தெலுங்கில் ஜூனியர் பாலகிருஷ்ணாவாக கலக்கிய சிறுவன்.. டெங்குவால் திடீர் மரணம்.. சோகத்தில் திரையுலகம்!
தெலுங்கு ரியாலிட்டி ஷோக்களில் ஜூனியர் பாலகிருஷ்ணாவாக கலக்கி வந்த சிறுவன் கோகுல் சாய் கிருஷ்ணா திடீரென மரணமடைந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத்: தெலுங்கு தொலைக்காட்சிகளில் கலக்கி வந்த குழந்தை நட்சத்திரம் கோகுல் சாய் கிருஷ்ணா டெங்கு காய்ச்சல் பாதிப்பால் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்ட மதனப்பள்ளி எனும் ஊரை சேர்ந்த தம்பதி யோகேந்திர - சுமஞ்சலி. இவர்களின் மகன் கோகுல் சாய் கிருஷ்ணா ஆந்திரா முழுவதும் மிகப் பிரபலம்.
தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்ற கோகுல் சாய், தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவை அப்படியே இமிடேட் செய்து கலக்குவான். எனவே அவனை ஜூனியர் பாலகிருஷ்ணா என்று தான் அனைவரும் செல்லமாக அழைப்பர்.

டெங்கு காய்ச்சல்
கோகுல் சாய்க்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. மதனப்பள்ளியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கோகுல் சாய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று அவனது உடல்நிலை மோசமானதை அடுத்து, கோகுலை ஆம்புலன்ஸ் மூலம் பெங்களூருவுக்கு அழைத்து சென்றனர்.
வழியிலேயே மரணம்
ஆனால் பெங்களூரு சென்றடையும் முன்பே கோகுல் மரணமடைந்தான். இந்த செய்தி அவனது பெற்றோர் மட்டுமல்லாமல் ஆந்திர மாநில மக்களையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

பாலகிருஷ்ணா இரங்கல்
கோகுல் மரணத்தால் மிகவும் மனமுடைந்து போகியிருக்கிறார் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா. கோகுலின் இறப்புக்காக இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ள அவர், " ரசிகர்களைவிட எனக்கு வேறு எதுவும் பெரிதில்லை. என்னுடைய தீவிர ரசிகனான கோகுலின் மரணம் என் இதயத்தை நொறுக்கிவிட்டது. என்னை மிகவும் கவர்ந்தவன் கோகுல். என்னை போலவே இருக்கும் அவனுடைய வசன உச்சரிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும்", என தெரிவித்துள்ளார்.
ரங்கஸ்தளம் அனுசயா
இதேபோல், ரங்கஸ்தளம் பட நடிகை அனுசயா பரத்வாஜும் கோகுலின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். "உன்னை எப்போதும் நேசித்துக்கொண்டே இருப்பேன் கோகுல். பெற்றோர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உனது பெற்றோர் தான் முன்னுதாரணம். மிஸ் யூ கோகுல்", என அனுசயா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











