மனநிலை பாதிக்கப்பட்ட நடிகை.. 2 முறை தற்கொலை முயற்சி.. அப்பாவே கொடுத்த புகார்!
ஹைதராபாத்: தெலுங்கு நடிகை கல்பிகா கணேஷின் சமீபத்திய நடவடிக்கைகள் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகையாக உள்ள இவர் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்கிறார். குறிப்பாக அடிதடி கேசில் தான் அதிகம் சிக்கிக் கொள்கிறார். இந்நிலையில் அவரது தந்தையே நடிகை கல்பிகா கணேஷ் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரிவித்துள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வளர்ந்து வரும் நடிகையான கல்பிகா கணேஷ் ஹைதராபாத்தில் உள்ள பப் மற்றும் ரிசார்ட்டில் அவர் ஏற்படுத்திய பிரச்சனைகள், காவல்துறை வழக்குகள் வரை சென்று பெரிய பிரச்னையாக மாறியது. கடந்த மாதம், தனது பிறந்தநாளை கொண்டாட ஹைதராபாத்தில் உள்ள ஒரு பப்பிற்கு நண்பர்களுடன் சென்ற கல்பிகா கணேஷ், அங்கு ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அடிதடியில் இறங்கிவிட்டார். பப்பில் தாமதமாக பில் செலுத்திய பிறகு, இலவச சீஸ் கேக் வழங்க மறுத்ததாக கூறி, பப் ஊழியர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், பொருட்களை வீசியதாக பப் நிர்வாகம் புகார் அளித்தது.
இதையடுத்து, கச்சி பௌலி காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த பிரச்னை பெரிய அளவில் பேசப்பட்டுக் கொண்டு இருக்கும்போதே, இன்ஸ்டாகிராமில் தன்னை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கீர்த்தனா என்ற பெண், சைபராபாத் காவல் துறையிடம் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில், ஆன்லைன் துன்புறுத்தல் பிரிவுகளின் கீழ் கல்பிகா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்த இரு வழக்குகளிலும் கைது நடவடிக்கையை தடுக்கக் கோரி, கல்பிகா தெலுங்கானா உயர் நீதிமன்றத்தை அணுகினார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், அவரை கைது செய்ய வேண்டாம் என காவல்துறைக்கு உத்தரவிட்டது.

கல்பிகா தந்தை வேதனை: இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு ஹைதராபாத் மொய்னாபாத்தில் உள்ள ஒரு ரிசார்ட்டில், கல்பிகா மீண்டும் பிரச்சனையைக் கிளப்பியுள்ளார். அதாவது ரிசார்ட் ஊழியர்களிடம் சிகரெட் கேட்டு, அவர்கள் மறுத்ததால் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும், வைஃபை வசதி இல்லாததால் வாடகை கார் பதிவு செய்ய முடியவில்லை எனக் கூறி, மெனு கார்டு மற்றும் சாவிகளை வீசியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக, கல்பிகாவின் தந்தை , கல்பிகா குறித்து கூறியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மனநலக் குறைபாடு: அதாவது, " தனது மகள் மனநலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இரு முறை தற்கொலைக்கு முயன்று மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவித்தார். ஆனால், அங்கிருந்து தப்பித்த அவர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளை நிறுத்திவிட்டார் என்றும் கூறினார். மன உளைச்சலால் தொடர்ந்து பிரச்சனைகளை ஏற்படுத்துவதாகவும், அவரை மீண்டும் மறுவாழ்வு மையத்தில் சேர்க்க வேண்டும் எனவும் காவல்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளார். கல்பிகாவின் தந்தை இவ்வாறு கூறியதற்குப் பின்னர், கல்பிகா கணேஷின் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் மனநலப் பிரச்சனைகள் குறித்து ரசிகர்கள் மத்தியில் பேச்சுகள் அடிபட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











