ஒரிஜினலை படமாக்கிய இடத்தில்... திருநெல்வேலி அருகே தேரிக்காட்டில் தெலுங்கு அசுரன் ஷூட்டிங்
Recommended Video
சென்னை: திருநெல்வேலி அருகே, வெங்கடேஷ் நடிக்கும் தெலுங்கு அசுரன் படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது.
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில், வெற்றிமாறன் இயக்கிய படம் அசுரன். தனுஷ் வயதான கேரக்டரிலும் இளவயது தோற்றத்திலும் நடிப்பில் மிரட்டியிருந்தார்.
அவர் மனைவியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடித்திருந்தார். மற்றும் டீஜே, கென் கருணாஸ், பிரகாஷ்ராஜ், பசுபதி, ஆடுகளம் நரேன், அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

ரூ.100 கோடி வசூல்
இந்தப் படம் பூமணியின் வெக்கை நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருந்தது. அசுரன் திரைப்படம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி வெளியானது. படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றி பெற்றுள்ளது. நடிகர் தனுஷுக்கு முதல் முறையாக, 100 கோடி வசூலை ஈட்டித் தந்த படம், இதுதான்.

வெற்றிவிழா
இந்தப் படம் 150 கோடி வரை வசூல் செய்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்தப் படம் கடந்த சில நாட்களுக்கு முன் நூறு நாட்களை கடந்தது. இதை ரசிகர்கள் ஆர்ப்பாட்டமாகக் கொண்டாடினர். வெற்றிவிழா சென்னை ரஷ்ய கலாசார மையத்தில் நடந்தது. இந்த விழாவில் தனுஷ், வெற்றிமாறன், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு உட்பட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

நாரப்பா
இந்தப் படம் தெலுங்கில் நாரப்பா என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. தனுஷ் நடித்த கேரக்டரில் வெங்கடேஷ் நடிக்கிறார். ஶ்ரீகாந்த் அட்டலா இயக்கும் இதில் மஞ்சுவாரியர் கேரக்டரில் பிரியாமணி நடிக்கிறார். கலைப்புலி எஸ்.தாணுவுடன் இணைந்து சுரேஷ் புரொடக்ஷன்ஸ் படத்தைத் தயாரிக்கிறது. இதன் ஷூட்டிங் ஆந்திராவில் நடந்து வந்தது.

தேரிக்காடு
இந்நிலையில், தனுஷ் நடித்த அசுரன் படத்தின் ஷூட்டிங் நடந்த தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தேரிகாட்டுக்கு, தெலுங்கு படக்குழு நேற்று வந்துள்ளது. அசுரன் படமாக்கப்பட்ட இடத்திலேயே இந்தப் படத்தின் கிராமத்துக் காட்சியை படமாக்கி வருகின்றனர். இன்னும் சில நாட்கள் அங்கு ஷூட்டிங் நடக்கும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications











