மூச்சு திணறல் ஏற்பட்டு ‘பஞ்ச தந்திர‘ பட நடிகர் கைகால சத்தியநாராயணன் காலமானார்..பதறிய சிம்ரன்!
ஆந்திரா : தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான கைகால சத்தியநாராயணன் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். அவருக்கு வயது 87. இவரது மறைவு திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர்,அரசியல்வாதி என பன்முகத் திறமைக் கொண்ட கைகால சத்தியநாராயணன் ஜூலை 25ந் தேதி ஆந்திராவில் பிறந்தார்.
நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட இவர், சிப்பாய் கூத்துரு என்றத் திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகம் ஆனார்.

கைகால சத்தியநாராயணன்
கம்பீரமான தோற்றத்தைக் கொண்ட கைகால சத்தியநாராயணனுக்கு தெலுங்கில் அடுத்தடுத்த வாய்ப்புகள் வந்தன. இவர் சட்டேன்று பார்ப்பதற்கு என். டி. ராமராவ் போன்று இருந்ததால் தெலுங்கு ஆடியன்ஸ் மனதில் விரைவாக பதிந்தார். அண்ணன்,தம்பி,அப்பா என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும், அந்த கேரக்டரில் பின்னியெடுப்பது இவருடைய ஸ்பெஷல்.

எமதர்ம ராஜா வேடத்தில்
என்.டி.ஆர் நடித்திருந்த யமகோலா படத்தில் எமதர்ம ராஜா வேடத்தில் நடித்து அசத்தி இருந்தார். அவருடை கம்பீரமான வாட்டசாட்டமான உடல் வாகுக்கு இந்த கதாபாத்திரம் பக்காவாக பொருந்தி இருந்தது. திரைத்துறையில் பல விருதுகளை பெற்றுள்ள இவர் இதுவரை 750க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

சின்ன கல்லு பெத்த லாபம்
கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான பஞ்ச தந்திரம் படத்தில் ஸ்ரீமனின் மாமனாராக நடித்திருந்தார். அந்த படத்தில், 'சின்ன கல்லு பெத்த லாபம்' என்று இவர் பேசும் வசனம் இன்று வரை மக்களிடையே டிரெண்டிங்காகவே உள்ளது. இந்த படத்தில் ஏராளமான காட்சிகளில் கைகால சத்தியநாராயணன் நடித்திருப்பார்.

உயிர் பிரிந்தது
இந்நிலையில், கைகால சத்தியநாராயணன் இன்று மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்தார். அவருக்கு வயது 87. இவருக்கு சில நாட்களுக்கு முன்னர் மூச்சு திணறல் ஏற்பட்டதை அடுத்து, மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற வந்தார்.அதன் பின் உடல்நிலை தேறியதால், நேற்று முன் தினம் வீடு திருப்பின்னர்.

ரசிகர்கள் இரங்கல்
இதையடுத்து, அவருக்கு இன்று மீண்டும் மூச்சு திணறல் ஏற்பட்டதால், ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை 11 மணியளவில் உயிரிழந்தார். இவரது உடல் பிலிம் நகரில் உள்ள அவரின் இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவரது மறைவுக்கு பல பிரபல நடிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மறைந்த நடிகர் கைகால சத்தியநாராயணன் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

பதறிய சிம்ரன்
பஞ்சதந்திரம் படத்தில் இவருடன் இணைந்து நடித்த நடிகை சிம்ரன் இவரது மறைவுக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், கைகால சத்யநாராயணா அவர்களின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் அன்பானவர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். ஓம் சாந்தி என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











