எதற்கும் துணிந்தவன் படத்தைத் திரையிடக்கூடாதென பாமக, வன்னியர் சங்கம் மிரட்டல் - தமுஎகச கண்டனம்!
சென்னை: சூர்யாவின் ஜெய்பீம் திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிகள் வன்னியர் சங்கத்துக்கு எதிராக இருந்ததாக பாமகவினர் கண்டனம் தெரிவித்து பெரும் பிரச்சனையை கிளப்பினர்.
அதற்கு நடிகர் சூர்யாவும் கடிதம் வெளியிட்டு விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில், சூர்யா நடிப்பில் வரும் மார்ச் 10ம் தேதி வெளியாக உள்ள எதற்கும் துணிந்தவன் படத்தை திரையரங்குகளில் வெளியிட விடாமல் பாமகவினர் சதி செய்வதாக குற்றச்சாட்டுகள் கிளம்பி உள்ளன.
பல திரையரங்குகளில் மீண்டும் வலிமை படத்தின் காட்சிகளை அதிகரித்து, எதற்கும் துணிந்தவன் படத்திற்கு காட்சிகளை மறுத்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமுஎகச கண்டனம்
நடிகர் சூர்யா உள்ளிட்டவர்கள் நடித்துள்ள "எதற்கும் துணிந்தவன்" திரைப்படம் 10.03.2022ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் நிலையில், இப்படத்தை திரையிடக்கூடாதென பாட்டாளி மக்கள் கட்சியினரும் வன்னியர் சங்கத்தினரும் திரையரங்க உரிமையாளர்களை கடிதம் மூலம் மிரட்டிவருவதற்கு தமுஎகச (தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்) கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது.

ஜெய்பீம் சர்ச்சை
2021 நவம்பரில் வெளியான ஜெய்பீம் படம், வன்னியர்களை அவமதித்துவிட்டதாகவும் அதற்காக அப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரும் கதாநாயகருமான சூர்யா மன்னிப்பு கேட்கும் வரை அவர் தொடர்புடைய எந்தவொரு படத்தையும் திரையிட அனுமதிக்கமாட்டோம் என்றும் அப்போது பாமகவினர் மிரட்டல் விடுத்திருந்தனர்.

மிரட்டல்
அந்த மிரட்டலின் தொடர்ச்சியில்தான் இப்போது எதற்கும் துணிந்தவன் படத்தை திரையிடக்கூடாதென அக்கட்சியினரும் வன்னிய சங்கத்தினரும் மிரட்டிக் கொண்டுள்ளனர். தமிழகத்தில் பதற்றத்தை உருவாக்க முயற்சிக்கும் இவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுத்து கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்திற்கு இவர்களால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலைக் களைவதற்கும், மிரட்டலுக்குப் பணியாமல் படத்தை வெளியிடுவதற்கு உகந்தச் சூழலை உருவாக்குவதற்கும் தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும். பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தின் பெயரால் விடுக்கப்பட்டுள்ள இம்மிரட்டலுக்கு எதிராக குரலெழுப்புமாறு கருத்துரிமையில் நம்பிக்கையுள்ள யாவரையும் தமுஎகச கேட்டுக்கொள்கிறது. இப்படிக்கு, மதுக்கூர் இராமலிங்கம், மாநிலத்தலைவர் (பொ) ஆதவன் தீட்சண்யா, பொதுச்செயலாளர் என தமுஎகச சூர்யாவுக்கு ஆதரவாக கடிதம் எழுதி பாமகவினருக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

திடிரென அதிகரிப்பு
வலிமை திரைப்படம் திரையரங்குகளில் நன்றாக ஓடிக் கொண்டிருப்பதால், இப்போதைக்கு அந்த படத்தை எடுக்க மாட்டோம் என்றும், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்திற்கு காட்சிகளை ஒதுக்க முடியவில்லை என்றும் பல தியேட்டர் ஓனர்கள் ட்வீட் போட்டு வருவதாக சமூக வலைதளங்களில் பெரிய பரபரப்பே கிளம்பி இருக்கிறது.

சூர்யா ரசிகர்கள் அப்செட்
சூரரைப் போற்று, ஜெய்பீம் திரைப்படங்கள் தியேட்டருக்கு வராமல் ஒடிடியில் வெளியான நிலையில், பாண்டிராஜ் இயக்கத்தில் பக்கா கமர்ஷியல் என்டர்டெயினராகவும் நல்ல கருத்தை உள்புகுத்தி வைத்திருக்கும் எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தை தியேட்டரில் பார்க்க நினைத்த சூர்யா ரசிகர்களுக்கு இந்த பிரச்சனை பெரிய அப்செட்டை ஏற்படுத்தி உள்ளது. என்ன ஆனாலும், சூர்யாவுக்கு துணையாக நாங்க இருப்போம் என ஆதரவு குரல்களை எழுப்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











