இசைஞானிக்கு அரசு விழா.. முதலமைச்சரே அறிவிச்சுட்டாரு.. அசுர வேகத்தில் ஏற்பாடுகள்.. எப்போது தெரியுமா?
சென்னை: இசைஞானி இளையராஜா தமிழ் சினிமாவின் அடையாளமாக மட்டும் இல்லாமல், இந்திய இசையின் அடையாளமாக உலகம் முழுவதும் ஓங்கி நிற்கிறார். கடந்த 8ஆம் தேதி லண்டனின் சிம்பொனியை அரங்கேற்றம் செய்தார். இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது மட்டும் இல்லாமல், தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்தது. இந்நிலையில் இசைஞானிக்கு அரசு விழா நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
இசைஞானி இளையராஜா கடந்த 50 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவில் இசையமைப்பாளராக உள்ளார். இவர் இதுவரை 1500க்கும் அதிகமான படங்களுக்கு இசையமைத்து கொடுத்துள்ளார். இது மட்டும் இல்லாமல், தனது இசை இல்லாமல் யுவன் சங்கர் ராஜா இசையமைத்த படங்களில் பாடல்கள் பாடியும் உள்ளார். அவரது இசைக்கு, பாடலுக்கு , குரலுக்கு, பின்னணி இசைக்கு, பாடல்களுக்கு இடையே வரும் இண்டர்லூட்ஸ்களுக்கு என அவரது இசையை நொடிக்கு நொடி ரசிக்கும் ரசிகர்கள் ஏராளமாக உள்ளார்கள்.
தேசிய விருதுகள் இளையராஜா பல வென்றுள்ளார். பல சர்வதேச விருதுகள் அவரைத் தேடி வந்துள்ளது. 82 வயதை எட்டிய இளையராஜா இசையில் கடந்த ஆண்டில் மட்டும் தமிழில் மூன்று படங்கள் ரிலீஸ் ஆனது. இதில் ஜமா மற்றும் விடுதலை பாகம் இரண்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படியான நிலையில் இளையராஜா கடந்த ஆண்டே தான் ஒரு சிம்பொனியை உருவாக்கியுள்ளதாகவும், அதுவும் ஒரு மாதத்தில் எழுதி முடித்து உள்ளதாகவும் தெரிவித்தார். இது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது.

