தெனாலிராமன் - அசத்தல் ஓபனிங்.. டீசன்ட் ரன்னிங்
சென்னை: வடிவேலு நடித்த தெனாலிராமன் படம் ஆரம்ப வாரம் அசத்தலான வசூலைப் பெற்றுள்ளதாகவும் வார நாட்களிலும் நல்ல கூட்டம் வருவதாகவும் பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.
பெரிய இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நடிப்பில் வெளியாகியுள்ள படம் தெனாலிராமன்.

இந்தப் படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்திருந்தனர். இதனால் படத்துக்கு அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டன. முன்பதிவும் சிறப்பாக இருந்தது.
முதல் நான்கு தினங்களுக்கு சென்னை மற்றும் புறநகர அரங்குகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியது தெனாலிராமன். தமிழகத்தின் பிற பகுதிகளிலும் நல்ல வசூலுடன் இந்தப் படம் ஓடியது.
இன்று செவ்வாய்க்கிழமை. கிராமங்கள் சார்ந்த பகுதிகளில் படத்துக்கு பரவாயில்லை எனும் அளவுக்கு கூட்டம் திரண்டது. ஆனால் சென்னையில் இன்றும் பெரும்பாலான அரங்குகளில் 90 சதவீத கூட்டம் வந்தது திரையுலகினருக்கே கொஞ்சம் ஆச்சர்யமாகத்தான் இருந்தது. ஆனால் இதே கூட்டம் இந்த வாரம் முழுக்க தொடருமா என்பது தெரியவில்லை.
காரணம், தெனாலிராமன் நகைச்சுவை காட்சிகள் குறைந்து, கொஞ்சம் சீரியஸ் படமாக அமைந்துவிட்டதுதான்.
"ஆனால் வடிவேலு படத்துக்கு இந்த வசூலே மிகப் பெரிய விஷயம்தான். இது முதலுக்கு மோசமில்லாத படம். நிச்சயம் தயாரிப்பாளர்களுக்கும் வெளியிட்டவர்களுக்கும் ஓரளவு லாபம் ஈட்டித் தரும் தெனாலிராமன்," என்கிறார் பாக்ஸ் ஆபீஸ் நிபுணரான ராமானுஜம்.
இந்த வார நிலவரப்படி தெனாலிராமன் முதலிடத்திலும், நான் சிகப்பு மனிதன் இரண்டாம் இடத்திலும், மான் கராத்தே மூன்றாம் இடத்திலும் உள்ளன.


Click it and Unblock the Notifications











