Kamal Haasan: தமிழை விட்டுக் கொடுத்து மன்னிப்பு கேட்காத கமல்ஹாசனை இன்னும் பிடிக்கிறது.. இணையவாசிகள் சப்போர்ட்!
சென்னை: கமல்ஹாசன் நடிப்பில் நாளை வெளியாகவுள்ள படம் தக் லைஃப். மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, அபிராமி, த்ரிஷா , நாசர், அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். ஏ.ஆர். ரகுமான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் பேசும்போது, தமிழில் இருந்து தான் கன்னடம் வந்தது என்று வரலாற்று ஆய்வாளர்கள் கூறிய கருத்தை கூறினார்.
ஆனால் இவரது கருத்துக்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியது. கர்நாடக மாநில முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர், கர்நாடக திரைப்பட சம்மேளன தலைவர், கன்னட அமைப்பினர் என பலரும் கமல்ஹாசனின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டால் தான் படம் ரிலீஸ் ஆகும் என்று தெரிவித்தார்கள். ஆனால் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க முடியாது. எனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று கூறினார். மேலும் அன்பு மன்னிப்பு கேட்காது என்றும் கூறினார்.
இப்படியான நிலையில் கர்நாடக உயர்நீதிமன்றமும் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் என மிரட்டல் தொனியில் காலக்கெடு விதித்தது. ஆனால் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கவில்லை. இப்படி இருக்கும்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த இணையவாசிகள் கமல்ஹாசனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதாவது, " கமல்ஹாசன் வரலாற்று உண்மையை பேசியுள்ளார். கன்னடர்கள் எதிர்ப்பு தெரிவித்து பார்த்தார்கள் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கவில்லை. அதேபோல் மிரட்டிப் பார்த்தார்கள் மன்னிப்பு கேட்கவில்லை.

தைரியம்: அரசியல்வாதிகளே கமல்ஹாசன் படம் ரிலீஸ் ஆகாது என்கிறார்கள் ஆனாலும் அவர் இறங்கி வரவில்லை. இன்னும், நீதி மன்றமே மிரட்டல் தொனியில் கமலஹாசனை மன்னிப்பு கேட்கச் சொல்லி கேட்கிறது, அதற்கும் கமல்ஹாசன் அசரவில்லை. கமல்ஹாசன் இந்த இடத்தில் மன்னிப்பு கேட்டால் அவரே தயாரித்து நடித்துள்ள தக் லைஃப் படம் கர்நாடகாவில் ரிலீஸ் ஆகும். கர்நாடகாவில் படம் அதிகபட்சமாக ரூபாய் 15 கோடிகள் வரை வசூலாகலாம். ஆனால் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்ற முடிவில் உறுதியாக இருக்க காரணம் ஒரு வரலாற்று உண்மையை மறுதலிப்பதற்கு சமம்.
கமலை இன்னும் பிடிக்கிறது: கமல், தனக்கு வரக்கூடிய பணத்தை நினைத்தால், மன்னிப்பு கேட்டிருக்க முடியும். கேட்கலாம் தான். ஆனால் அவர் பணத்தைக் காட்டிலும் தமிழ் மொழியின் மானத்தை, வரலாற்றை, உண்மையை பெரிதாக கருதுகிறார். ஏற்கனவே கமல்ஹாசனை மிகவும் பிடிக்கும் அவரது இந்த தமிழ் வீரம் அவரை மேலும் பிடிக்க வைக்கிறது. கொண்டாடவைக்கிறது" என்று பல கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

ரஜினி - சத்யராஜ்: 'துறவிக்கும் சொந்த ஊர் பற்று இருக்கும்' தமிழில் ஒரு பழமொழி உள்ளது. துறவிக்கே இருக்கும்போது சினிமாதான் தனது வாழ்க்கை, நான் ஒரு சினிமா விவசாயி என தன்னை சுயவிமர்சனம் செய்து கொள்ளும் கமல்ஹாசனுக்கு இருக்காதா என்ன? கர்நாடக அமைப்பினர் ரஜினிகாந்த் மற்றும் சத்யராஜை மன்னிப்பு கேட்க வைத்தது போல் கமலையும் மன்னிப்பு கேட்க வைத்து விடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் கமல்ஹாசன் முற்றிலும் மாறானவர் என்று அவர்களுக்கு இன்னும் புரியவில்லை என்றும் இணையவாசிகள் பேசி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











