பிகில் அதிகாலை சிறப்பு காட்சி.. தமிழக அரசு திட்டவட்ட அறிவிப்பு!
பிகில் படத்தின் அதிகாலை சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்கப்படாது என தமிழக அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
Recommended Video
சென்னை: பிகில் படத்தின் சிறப்பு காட்சி குறித்து தமிழக அரசு அதிரடி முடிவு எடுத்துள்ளது.
அட்லீ இயக்கத்தில் விஜய், நயன்தாரா, கதிர் உள்ளிட்டோர் நடித்துள்ள பிகில் திரைப்படம் நாளை ரிலீசாகிறது. இப்படத்தை எதிர்பார்த்து விஜய் ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள்.

பொதுவாக பெரிய ஹீரோக்களின் படங்களுக்கு அவர்களின் ரசிகர்களுக்காக ரிலீஸ் தினத்தன்று அதிகாலை சிறப்பு காட்சிகள் திரையிடப்படும். இது பல வருடங்களாக நடைமுறையில் இருந்து வருகிறது.
ஆனால் சமீபகாலமாக தியேட்டர் உரிமையாளர்களும், திரைப்பட தயாரிப்பாளர்களும் அதிகாலை சிறப்பு காட்சி என்ற பெயரில் அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்து, கொள்ளை லாபம் பார்ப்பதாக புகார் எழுந்தது. இதுகுறித்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றமும், தியேட்டர்களில் அதிகாலைக்காட்சிகள் கூடாது என உத்தரவிட்டது.
ஆனால் அவ்வப்போது பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது இந்த உத்தரவு மீறப்படுகிறது. இந்நிலையில் பிகில் படத்திற்காக அதிகாலை காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் பல தியேட்டர்களில் அதிகாலை சிறப்பு காட்சிக்கு முன்பதிவுகள் நடைபெற்றன.
இந்நிலையில் பிகில் மற்றும் கைதி படத்திற்கு அதிகாலை சிறப்பு காட்சிகள் கூடாது என தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அறிவித்துள்ளார். இதுகுறித்து டிவிட்டரில் அவர், "சிறப்புக் காட்சிகளை ரத்து செய்யக் கூறி அறிக்கை அனுப்பப்பட்டுவிட்டது. முன்பதிவு செய்தவர்களுக்கு பணத்தை திருப்பி வழங்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அதிக கட்டணம் வசூலிப்பது கட்டுப்படுத்தப்படும்", என தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் இந்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்கிய ரசிகர்கள், தங்கள் பணம் திரும்ப கிடைக்குமா எனும் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











