் தொடங்கியது. முடிவில் திருமலை வீட்டுக்கு எதிரே குவிந்து பதாகைகளைக் கையிலேந்தி அமைதி காத்து நின்றனர்.

  திருமலை வீட்டருகே வசிக்கும் பல்வேறு தேசங்களைச் சார்ந்த மக்கள் ஆர்வத்துடன் ஊர்வலம் பற்றியும், பெண்களின் கோரிக்கை பற்றியும் கேட்டறிந்து தங்களின் ஆதரவைத் தெரிவித்தனர். தொடக்கம் முதல் முடிவுவரை மவுண்டன் ஹவுஸ் காவல்துறை அதிகாரி உடனிருந்து பாதுகாப்பு கொடுத்தார்.

  கண்டனக் கூட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான பிரிமாண்ட் நகரில் (City of Fremont) வாழும் திருமதி. சாந்தி, திருமலையின் சொற்களில் பொதிந்துள்ள நச்சுத்தன்மையை உணர்ந்த பின்பே தானும் ஒத்த கருத்துடைய பிற பெண்களும் இம்முயற்சியை முன்னெடுத்ததாகக் கூறினார். குடியாட்சியின் கட்டமைப்பு செயலிழக்கும்போது, நாட்டின் சட்டமன்றத்தையும், நிர்வாகத்துறையையும், நீதித்துறையையும் கேள்வி கேட்கும் பொறுப்பு நான்காவது தூணான ஊடகத்துறைக்கே உண்டு. அப்படிப்பட்ட பொறுப்புமிகுந்த துறைக்குள் பெண்கள் பலர் நுழையும் இந்தக் காலக்கட்டத்தில் திருமலையின் இழிவான சொற்களும், அதைப் பகிர்ந்த எஸ்.வி. சேகரின் பொறுப்பற்ற கயமைத்தனமும் ஊடகத்துறைக்கு வர முயலும் பெண்களை அயர்வடையச் செய்கின்றன. மேலும், திருமலையின் இழிச்சொற்கள் ஊடகத்துறையில் பணியாற்றும் பெண்களை மட்டுமின்றி ஒட்டுமொத்தத் தமிழ்பெண்களையும் இழிவுபடுத்துகிறது. இதற்கு எதிர்ப்பைப் பதிவு செய்வது குடிமக்களின் கடமை என்றும் சாந்தி கூறினார்.

  திருமலை வாழும் நகரமான மவுண்டன் ஹவுசில் வாழும் திரு உதயபாஸ்கர், பெண்கள் தங்களின் மானத்தை விற்றுத்தான் வேலையில் முன்னேற வேண்டும் என்று இழிவுபடுத்தி எழுதும் துணிச்சல் திருமலை போன்றவர்களுக்கு எங்கிருந்து வருகிறது என்று கேள்வி எழுப்பினார். மேலும், "எஸ்.வி. சேகர் போன்ற பொதுவாழ்வில் உள்ள பொறுப்பான மனிதர்கள் பெண்களை இழிவு படுத்தும் ஒரு தரங்கெட்ட பதிவை இந்தியக் கொடியுடன் பகிர்வது தேசியக்கொடியையும், இந்திய இறையாண்மையையும் அவமானப்படுத்தும் செயல். இது பெண்களை போகப்பொருளாக இந்திய இறையாண்மை முன்னிறுத்துவதாக அமைந்து சமூக அழிவுக்கு வழிவகுக்கும். எனவே, இதைக் கேள்விகேட்காமல் கடந்து செல்ல முடியாது" என்றும் தெரிவித்தார். அறமற்ற செயலைக் கேள்விகேட்பதில் எதிர்ப்புகள் எழுந்தனவா என்ற கேள்விக்கு, "திருமலையின் நலம்விரும்பிகள் அவர் செயலின் குற்றத்தை விடுத்து, கேள்வி கேட்பவர்களை பிராமண எதிர்ப்பாளர்கள், திராவிடர் கழகத்தின் தூண்டுதல், கிறித்துவ மிஷனரிகளின் தூண்டுதல் என்றெல்லாம் வழக்கம்போல திசைதிருப்புகிறார்கள்" என்று சிரித்துக்கொண்டே பதிலளித்தார் உதயபாஸ்கர். நீதி கேட்டுப் போராடும் பெண்களுடன் துணைநிற்பது தனக்குப் பெருமையளிப்பதாகவும் தெரிவித்தார்.

  Tamil women protest outside the residence of Thirumalairajan in the USA

  சாண்டா கிளாரா நகரில் (City of Santa Clara) வாழும் திரு. கார்த்திகேயன், திருமலையின் பதிவு சமூகத்தில் ஆபத்தான எடுத்துக்காட்டாய் அமைகிறது என்றும், அது பெண்களை சமூக வாழ்வில் ஈடுபடமுடியாமல் தடுப்பதோடல்லாமல் அவர்களின் பொருளாதார முன்னேற்றத்தைப் பறிப்பதற்காகவும் அமைகிறது என்றும் கூறினார். பெண்கள் தங்களது கண்டன எதிர்ப்பைப் பதிவு செய்ய களமிறங்கியிருப்பதற்கு மகிழ்ச்சியுடன் தான் துணை நிற்பதாகவும் கூறினார்.

  மவுண்டன் ஹவுஸ் நகரில் வாழும் திரு இளஞ்சேரன், இதுபோன்ற தரங்கெட்ட பதிவுகள் மற்றும் பேச்சுக்கள் இந்தியப்பெண்களின் கொஞ்சநஞ்ச முன்னேற்றத்தையும் பின்னோக்கித் தள்ளிவிடும் என்றார். மேலும், "சமூக முன்னற்றத்தை பெண்களின் முன்னேற்றத்தை வைத்தே அளவிடமுடியும் என்றார் அண்ணல் அம்பேத்கர். ஆனால், திருமலையின் பதிவை சிலர் தாங்கிப்பிடிப்பதன் மூலம் பெண்களின் முன்னேற்றத்தைப் பின்னோக்கித் தள்ளுவதை மீட்டெடுக்க சில தலைமுறைகளாகும்" என்று சமூக அக்கறையுடன் கூறினார்.

  மேலும், கண்டனக் குழுவினர் தங்களின் போராட்டத்தின் நோக்கம் நீதியை நிலைநிறுத்த மட்டுமே என்றும், ஒரு குடும்பத்தின் மாண்பைக் கெடுக்கும் நோக்கத்தில் அல்ல என்றும் திருமலையின் மனைவிக்கும் மகளுக்கும் தெரிவித்துக் கொண்டனர். மேலும், ஒரு குடும்பத்தில் ஒரு ஆண் பெண்களின் மாண்பைக் கெடுக்கும்போது, அதை எதிர்த்துக் கேள்விகள் கேட்டுத் திருத்துவது அக்குடும்பத்தின் பெண்களது பொறுப்பு என்றும் கூறினர்.

  திருமலையால் நிறுவப்பட்ட பாரதி தமிழ்ச் சங்கத்தையும் இது தொடர்பாக அணுகப் போவதாகவும் கண்டனக் குழுவினர் தெரிவித்தனர். அவரின் இழிவான செயலுக்கு அச்சங்கம் தங்களது எதிர்ப்பையோ கண்டனத்தையோ தெரிவிக்காதது வியப்பளிக்கிறது என்றும் கூறினர்.

  English summary
  Tamil women protested outside the residence of NRI Thirumalairajan in the USA for writing ill of women journalists on social media which was later shared by S.Ve. Shekher.

  சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more