T20 World Cup: டி20 உலகக்கோப்பை தட்டித் தூக்கிய இந்தியா! வாழ்த்து சொன்ன பிரபலங்கள்!
சென்னை: உலகமே தற்போது பேசிக்கொண்டு இருக்கும் விஷயம் இந்திய அணி ஐசிசி டி20 உலகக்கோப்பையை வென்றதைத்தான். ஒரு கட்டத்தில் இந்தியா வெல்லாது என்ற எண்ணம் பலருக்கும் தோன்றும் விதமாக ஆட்டம் சென்று கொண்டு இருந்தது. அப்போது ஆட்டத்தின் போக்கையே இந்தியா பக்கம் திருப்பி விடக்கூடிய வகையில் இந்திய அணியின் பவுலர்கள் கடைசி நான்கு ஓவர்களை வீசினார்கள். இதனால் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இந்திய அணி 2011ஆம் ஆண்டுக்குப் பின்னர் மீண்டும் ஒரு ஐசிசி கோப்பையை வென்றுள்ளது.
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டி20 உலகக்கோப்பையை கைப்பற்றிய நிலையில் இந்திய அணிக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவற்றை இங்கு காணலாம். நடிகர் சரத்குமார், “ டி20 உலகக்கோப்பையை வென்று இந்திய அணி நம் அனைவரையும் பெருமையடையச் செய்துள்ளது. இந்திய அணிக்கு வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார். இயக்குநர் வெங்கட் பிரபுவோ,” மிகச்சிறந்த உலகக்கோப்பை இறுதிப்போட்டி. இந்திய அணி சிறப்பாக விளையாடியது. ஆட்டத்தின் கடைசி ஓவரின் முதல் பந்தில் மில்லர் அடித்த பந்தை சூர்யகுமார் யாதவ் பிடித்ததுதான் போட்டியை நாம் வெல்ல முக்கிய காரணம். இந்தியா இப்போது சாம்பியன் ஆகிவிட்டது” எனத் தெரிவித்துள்ளார்.


நடன இயக்குநர் மற்றும் நடிகர் பிரபுதேவா போட்டியை நேரலையாக பார்த்துக் கொண்டு இருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. அதில் இந்திய அணி போட்டியை வென்றதும் அவர் நடனமாடி உலகக்கோப்பையை வென்றதைக் கொண்டாடுகின்றார். இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி தனது எக்ஸ் பக்கத்தில், “ கடைசி ஓவரை வீசிய ஹர்திக் பாண்டியாவினை கேப்டன் ரோகித் சர்மா கட்டிப்பிடித்த போட்டோவைப் பகிர்ந்து கண்ணீர் சிந்தும் எமோஜிகளைக்” கேப்ஷனாக இட்டுள்ளார். மேலும் ”வீ ஆர் த சாம்பியன்ஸ், சல்யூட் டீம் இந்தியா” என பதிவிட்டுள்ளார்.

நடிகர் மகேஷ் பாபு தனது எக்ஸ் பக்கத்தில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா கட்டிப்பிடித்துக் கொண்டு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “ நாம் இப்போது சாம்பியன் ஆகியிருக்கின்றோம். இன்று உங்களது முயற்சிக்கு இந்திய அணியை தலைவணங்குகின்றோம். சூர்யகுமார் யாதவின் கேட்ச் வரலாற்றில் பொறிக்கப்படும். இந்த வரலாற்று வெற்றியினால் மகிழ்ச்சி” என பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் மற்றும் நடிகர் சசிகுமார், “ இந்திய அணி கோப்பையை கையில் ஏந்தியது தலை சிறந்த தருணம். இந்திய அணிக்கு வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார். அதேபோல் நடிகர் கமல்ஹாசன் தனது எக்ஸ் பக்கத்தில், “ நீண்ட நாள் கத்திருப்பு முடிவுக்கு வந்து விட்டது. உலகக்கோப்பையை போராடி வென்றுள்ளனர். விராட் கோலியின் நங்கூரமான இன்னிங்ஸில் தொடங்கி பும்ரா வீசிய ஒவ்வொரு பந்தும் சூர்யகுமார் யாதவ் பிடித்த வரலாற்று சிறப்பு வாய்ந்த கேட்ச், ஹிட்மேன் ரோகித் சர்மாவின் அற்புதமான கேப்டன்சி, இந்தியாவின் சுவர் எனப்படும் ராகுல் ட்ராவிட்டின் பயிற்சி ஆகியவற்றின் கீழ் இந்தியா கோப்பையை வென்றுள்ளது. நாம் யார் - வெற்றியாளர்கள்; நாம் யார் - தோல்வியைச் சந்திக்காதவர்கள்; நாம் யார் - இந்தியா. பெருமை மிக்க இந்தியன் என பதிவிட்டு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











