Vijay: தமிழக முதல்வராக விஜய் 7ந் தேதி பதவியேற்கிறார்!
சென்னை: தமிழக வெற்றிக் கழக சட்டமன்றக் குழு தலைவராக அக்கட்சித் தலைவர் விஜய் தேர்வு செய்யப்பட்டார். சென்னை பனையூரில் நடந்த தவெக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் விஜய் முதல்வராக ஆதரவு அளித்து உறுதிமொழி பத்திரத்தில் எம்எல்ஏக்களிடம் கையெழுத்து பெறப்பட்டது. இதையடுத்து விஜய் மே 7ந் தேதி பதவியேற்க உள்ளதாக அவரோடு அமைச்சர்களும் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் எந்தக் கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டு 108 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளார். ஆனால் ஆட்சி அமைக்க தேவையான 118 இடங்களை பெறாததால் தமிழகத்தில் தற்போது தொங்கு சட்டமன்றம் அமையும் சூழல் உருவாகியுள்ளது.

தொங்கு சட்டமன்றம்: விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க இன்னும் 10 இடங்கள் தேவைப்படுவதால், மற்ற கட்சிகளின் ஆதரவை பெறும் நோக்கில் கட்சியின் நிர்வாகிகளுடன் பட்டினப்பாக்கத்தில் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார்.
53 இடங்களை கைப்பற்றியுள்ள அதிமுக, விஜய்க்கு ஆதரவு அளித்தால் எளிதாக ஆட்சி அமைக்க முடியும். ஆனால், பிரச்சாரத்தின் போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது விஜய் கடுமையாக விமர்சனம் செய்திருந்ததால், இந்த நிலையில் பழனிசாமி ஆதரவு அளிப்பாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. மற்றொரு பக்கம் காங்கிரஸ், விசிகே, இந்திய கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளின் ஆதரவை பெறவும் விஜய் முயற்சி மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
மே 7ந் தேதி பதவியேற்பு: இதற்கிடையில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் வரும் மே 7ஆம் தேதி முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதே நாளில் அமைச்சர்களும் பதவி ஏற்க உள்ளதாக கூறப்படுகிறது. புதிய அமைச்சரவையில் இடம் பெறவுள்ளவர்கள் குறித்து இன்று அறிவிப்பு வெளியிட உள்ளதாகவும், அதில் ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, சிடிஆர் நிர்மல் குமார், அருண்ராஜ் உள்ளிட்டோர் அமைச்சர் பதவியில் இடம் பெற வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications