பூஜ்ஜியத்தில் ஆரம்பித்த வாழ்க்கை.. திருமண நாளில் மணிமேகலை உருக்கம்!
சென்னை: சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமான மணிமேகலை, விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அந்த நிகழ்ச்சியில் பிரியங்காவுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அதில் இருந்து வெளியேறிய மணிமேகலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை ஷேர் செய்துள்ளார்.

தொகுப்பாளினியான மணிமேகலை நடன கலைஞரான ஹுசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணத்திற்கு பெற்றோர்களிடம் கடும் எதிர்ப்பு இருந்த போதும், எதிர்ப்பை மீறி நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்தை தொடர்ந்து, சன் தொலைக்காட்சியில் இருந்து விலகி விஜய் தொலைக்காட்சியில் மிஸ்டர் அண்ட் மிஸ்ஸஸ் சின்னத்திரையில் கணவருடன் கலந்து கொண்டு ரன்னரப்பாக வந்தார்

தொகுப்பாளினி மணிமேகலை: இதைத்தொடர்ந்து, கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி சீசன் 1ல் கோமாளியாக கலந்து கொண்டார். அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர், கடைசியாக குக் வித் கோமாளி சீசன் 5ல் தொகுப்பாளினியாக இருந்தார். அப்போது, போட்டியாளராக இருந்த பிரியங்கா, குக் வேலையை செய்யாமல், தொகுப்பாளினி போல் செயல்படுவதாகவும்,தனது அதிகாரத்தை பயன்படுத்தி, தன்னுடைய வேலையில் மூக்கை நுழைப்பதாகவும் குற்றம்சாட்டி இருந்தார். இது இணையத்தில் மிகப்பெரிய அளவில் பேசுபொருளான நிலையில்,பலரும் மணிமேகலைக்கு ஆதரவு தெரிவித்தனர்.

உருக்கமான பதிவு: இந்நிலையில், மணிமேகலை தனது இன்ஸ்டாகிராமில் மகிழ்ச்சியான பதிவு ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதில், சென்னையில் அபார்ட்மென்ட் ஒன்றை வாங்கி புதுமனை புகுவிழா நடத்தி உள்ளார். அதன் போட்டோவை ஷேர் செய்துள்ள அவர், எங்கள் திருமண நாளிலிருந்து எங்களின் வாழ்க்கை பயணம் பற்றி உங்களுக்கு தெரியும், திருமணமான முதல் வருடத்தில் 10 ஆயிரம் ரூபாய்க்கு வாடகை கொடுத்து ஒரு வீட்டில் வசித்து வந்தார். அந்நாளில் இருந்து சென்னையின் ஒரு அபார்ட்மெண்ட்டை சொந்தமாக வாங்கும் எங்களின் மிகப்பெரிய ஆசை நிறைவேறி உள்ளது.

பூஜ்ஜியத்தில் ஆரம்பித்த வாழ்க்கை: எங்களின் வாழ்க்கை பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கி, யாருடைய ஆதரவும் இல்லாமல் வாழ்க்கையை ஆரம்பித்தோம். ஆனால், உண்மையில் அது தான் எங்களை வலிமையாக்கியது மற்றும் நம்பிக்கையை அளித்தது. நாங்கள் எங்கள் திருமண நாளைக் கொண்டாடுகிறோம், அதே நாளில் எங்கள் மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். 2021 இல் இந்த வீட்டை முன்பதிவு செய்தேன், தற்போது அதன் பணிகள் முடிவடைந்து நேற்று வீட்டில் குடியேறி உள்ளோம். நாங்கள் கனவை நனவாக்க கடினமாக உழைத்தோம் & கடவுள் இந்த வாழ்நாள் பரிசை எங்களுக்கு கொடுத்து இருக்கிறார் நன்றி என மிகவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.



Click it and Unblock the Notifications











