Chithha - அனைவரும் பார்க்க வேண்டிய படம்.. சித்தா படத்தை புகழ்ந்து தள்ளிய உதயநிதி ஸ்டாலின்
சென்னை: Chithha (சித்தா) சித்தார்த் நடித்த சித்தா படத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகராக வலம் வருபவர் சித்தார்த். இயக்குநர் ஆக வேண்டும் என்ற ஆசையோடு இருந்தவர் பாய்ஸ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இந்தியாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். ஆனால் படம் எதுவும் இதுவரை இயக்கவில்லை. தென்னிந்திய மொழிகள் மட்டுமின்றி ஹிந்தியிலும் நடித்திருக்கிறார் அவர்.

ஓபன் டாக்: சித்தார்த்தை பொறுத்தவரை தனக்கு மனதில் இருப்பதை அப்படியே பேசக்கூடியவர். குறிப்பாக அரசாங்கம் ஏதேனும் தவறு செய்தால் யாருக்கும் அஞ்சாமல் ட்வீட்டும் போடுவார்.அப்படி அவர் பதிவு செய்திருந்த பல ட்வீட்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கின்றன. ஆனால் சமீப காலமாக சமூக வலைதளங்களில் அமைதியாக இருந்துவருகிறார் சித்தார்த்.
டக்கரும் கவிழ்ந்தது: திறமையான நடிகர் என்று பெயர் எடுத்தாலும் இதுவரை பெரிய ஹிட் எதுவும் கொடுக்காமல் இருக்கிறார் சித்தார்த். அவரது நடிப்பில் கடைசியாக டக்கர் என்ற படம் வெளியானது. கார்த்திக் ஜி க்ரிஷ் இயக்கத்தில் சித்தார்த், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்தப் படத்தை சித்தார்த் ரொம்பவே எதிர்பார்த்திருந்தார். ஆனால் இந்தப் படமும் அவர் எதிர்பார்த்த வெற்றியை அவருக்கு கொடுக்கவில்லை. இதனையடுத்து இந்தியன் 2 படமாவது தனக்கு தேவையான வெற்றியை கொடுக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.

சித்தா: சூழல் இப்படி இருக்க அவர் சித்தா என்ற படத்தில் நடித்திருக்கிறார். படத்தை அருண்குமார் இயக்கியிருக்கிறார். இன்று எதிர்பார்ப்புக்கிடையே வெளியான படத்துக்கு ரசிகர்கள் தங்களது பெரும் ஆதரவை கொடுத்திருக்கின்றனர். குறிப்பாக சித்தார்த்தின் கரியரிலேயே இந்தப் படம்தான் பெஸ்ட் படமாக அமைந்துவிட்டது எனவும் ரசிகர்கள் கூறினர்.
பாராட்டு: இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சித்தா படத்தை வெகுவாக பாராட்டியிருக்கிறார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பெற்றோர்கள் - ஆசிரியர்கள் - மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் காண வேண்டிய சமூக பொறுப்புள்ள திரைப்படைப்பாக 'சித்தா' திரைப்படம் வெளியாகியுள்ளது.

பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் குறித்து உரக்கப் பேசுவது மட்டுமன்றி, அத்தகைய கொடுமைகளை களைவதற்கான தீர்வையும் இப்படம் முன் வைக்கிறது. சித்தா படக்குழுவினருக்கு என் வாழ்த்துகள்" என குறிப்பிட்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











