அதுக்குள்ள ஷூட்டிங் ஓவர்.. கிறிஸ்துமஸ் அன்று வெளியாகிறது த்ரிஷயம் 2 டீசர்!
கொச்சி: த்ரிஷயம் 2 படத்தின் டீசர் கிறிஸ்துமஸ் அன்று வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
மலையாளத்தில் 2013 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம், த்ரிஷ்யம்.
இதில் மோகன்லால், மீனா, எஸ்தர் அனில், ஆஷா சரத் உள்பட பலர் நடித்திருந்தனர்.

கமல்ஹாசன்
ஜீத்து ஜோசப் இயக்கி இருந்த இந்த படம், மலையாளத்தில் அதிக வசூல் படம் என்று கூறப்பட்டது. தமிழில் கமல்ஹாசன், கவுதமி, ஆஷா சரத், நிவேதா தாமஸ் நடிப்பில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் ஆனது. இரண்டு பெண் குழந்தைகளின் தந்தையாக கமல்ஹாசன் நடித்து இருந்தார். இதையும் ஜீத்து ஜோசப் இயக்கி இருந்தார்.

சீனாவிலும் ரீமேக்
ஜிப்ரான் இசை அமைத்திருந்த இந்த படம் தமிழிலும் சூப்பர் ஹிட்டானது. இது தெலுங்கில் வெங்கடேஷ் நடிப்பிலும் கன்னடத்தில் ரவிச்சந்திரன் நடிப்பிலும், இந்தியில் அஜய்தேவ்கன் நடிப்பிலும் ரீமேக் ஆகி வரவேற்பைப் பெற்றது. இந்தப் படம், சீனாவிலும் ரீமேக்காகி சாதனைப் படைத்தது. அங்கு, ஷீப் வித்தவுட் அ ஷெப்பர்ட் என்ற பெயரில் உருவாகி ஹிட்டானது.

ஆதாரங்கள்
தனது மூத்த மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் போலீஸ் அதிகாரி மகனை, மகளும், மனைவியும் கொல்கிறார்கள். அவன் உடலையும் கொலை செய்ததற்கான ஆதாரங்களையும் கமல்ஹாசன் மறைத்து, இருவரையும் போலீஸ் பிடியில் இருந்து காப்பாற்றுவது கதை. படம் ரிலீஸான நேரத்தில் இதன் அடுத்தப் பாகம் உருவாவது பற்றி கூறியிருந்தார் ஜீத்து ஜோசப்.

இரண்டாம் பாகம்
இந்நிலையில், இதன் இரண்டாம் பாகம் த்ரிஷயம் 2 என்ற பெயரில் இப்போது உருவாகி உள்ளது. கொரோனா தளர்வுகளுக்குப் பிறகு செப்டம்பர் மாதம் இதன் ஷூட்டிங் தொடங்கியது. இந்நிலையில் அதற்குள் படத்தை முடித்துவிட்டனர். போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்துவருகிறது.
Recommended Video

கிறிஸ்துமஸ்
முதல் பாகத்தில் நடித்த மோகன்லால், மீனா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் டீசர் கிறிஸ்துமஸ் அன்று வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மோகன்லால், ஜீத்து ஜோசப் இயக்கும் ராம் படத்தில் நடிக்க இருக்கிறார். அதன் ஷூட்டிங் கொரோனா லாக்டவுன் காரணமாக தடைபட்டு இருந்தது.


Click it and Unblock the Notifications











