கல்லீரல் பிரச்சினை.. 39 வயது பிரபல காமெடி நடிகர் திடீர் மரணம்.. சோகத்தில் ரசிகர்கள்!
பிரபல தெலுங்கு காமெடி நடிகர் வேணு மாதவ் ஹைதராபாத்தில் இன்று மதியம் உயிரிழந்தார்.
சென்னை: தெலுங்கு சினிமாவில் கொடிக்கட்டி பறந்த காமெடி நடிகர் வேணு மாதவ் உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.
கடந்த 1996ம் ஆண்டு வெளியான 'சம்பிரதாயம்' எனும் படத்தின் மூலம் காமெடியனாக அறிமுகமானவர் வேணு மாதவ் (39). அடிப்படையில் மிமிக்ரி கலைஞரான வேணு மாதவ், இதுவரை சுமார் 170 தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.
மூன்று வருடங்களுக்கு முன்னர் கல்லீரல் பிரச்சினையினால் பாதிக்கப்பட்ட வேணு மாதவ் அதன் பிறகு படங்களில் நடிக்கவில்லை. அவர் கடைசியாக நடித்த படம், கடந்த 2016ம் ஆண்டு வெளிவந்த டாக்டர் பரமானந்தய்யா ஸ்டூடண்ட்ஸ்.

காமெடி மன்னர்
வேணு மாவின் காமெடிக்கு தெலுங்கு மக்கள் அடிமை என்றே சொல்லலாம். நடித்த படங்களில் எல்லாம் மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர் அவர். தமிழ் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு வடிவேலு எப்படியோ, அப்படித்தான் தெலுங்கு மீம்ஸ் கிரியேட்டகளுக்கு வேணு மாதவ்.

அரசியல் ஆர்வம்
வேணு மாதவ் அரசியல் ஆர்வமும் கொண்டிருந்தார். கடந்த டிசம்பர் மாதம், தெலங்கானாவின் கோடாட் தொகுதியிலிருந்து தேர்தலில் போட்டியிட வேணு மாதவ் ஆர்வம் காட்டியிருந்தார். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை வேணு மாதவின் உடல் நிலை கவலைக்கிடமானது. இதையடுத்து அவர் ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை
கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியது குறித்து ஆலோசிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று மதியம் 12 மணியளவில் வேணு மாதவ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வேணு மாதவ்வின் மறைவுக்கு தெலுங்கு சினிமா ரசிர்கள், திரையுலகினர் மற்றும் அவரது குடும்பத்தினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ரசிகர்கள் சோகம்
மறைந்த நடிகர் வேணு மாதவிற்கு 39 வயது தான் ஆகிறது. இத்தனை இளம் வயதில் பலரையும் சிரிக்க வைத்து வேடிக்கை பார்த்த வேணு மாதவின் மறைவு, அவருக்கு நெருக்கமானவர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது சினிமாக்களின் வழியே மக்களை சிரிக்க வைத்த அவர், இன்று அதே ரசிகர்களை அழ வைத்துவிட்டார்.


Click it and Unblock the Notifications