இசைஞானி: இளையராஜா சிம்பொனி எழுதியது மட்டும் இல்லாமல், அதை சர்வதேச அளவில் சிம்பொனியில் ஜாம்பவான்களாக உள்ள பல நாடுகளைச் சேர்ந்த இசைக் கலைஞர்களின் விமர்சனத்திற்கு அனுப்பியும் வைத்துள்ளார். அதனைப் பார்த்த அவர்கள் பெரும்பாலும், இந்த இசை கிளாசிக் வகையைச் சார்ந்தது, அதாவது, இந்த இசை 18ஆம் நூற்றாண்டு இசையைப் போல் உள்ளது என இளையராஜாவை பாராட்டினார்கள். இந்த சிம்பொனியை அரங்கேற்றம் செய்ய வேண்டும் என இளையராஜா தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு கடந்த 8ஆம் தேதி சிம்பொனியை லண்டனில் அரங்கேற்றம் செய்து முடித்தார்.
சிம்பொனி: இவரது சிம்பொனியை காண, பல நாடுகளில் இருந்து ரசிகர்கள் குழுமினார்கள். தமிழ்நாட்டில் இருந்து பெரும் படையே புறப்பட்டுச் சென்றது. இளையராஜா லண்டன் செல்வதற்கு முன்னர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உட்பட பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். சிம்பொனியை முடித்துவிட்டு வந்த இளையராஜாவை தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்றார்.
சென்னைக்கு வந்ததும் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த, இளையராஜா, பேசியது பலரது கவனத்தை ஈர்த்தது. அதாவது, “ யாரும் இந்த சிம்பொனி இசையை இணையத்தில் டவுன் லோட் செய்து கேட்க வேண்டாம். காரணம் அந்த இசையை அனைவரும் நேரில் கேட்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். எனக்கு 82 வயது ஆகிறது. நான் இப்போதுவரை எனது சொந்தக்காலில் நிற்கிறேன். இளைஞர்கள இதையெல்லாம் உதாரணமாகக் கொண்டு, தமிழ்நாட்டிற்கும் இந்தியாவுக்கும் பெருமை தேடித் தரவேண்டும் எனக் கூறினார். இவரது பேச்சுக்கு பலரும் பாராட்டுகளைக் குவித்தார்கள்.
இசைஞானி இளையராஜா சிம்பொனி செய்யச் செல்வதற்கு முன்னர், அவரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து, அவருக்கு நினைவுப்பரிசும் வழங்கினார். இளையராஜாவின் பிறந்த நாள் ஜூன் 3, ஆனால் அவர் அதே தினத்தில் கலைஞர் கருணாநிதிக்கும் பிறந்த நாள் என்பதால் தனது பிறந்த நாளை ஜூன் 2 ஆம் தேதிக்கு மாற்றிக் கொண்டார். காரணம், ஜுன் 3ஆம் தேதி அனைவரும் ஒருவருக்குத்தான் வாழ்த்து கூற வேண்டும் அது கலைஞர் கருணாநிதிக்குத்தான் வாழ்த்து கூறவேண்டும் என தீர்க்கமாக முடிவெடுத்தார். மேலும் இளையராஜாவுக்கு அவரது ரசிகர்கள் பல பட்டங்களை அதாவது பட்டப் பெயர்களை கௌரவமாக கொடுத்துள்ளார்கள். ஆனால் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கொடுத்த 'இசைஞானி' என்ற பட்டம் அவரது இசையைப் போலவே நிலைத்துவிட்டது. பலரும் இளையராஜாவை இசைஞானி என்றே அழைத்து வருகிறார்கள்.
இசைஞானி இளையராஜாவை கடந்த 2ஆம் தேதி நேரில் சந்தித்த பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் சிலாகித்து பகிர்ந்து கொண்டார். அதாவது, “ இசைஞானி இளையராஜாவுடன் இன்றைய காலைப் பொழுது 🎼🎼 ஆசியாவிலேயே யாரும் செய்யாத சாதனையாக, வரும் மார்ச் 8 அன்று இலண்டன் மாநகரில் சிம்பொனி அரங்கேற்றத்தை நிகழ்த்தவுள்ளார் நம் மனதிற்கினிய ராஜா அவர்கள். தமிழ்நாட்டின் பெருமிதமான இசைஞானியின் இச்சாதனை முயற்சியை வாழ்த்துவதற்காக இன்று நேரில் சென்றேன். அப்போது, தாம் கைப்பட எழுதிய Valiant symphony இசைக்குறிப்புகளை உற்சாகத்துடன் என்னிடம் காட்டி மகிழ்ந்தார். உலகத் தமிழர்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த இசை மூச்சான இளையராஜா அவர்களின் கணக்கற்ற சாதனைகளில் இந்தச் சாதனை ஒரு மணி மகுடம் எனத் திகழ வாழ்த்துகிறேன்” என பதிவிட்டுள்ளார்.
மேலும் அந்த சந்திப்பின்போது இசைஞானியிடம் பேசும்போது நான் காரில் செல்லும் போது உங்கள் பாடல்களைத்தான் அதிகம் கேட்டுக் கொண்டு செல்கிறேன். மறைந்த பாடகர் பாலசுப்ரமணியம் உங்கள் இசையில்தான் அதிக பாடலைப் பாடியுள்ளார். உங்கள் பாடல்களைத்தான் நான் பெரும்பாலும் கேட்டுக் கொண்டே உள்ளேன் என மகிழ்ச்சியோடு தெரிவித்தார். மேலும் இளையராஜா பேசும்போது, எனக்கு இசைஞானி என்ற பெயரை வைத்தது ஐயா தான் ( மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி) எத்தனையோ பேர் எத்தனையோ பெயர் வைத்தார்கள், ஆனால் ஐயா வைத்த பெயர்தான் நிலைத்துள்ளது என பூரிப்புடன் கூறினார். இது தொடர்பான வீடியோவையும் முதலமைச்சர் பகிர்ந்தார்.

அரசு விழா: இந்நிலையில் தனக்கு வாழ்த்து தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சரை நேரில் சென்று நன்றி தெரிவித்தார் இளையராஜா. அப்போது லண்டனில் நடைபெற்ற நிகழ்வுகள் குறித்து தனது சிம்பொனி குறித்து ஆர்வமாக பேசினார். இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், " இலண்டன் மாநகரில் சிம்பொனி சாதனை படைத்து திரும்பியுள்ள இசைஞானி இளையராஜா, அவரது பயணத்துக்கு வாழ்த்திய என்னை நேரில் சந்தித்து நன்றி கூறினார். அவரது அரை நூற்றாண்டு காலத் திரையிசைப் பயணத்தை அரசின் சார்பில் கொண்டாட முடிவெடுத்துள்ளோம்! ராஜாவின் இசை ராஜ்ஜியத்தில் வாழும் ரசிகர்களின் பங்கேற்போடு இந்த விழா சிறக்கும்!" என பதிவிட்டுள்ளார். இது இசைஞானி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது. மேலும் இந்த அரசு விழா இசைஞானியின் பிறந்த நாளான ஜூன் 2ஆம் தேதி நடைபெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என கூறப்படுகிறது.



Click it and Unblock the Notifications











