Ajith: கச்சிதமா இருக்கே! தமிழ்நாடு காங்கிரஸ் இன்ஸ்டாகிராமில் அஜித் - ராகுல்காந்தி.. வேற லெவல் போஸ்ட்
சென்னை: இந்திய அரசியல் தளத்தில் மிகவும் முக்கியமான அரசியல் தலைவர்களில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி மிகவும் முக்கியமானவர். பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக உள்ள ராகுல் காந்தியில் அரசியல் செயல்பாடுகள் கடந்த சில ஆண்டுகளாக இந்திய மக்கள் மத்தியில் பெரும் கவனிப்பினை ஈர்த்துள்ளது. இந்நிலையில், ராகுல் காந்தி புகைப்படத்தைப் பகிர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பதிவிட்டுள்ள பாடல் இணையவாசிகள் மத்தியிலும் அரசியல் தளத்திலும் கவனம் பெற்றுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னர், பாரத் ஜோடோ எனும் மிகவும் பிரமாண்டமான யாத்திரையை நடத்தினார். இதன் தாக்கம் மக்களவைத் தேர்தலில் எதிரொலித்தது. மேலும் மக்களவையில் இவரது உரையாடல்கள், கேள்விகள், இவரது கவன ஈர்ப்புகள், இவரது விவாதங்கள் அனைத்தும் இந்திய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.

கடந்த வாரத்தில், மாநிலங்களவையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்திய அரசியலைமைப்புச் சட்டத்தை நிறுவிய டாக்டர் அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அதாவது, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதற்கெடுத்தாலும் அம்பேத்கர் அம்பேத்கர் அம்பேத்கர் எனக் கூறிக்கொண்டு உள்ளார்கள். ஆனால் அம்பேத்கர் எனக் கூறுவதற்கு பதிலாக கடவுளின் பெயரைச் சொல்லியிருந்தால், சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும் என பேசினார்.
ராகுல் காந்தி: அமித்ஷாவின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்கட்சி மக்களவை உறுப்பினர்கள் அமித்ஷாவுக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். மேலும் பாராளுமன்ற வளாகத்தில் அம்பேத்கர் புகைப்படங்களைக் கையில் ஏந்தி, போராட்டம் நடத்தினார்கள். போராட்டம் நடத்தியவர்கள், அப்படியே பாராளுமன்றத்திற்குள் செல்ல முயற்சி செய்தபோது, அவர்களை பாஜக எம்.பிக்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் எம்.பிக்களுக்கு இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.
புகார்: இதில் ஒரு பாஜக எம்.பிக்கு காயம் ஏற்பட்டதாகவும், அவரை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்திதான் தாக்கினார் எனவும் கூறி, அவர்மீது காவல்துறையில் புகார் அளித்தார். இது பெரும் கவனத்தினைப் பெற்றது. இப்படியான நிலையில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் பலரும் ராகுல் காந்திக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இதுமட்டும் இல்லாமல், ராகுல் காந்தி மீது பொய் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது எனக் கூறினார்கள்.
அஜித்: இப்படியான நிலையில் இன்று அதாவது, டிசம்பர் 24ஆம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ராகுல் காந்தி புகைப்படத்தைப் பகிர்ந்து, அதற்கு அஜித்குமாரின் பில்லா 2 படத்தின் பாடலான, ”உனக்குள்ளே மிருகம் தூங்கிவிட நினைக்கும்” என்ற பாடலை பின்னணியில் சேர்த்துள்ளது. இது அஜித் ரசிகர்கள் மத்தியில் கவனத்தினைப் பெற்றுள்ளது. மேலும் சிலர், இந்தப் பதிவுக்கு ஃபையர் விட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











