கொரோனா லாக்டவுன் காரணமாக சினிமாவில் ரூ.2 ஆயிரம் கோடி முடக்கம்.. சொல்கிறார் பிரபல தயாரிப்பாளர்!
சென்னை: கொரோனா லாக்டவுன் காரணமாக, சினிமாவில் ரூ.2 ஆயிரம் கோடி முடக்கப்பட்டுள்ளதாக பிரபல தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார்.
கொரோனா காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றனர்.
அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக, சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன.

தயாரிப்பாளர்கள்
படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல படங்களின் ரிலீஸும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சினிமாவில் முதலீடு செய்யப்பட்ட பலகோடி ரூபாய் முடங்கி உள்ளது. லாக்டவுன் முடிந்து தியேட்டர்கள் திறக்கப்பட்டால் மட்டுமே இந்த ரூபாய்களை திருப்பி எடுக்க வாய்ப்புள்ளன. இதனால் திரைப்பட தயாரிப்பாளர்கள் கவலையில் உள்ளனர்.

ரூ.2000 கோடி முடக்கம்
இந்நிலையில் இந்த கொரோனா லாக்டவுன் காரணமாக, தெலுங்கு சினிமாவில் இரண்டாயிரம் கோடி ரூபாய் முடங்கியுள்ளதாகத் தயாரிப்பாளர் சுரேஷ் பாபு டக்குபதி தெரிவித்துள்ளார். இவர், பிரபல தெலுங்கு ஹீரோ வெங்கடேஷின் அண்ணன். நடிகர் ராணாவின் தந்தை. அவர் கூறும்போது, ரிலீஸுக்கு ரெடியான நிலையில் 15 படங்களும் சுமார் 70 படங்கள் தயாரிப்பிலும் முடங்கி கிடக்கின்றன.

ஆர்.ஆர்.ஆர்
தயாரிப்பில் உள்ள ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படம், ரூ.400 கோடி செலவில் எடுக்கப்படுகிறது. மற்றும் ரூ.100 கோடியில் எடுக்கப்படும் சில படங்கள், ரூ.20-30 கோடியில் தொடங்கி ரூ.2,3 கோடியில் எடுக்கப்படும் படங்கள் வரை, ஏராளமான பணம் இதில் முடங்கியுள்ளது. பெரிய ஹீரோக்களின் படங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.

தொழிலாளர்கள்
இதனால் முடங்கியுள்ள தொகை மட்டுமே ரூ.2 ஆயிரம் கோடி இருக்கலாம். படப்பிடிப்புகள் மட்டுமல்லாமல், எங்களுடைய மூன்று ஸ்டூடியோக்களும் மூடப்பட்டுள்ளன. 1800-க்கும் அதிகமான தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளன. சுமார் 70 ஆயிரத்துக்கும் அதிகமான சினிமா தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.

சினிமா இன்டஸ்ட்ரி
இந்தியாவில், பாலிவுட்டுக்குப் பிறகு இரண்டாவது பெரிய சினிமா இன்டஸ்ட்ரியான தெலுங்கு சினிமாவில் வருடத்துக்கு 250-ல் இருந்து 275 படங்கள் வரை தயாரிக்கப்படுகின்றன. இதில் 175 படங்கள் தெலுங்கில் தயாரிக்கப்படுவதாகவும் சுமார் 100 படங்கள் மற்ற மொழிகளில் இருந்து டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











