கிருஷ்ண தேவராயராக நடிக்கக் கூடாது - வடிவேலு வீட்டு முன் தெலுங்கு அமைப்பு போராட்ட அறிவிப்பு
சென்னை: கிருஷ்ண தேவராயராக வடிவேலு நடிக்க எதிர்ப்பு தெரிவித்து தெலுங்கு மககள் பேரவை என்ற அமைப்பு போராட்டத்தில் குதித்துள்ளது.
படத்தை வெளியிட்டால் வடிவேலு வீட்டு முன் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

'ஜெக ஜால புஜபல தெனாலிராமன்' படத்தில் கிருஷ்ணதேவராயர் மற்றும் தெனாலிராமன் ஆகிய இரு வேடங்களில் வடிவேலு நடிக்கிறார்.
இறுதி கட்டத்தில் பட வேலைகள் உள்ளன. இந்த மாதம் ஆடியோ ரிலீஸ், அடுத்த மாதம் இறுதியில் படத்தை ரிலீஸ் செய்ய முயன்று வருகின்றனர்.
இந்தப் படத்தில் கிருஷ்ண தேவராயரை இழிவுபடுத்துவது போல் வடிவேலு நடித்து இருப்பதாக யாரோ கொளுத்திப் போட, அதை நம்பி இந்தப் படத்தை வெளியிடக்கூடாது என்றும் தமிழ்நாடு தெலுகு மக்கள் பேரவை கண்டித்து உள்ளது.
இது குறித்து அப்பேரவையின் மாநில தலைவர் பாலகுரு சுவாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "'ஜெக ஜால புஜபல தெனாலிராமன்' படத்தில் கிருஷ்ணதேவராயரை இழிவு படுத்துவது போல் வடிவேலு சில காட்சிகளில் நடித்து இருப்பதாக தெரிய வந்தது.
வடிவேலுவின் இந்த செயல் கிருஷ்ண தேவராயரையும், உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான தெலுங்கு மக்களையும் இழிவுபடுத்துவதாக உள்ளது.
இதற்கு ஆட்சேபம் தெரிவித்து வடிவேலு, படத்தின் இயக்குநர் யுவராஜ் தயாளன், தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் போன்றோருக்கு கடிதம் எழுதி உள்ளோம்.
படத்தை ரிலீஸ் செய்யக்கூடாது என்று தணிக்கை குழுவுக்கும் கடிதம் அனுப்பி இருக்கிறோம். இதையும் மீறி படத்தை வெளியிட முயன்றால் வடிவேலு வீட்டில் முற்றுகை போராட்டம் நடத்துவோம்," என்று குறிப்பிட்டுள்ளார்.
கதைப்படி, கிருஷ்ண தேவராயரை தனது புத்திசாலித்தனத்தால் பல முறை ஜெயிப்பார் தெனாலிராமன். இதைத்தான் இழிவுபடுத்துவதாகக் கூறுகின்றனர் இந்த தெலுங்கு அமைப்பினர். அப்படிப் பார்த்தால் தெனாலிராமன் தெலுங்கரில்லையா!!


Click it and Unblock the Notifications











