கிடுக்கிப்பிடி போட்ட தெலுங்கு திரையுலகம்..அநாவசிய செலவுகளை நடிகர் நடிகைகளே ஏற்க வேண்டும் என முடிவு
ஐதராபாத் : உதவியாளர்கள் செலவை நடிகர், நடிகைகளே தங்களுக்கு கொடுக்கப்படும் சம்பளத்தில் இருந்து கொடுக்கப்பட வேண்டும் என்ற முக்கிய முடிவு தெலுங்கு திரைப்பட உலகில் எடுக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கூட்டம் நேற்றைய தினம் ஐதராபாத்தில் நடைபெற்றுள்ளது.
இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதில்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

நடிகர்களின் அதிகப்படியான சம்பளம்
நடிகர், நடிகைகளுக்கு சம்பளம், அவர்களது உதவியாளர்களுக்கான சம்பளம் உள்ளிட்டவை தயாரிப்பாளர்களுக்கு எப்போதுமே மிகப்பெரிய சுமையை கொடுக்கக்கூடியவை. ஒரு படத்தை பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கும்போது நடிகர், நடிகைகளின் சம்பளம் என்பது அதில் அதிகமாக இருக்கும்.

தயாரிப்பாளர்கள் சுமை
இதை முதலில் பைனல் செய்துவிட்டே மற்ற செலவுகளை கணிக்கும் நிலையும் தயாரிப்பாளர்களுக்கு காணப்படுகிறது. ஒரு படத்தை எடுத்து முடிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை என்பதை அனைவரும் உணர்ந்தே உள்ளனர். நடிகர், நடிகைகளும் அதற்காக அதிகமான மெனக்கெடல்களை செய்து வருகின்றனர்.

தயாரிப்பாளர் தலையில் அதிக சுமை
ஆயினும் ஒரு சில நடிகர், நடிகைகளே தயாரிப்பாளர்களின் சிரமத்தை புரிந்து அதற்கேற்ப செயலாற்றி வருகின்றனர். ஒரு சிலர் தங்களது மேக்அப் ஆர்ட்டிஸ்ட், கார் டிரைவர் உள்ளிட்டவர்களின் சம்பளத்தையும் தயாரிப்பாளர் தலையிலேயே இறக்கும் செயல்கள் நடந்து வருகின்றன.

நீண்ட நாளைய கோரிக்கை
கோலிவுட், டோலிவுட் உள்ளிட்ட அனைத்து இன்டஸ்டரிகளும் இந்த விஷயங்களில் பிரச்சினைகளை சந்தித்து வருகின்றன. இதில் ஒரு நெறிமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என்பது அவர்களின் நீண்ட நாளைய கோரிக்கைகளாக உள்ளன. அந்த வகையில் தற்போது தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தற்போது இந்த விஷயத்தில் முக்கிய முடிவை எடுத்துள்ளது.

தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் முக்கிய முடிவு
அதன்படி நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தங்களது உதவியாளர்கள் சம்பளத்தை தங்களது சம்பளத்திலிருந்தே கொடுக்க வேண்டும் என்ற முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த செலவை தயாரிப்பாளர் ஏற்க மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. அவர்களுக்கு படத்திற்கான சம்பளம் மட்டுமே வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

8 வாரங்களுக்கு பிறகே ஓடிடி ரிலீஸ்
நாட்கள் சம்பளம் வழங்கப்படாது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. தங்களது உள்ளூர் போக்குவரத்து, தங்கும் செலவுகளையும் அவர்கள் ஏற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓடிடி ரிலீசும் வரைமுறை படுத்தப்பட்டுள்ளது. புதிய திரைப்படங்கள் திரையில் வெளியான பின்பு 8 வாரங்களுக்கு பிறகே ஓடிடியில் வெளியாக வேண்டும் என்றும் முக்கிய முடிவை தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் எடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications











