லட்டு பாவங்கள் வீடியோவை நீக்கிவிட்டு மன்னிப்பு கேட்டா சரியா? பரிதாபங்கள் டீம் மீது பாஜக புகார்!
ஹைதராபாத்: ஆந்திரா மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவுமே தற்போது மிகவும் பரபரப்பாக பேசி வரும் விஷயம் திருப்பதி லட்டில் பசுவின் நெய்யுடன் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டுள்ளது என்பதுதான். இது அரசியல் தளத்தில் மட்டும் இல்லாமல் சினிமா, சமூகவலைதளங்கள் என அனைத்து இடத்திலும் எதிரொலித்துக் கொண்டு உள்ளது. குறிப்பாக மெய்யழகன் படத்தின் ப்ரீ- ரிலீஸ் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடைபெற்றபோது, நடிகர் கார்த்தி லட்டு குறித்து கேட்ட கேள்விக்கு பதில் அளித்ததும் சர்ச்சையாக மாறியது. அதேபோல் தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமாக உள்ள யூடூயூப் சேனல்களில் பரிதாபங்கள் சேனலும் ஒன்று. இந்த சேனலில் திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்டதை மையமாகக் கொண்டு நகைச்சுவையாக வீடியோ வெளியிடப்பட்டது. இந்த வீடியோ டெலிட் செய்யப்பட்ட பின்னர் தமிழ்நாடு பாஜக சார்பில் ஆந்திரா டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரத்தில் ஆந்திரா முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திருப்பதி லட்டு செய்ய பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டுக்கொழுப்பு, மீன் எண்ணெய் மற்றும் பன்றிக் கொழுப்பு போன்றவை கலக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார். இது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக பலரும் தங்களது அதிர்ச்சியையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தினர்.

இந்நிலையில், மெய்யழகன் படத்திற்கான புரமோஷனுக்காக ஆந்திராவுக்கு சென்றிருந்த நடிகர் கார்த்தியிடம் திடீரென தொகுப்பாளினி, சிறுத்தை படத்தில் வரும் கண்ணா லட்டு திங்க ஆசையா என்ற டெம்ப்ளேட்டை திரையில் காட்டி, லட்டு பற்றி கேள்வி எழுப்ப, அது மிகவும் சென்சிடிவான விஷயம் லட்டு பற்றி பேச மாட்டேன் எனக் கூறினார் நடிகர் கார்த்தி. பவன் கல்யாண் லட்டு பற்றி யாரும் வேடிக்கையாக கூட பேசக் கூடாது என எச்சரித்தார். இதையடுத்து, உடனடியாக கார்த்தி மன்னிப்பும் கோரினார். கார்த்தியின் மன்னிப்புக்கு பவன் கல்யாண் பதில் அளிக்க, பவன் கல்யாணின் பதிலுக்கு கார்த்தி மற்றும் சூர்யா என இருவரும் நன்றி தெரிவித்தனர்.

வீடியோ டெலிட்: இவையெல்லாம் ஒருபுறம் இருக்க, பரிதாபங்கள் யூடியூப் சேனலில் திருப்பதி லட்டு விவகாரம் தொடர்பாக நகைச்சுவையாக வீடியோ வெளியிடப்பட்டது. குறிப்பாக 15 நிமிடங்கள் கால அளவு கொண்ட அந்த வீடியோவில், ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாணை பங்கமாக கலாய்த்திருந்தனர். இந்நிலையில் அந்த வீடியோவை பரிதாபங்கள் யூடூயூப் சேனலில் இருந்து அந்த வீடியோவை டெலிட் செய்தனர். இதுமட்டும் இல்லாமல், அந்த வீடியோ டெலிட் செய்யப்பட்டது தொடர்பாகவும் ஒரு பதிவைப் பகிர்ந்தனர். அதாவது, " கடைசியாக பரிதாபங்கள் சேனலில் வெளிவந்த வீடியோ முழுக்க நகைச்சுவைகாக உருவாக்கப்பட்டது. யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் உருவாக்கப்படவில்லை. அதையும் மீறி சிலர் மனம் புண்பட்டிருந்தால், அதற்கு வருத்தம் தெரிவித்து சம்பந்தப்பட்ட காணொளியை நீக்கியுள்ளோம்.

புகார்: இதுபோல் வரும் காலங்களில் நடைபெறாது எனவும் தெரிவித்துக் கொள்கின்றோம்" என தெரிவித்தனர். பரிதாபங்கள் டீம் வீடியோவை டெலிட் செய்தது அவர்களை பின் தொடர்பவர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. இதுமட்டும் இல்லாமல், வீடியோவை இவர்கள் தரப்பில் டெலிட் செய்திருந்தாலும், அவர்களைப் பின் தொடருபவர்கள், அந்த வீடியோவை டவுன்லோட் செய்து இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். இப்படியான நிலையில், தமிழ்நாடு பாஜக சார்பில் ஆந்திரா மாநில டிஜிபியிடம், பரிதாபங்கள் யூடூயூப் சேனல் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், லட்டு பாவங்கள் என்ற பெயரில் வீடியோவை வெளியிட்டு நீக்கியிருந்தாலும், இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்திவிட்டதாக கூறி புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் வேகமாக உலா வருகின்றது.



Click it and Unblock the Notifications











