ரூபாய் 250 வரை உயருதா திரைப்பட டிக்கெட் விலை? கோரிக்கைகளைக் கொட்டிய திரையரங்க உரிமையாளர்கள்
சென்னை: தமிழ்நாட்டில் திரைத்துறையை நம்பி நேரடியாகவும் மறைமுகமாகவும் பயன்பெறுபவர்கள் அதிகம் உள்ளனர். அதில் நேரடியாக பயன்பெறுபவர்களில் மிகவும் முக்கியமன இடத்தில் இருப்போர் என்றால் அந்த வரிசையில் திரையரங்க உரிமையாளர்களைக் கூறலாம். இந்நிலையில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் தரப்பில் இருந்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அதில் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுவது என்னவென்றால், டிக்கெட்டுகளின் விலை ரூபாய் 250க்கு உயர்த்துவதுதான். இது தொடர்பாக இந்த தொகுப்பில் விரிவாகக் காணலாம்.
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் அலோசனைக் கூட்டம் இன்று அதாவது செப்டம்பர் 24ஆம் தேதி, சென்னையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திரையரங்குகளில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என திரையரங்க உரிமையாளர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும், அண்டை மாநிலங்களில் நடைமுறையில் உள்ளதைப் போல், 24 மணி நேரமும் திரையரங்குகளில் படத்தை திரையிட அனுமதி அளிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் முன் வைக்கப்பட்டகோரிக்கைகள் யாதெனில்,

டிக்கெட் விலை: திரையரங்குகளில் பராமரிப்பு கட்டணத்தை அனுமதி கட்டணத்தில் இருந்து 10 சதவிகிதம் வசூலிக்க அனுமதி தர வேண்டும். மல்டி பிளக்ஸ் திரையரங்குகளுக்கு டிக்கெட் ஒன்றின் விலை ரூபாய் 250 வரையும் , ஏசி திரையரங்குகளுக்கு ரூபாய் 200 வரையும், ஏசி இல்லாத திரையரங்குகளுக்கு ரூபாய் 150 வரையும் என்று கட்டணம் நிர்ணயித்துக் கொடுக்க வேண்டும். அண்டை மாநிலங்களில் 24 மணி நேரமும் திரைப்படங்கள் திரையிட அனுமதி உள்ளது. அதேபோல தமிழ்நாட்டிலும் இதே போன்ற அனுமதி தர வேண்டும். திரையரங்குகளில் இத்தனை காட்சிதான் என்று கட்டுப்பாடு இல்லாமல் படங்களை திரையிட அனுமதி அளிக்க வேண்டும்.

மின் கட்டணம்: மேலும், ஆப்ரேட்டர் லைசன்ஸ்சிற்கு புதிய வழிமுறையை வகுத்து தந்தீர்கள். அது தெளிவாக இல்லாததால் அதன் மூலம் எந்த பலனும் நாங்கள் அடையவில்லை. எனவே, அதை மாற்றி நாங்கள் கேட்டது போல ஆபரேட்டர் லைசன்ஸ் தேவையில்லை அல்லது எளிய முறையில் ஆபரேட்டர் லைசன்ஸ் தரும்படி கோரிக்கை வைக்கிறோம். மால்களில் உள்ள திரையரங்குகளில் கமர்ஷியல் ஆக்டிவிட்டிக்கு அனுமதி வழங்கியது போல, மற்ற திரையரங்குகளுக்கும் கமர்ஷியல் ஆக்டிவிட்டிக்கு (படங்களின் புரோமோசன், தனிப்பட்ட பொருட்களின் புரோமோசன் போன்றவை)அனுமதி தர வேண்டும். மின்கட்டணத்தைப் பொறுத்தவரையில் திரையரங்குகள் எம்.எஸ்.எம்.இ யின் கீழ் வருவதால் அந்த விதிப்படி திரையரங்களுக்கு கட்டணம் வசூலிக்க வேண்டும்" என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

நஷ்டம்: மேலும், மேற்கண்ட கோரிக்கைகளை நீங்கள் நிறைவேற்றிக் கொடுத்தால், திரையரங்கிகள் நஷ்டமின்றி நடத்தமுடியும். நாங்கள் மிகவும் சிரமமான சூழ்நிலையில் உள்ளதால், இந்த கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும்படி நாங்கள் மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்" எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பீதி: ஏற்கனவே திரையரங்கில் படத்தின் கட்டணத்தைவிடவும் பாப்கார்ன் கட்டணம் அதிகம் இருப்பதாக பேச்சுகள் தொடர்ந்து நீடிக்கும் நிலையில், ஒரு படத்தின் டிக்கெட்டினை ரூபாய் 250க்கு உயர்த்திவிட்டால், பாப்கார்னின் விலை ரூபாய் 300 முதல் ரூபாய் 400 வரைக்கு விற்பனை செய்யப்படுமோ என பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











