காலில் விழுந்த அண்ணாமலை.. நன்றி தெரிவித்த இளையராஜா.. ட்ரெண்டாகும் புகைப்படம்
சென்னை: இசைஞானி என்று ரசிகர்களால் போற்றப்படுபவர் இளையராஜா. சுமார் 1500 படங்களுக்கும் மேல் இசையமைத்திருக்கும் அவர் கடைசியாக விடுதலை 2 படத்துக்கு இசையமைத்திருந்தார். அடுத்ததாக சில படங்களுக்கும் இசையமைக்கவிருக்கிறார். மேலும் சிம்பொனி ஒன்றை உருவாக்கியிருக்கும் ராஜா அதனை மார்ச் எட்டாம் தேதி அப்பல்லோ அரங்கில் அரங்கேற்றவிருக்கிறார். அதனையொட்டி பலரும் அவரை நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்துவருகிறார்கள்.
தமிழ் திரையிசையில் இளையராஜாவின் பங்கு மிக பெரியது. அவர் வந்து இசையமைத்த பிறகு பாட்டு பாட பாமரனும் வாயை திறந்தான். அன்னக்கிளியில் அவர் இசையமைத்த ஒவ்வொரு பாடலும் முத்து ரகத்தில் இருப்பவை. அந்தப் பாடல்களை கேட்ட பிறகு அட இது என்ன ப்பா நம்ம ஊர் இசையால்ல இருக்கு என்று பலரும் ரசிக்க தொடங்கினார். எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு பிறகு தமிழ் திரையிசையின் முகத்தை பெரிதாக மாற்றிக்காட்டியவர் இளையராஜா மட்டும்தான் என்பது யாராலும் மறக்க முடியாதது.

தொட்டதெல்லாம் ஹிட்: இளையராஜா முதன்முதலாக அன்னக்கிளியில் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் மெகா ஹிட். அதற்கு பிறகு இளையராஜாவின் கோட்டையாக தமிழ் சினிமா திகழ்ந்தது. மற்ற இசையமைப்பாளர்கள் அந்த கோட்டைக்குள் நுழைந்தாலும் ராஜாவின் சாம்ராஜ்ஜியத்தை அசைத்துக்கூட பார்க்க முடியவில்லை. இளையராஜாவும் தனது ஒவ்வொரு இசையிலும் வெரைட்டி காண்பித்து ரசிகர்களை தனது தளபதியாக வைத்துக்கொண்டார்.
பண்டிகை காலம்: இளையராஜா போல் வேறு எந்த இசையமைப்பாளரும் பிஸியாக இருந்திருப்பார்களா என்பது சந்தேகமே. ஒருநாளைக்கு கிட்டத்தட்ட நான்கு படங்களுக்கு இசையமைத்த வரலாறு எல்லாம் உண்டு. பாடல்கள் மட்டுமின்றி ரீ ரெக்கார்டிங்கும் அதில் சேரும். அதேபோல் ஒரு பண்டிகைக்கு இளையராஜா இசையமைத்த படங்கள் மட்டுமே ஏராளம் வந்தது உண்டு. அந்த அளவுக்கு இளையராஜா பிஸியாக இருந்தார்.

எட்டாவது அதிசயம்: இளையராஜா இதுவரை 1500க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். ஒவ்வொரு பாடலின் ட்யூனும் இன்னொரு பாடலுக்கு ரிப்பீட் ஆகாமல் இதுவரை அவர் இசையமைத்துவருவது எட்டாவது அதிசயம் என்று அவரது ரசிகர்கள் கூறுவார்கள். இப்படி புகழின் உச்சியில் இருந்தாலும் இளையராஜா தலைக்கனம் பிடித்தவர் என்று ஒருதரப்பினர் கூறுவார்கள். அவர் மீது விமர்சனங்கள் பல வந்தாலும் எந்தவிதமான ரியாக்ட்டையும் அவர் செய்துகொண்டதே இல்லை.
வேலியன்ட் சிம்பொனி: இந்நிலையில் அவர் வேலியன்ட் என்கிற பெயரில் சிம்பொனி இசை ஒன்றை உருவாக்கியிருக்கிறார். அதனை மார்ச் எட்டாம் தேதி லண்டனில் இருக்கும் அப்பல்லோ அரங்கத்தில் நேரடி நிகழ்ச்சியாக அரங்கேற்ற இருக்கிறார். இளையராஜா சிம்பொனி உருவாக்கியிருப்பதை அவரது ரசிகர்கள் ஏகத்துக்கும் கொண்டாடிவருகிறார்கள்.
தொடர் சந்திப்புகள்: மேலும் சிம்பொனியை உருவாக்கியிருப்பதால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் சிவகார்த்திகேயன் ஆகியோர் இளையராஜாவை நேரில் சந்தித்து தங்களது வாழ்த்தினை தெரிவித்தார்கள். அந்தவகையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் இன்று இளையராஜாவை சந்தித்து வாழ்த்தி அவரிடம் ஆசி பெற்றார். அதுதொடர்பான புகைப்படங்களை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருக்கும் ராஜா, "உங்கள் ஆதரவான வாழ்த்துகளுக்கு எனது நன்றிகள்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











