வினோத்குமாரை திட்டமிட்டு கொன்று விட்டார்கள் அல்போன்சா குடும்பத்தினர்-கமிஷனரிடம் புகார்
இதுதொடர்பாக அவர் கொடுத்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:
எனது மகன் வினோத்குமார் என்ற சாய் ஆறு வருடத்துக்கு முன்பு சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினான். மைத்துனர் பாலு வீட்டில் தங்கி சினிமா சம்பந்தப்பட்ட பயிற்சியும் எடுத்தான். கவசம் என்ற படத்தில் நாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த படம் ரிலீசுக்கு காத்து இருக்கிறது.
நடன திறமையை வளர்த்துக்கொள்வதற்காக நடன இயக்குனர் ராபர்ட் நடன பள்ளிக்கு சென்றான். பிறகு இருவரும் நண்பர்களாக பழக ஆரம்பித்தனர். கடந்த நான்கு மாதத்துக்கு முன்பு சியாமளா அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள ராபர்ட் வீட்டில் தங்கி இருந்தபடியே சினிமா பணிகளில் ஈடுபட்டு வந்தான்.
ராபர்ட் ஒரு பாடல் ஆல்பம் தயாரிப்பதாகவும் அதில் நடிக்க பணம் கேட்பதாகவும் சொல்லி வினோத்குமார் ரூ.2 லட்சம் என்னிடம் வாங்கி கொண்டு கொடுத்தான். ராபர்ட் தனது நண்பர்களுடன் சேர்ந்து சங்கு என்ற படத்தை தயாரிக்க திட்டமிட்டார். அதன் தயாரிப்பு செலவாக என் மகனிடம் ரூ.50 லட்சம் கேட்டுள்ளனர். என் மகன் மறுத்துவிட்டான். அந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க வைக்கிறேன் என்று சொல்லி என் மகனிடம் தொடர்ந்து ராபர்ட் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.
அதே குடியிருப்பில் எதிர்வீட்டில் குடியிருந்த ராபர்ட்டின் அக்காள் நடிகை அல்போன்சாவை என் மகனுக்கு அறிமுகம் செய்து வைத்து அவர் மூலமும் பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். சம்பவம் நடந்த அன்று இரவு என் மகன் என்னுடைய மனைவிக்கு போனில் பேசியுள்ளான். அப்போது, தான் நலமாக இருப்பதாக கூறியதுடன் மருந்து, மாத்திரைகள் ஒழுங்காக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தாய்க்கு அறிவுரையும் கூறி உள்ளான்.
இந்த நிலையில் இரவு 1 மணி அளவில் வினோத்குமார் செல்போனில் இருந்து நடிகை அல்போன்சா என்னிடம் பேசி உங்கள் மகன் தற்கொலை செய்து கொண்டான் என்று கூறிவிட்டு போனை துண்டித்துவிட்டார்.
நாங்கள் பதறியடித்து ஓடி வந்தோம். என் மகன் உடல் தரை தளத்தில் கார் பார்க்கிங்கில் கிடத்தி வைக்கப்பட்டு இருந்தது. அவன் மூக்கிலும் வாயிலும் ரத்தம் இருந்தது. இரவு ஏழரை மணிக்கு எங்களுடன் பேசிய மகன் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பு இல்லை. இது திட்டமிட்ட கொலையாகும்.
என் மகனின் அறைக்கு சென்று பார்த்தபோது சுவரில் ரத்தக்கறை படிந்திருந்தது. அதற்கான புகைப்படத்தையும் மனுவுடன் இணைத்துள்ளேன். என் மகன் சாவில் மர்மம் உள்ளது. அல்போன்சா அவரது சகோதரர் ராபர்ட், தாய் ஓமனா ஆகியோர் மீது எனக்கு சந்தேகம் உள்ளது. அவர்களே கொலை செய்து தூக்கில் தொங்க விட்டுள்ளனர் என்று பாண்டியன் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications












