பொறுத்திருந்தது போதும்.. இந்தியாவில் டெனட் எப்போ ரிலீஸ் தெரியுமா? தியேட்டர்கள் களைகட்டும்!
சென்னை: தீபாவளிக்கு தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும், இன்னும் பெரிய படம் ஏதும் வெளியாகவில்லை.
அதனால், மக்கள் தினமும் திரளாக தியேட்டர்களை நோக்கி வருவதில் சற்றே தயக்கம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், வரும் டிசம்பர் மாதம் கிறிஸ்டோபர் நோலனின் டெனட் படம் இந்தியாவில் ரிலீசாகிறது என்கிற அசத்தலான அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கிறிஸ்டோபர் நோலனின் பிரம்மாண்டம்
வித்தியாசமான திரைக்கதைகளை படமாக இயக்குவதில், ஜகஜால கில்லாடியான இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகி உள்ள டெனட் திரைப்படம் தனது இந்திய ரிலீசை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே உலகம் முழுவதும் ரிலீசாகி வெற்றிநடை போட்ட இந்த படம் டிசம்பரில் இந்தியாவில் வெளியாகிறது.

தியேட்டர்கள் களைகட்டும்
தீபாவளிக்கு பெரிய நடிகர்களின் படங்கள் எல்லாம் ஓடிடியில் வெளியான நிலையில், இன்னமும் தியேட்டருக்கு சென்று மக்கள் படங்களை பெரிய அளவில் பார்த்து ரசிக்க தயாராகவில்லை. தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் வந்தால் தான் தியேட்டர்கள் களைகட்டும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு முன்னதாக டெனட் வெளியாக உள்ளது.
எந்த தேதியில்
வரும் டிசம்பர் 4ம் தேதியில் இந்திய மொழிகளில் டெனட் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை, தற்போது வார்னர் பிராஸ் வெளியிட, #TENET என்கிற ஹாஷ்டேக் இந்தியளவில் டிரெண்டாகி விட்டது. நிச்சயம் இந்த ஹாலிவுட் படம் ஏகப்பட்ட சினிமா ரசிகர்களை மீண்டும் தியேட்டருக்கு வரவழைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிம்பிள் கபாடியா
கிறிஸ்டோபர் நோலனின் டெனட் படத்தில் ஹீரோவாக ஜான் டேவிட் வாஷிங்டன் மற்றும் ராபர்ட் பாட்டின்சன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தியரான டிம்பிள் கபாடியா பிரியா எனும் கதாபாத்திரத்திலே நடித்துள்ளார். மேலும், தற்போது இந்த படத்தின் இந்திய ரிலீஸ் அறிவிப்பையும் அவரே வீடியோ மூலம் பேசி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டெலிகிராமில்
உலக நாடுகளில் டெனட் திரைப்படம் ரிலீசான நிலையில், எப்பவோ அந்த படத்தின் தியேட்டர் திருட்டு பிரின்ட்டை டெலிகிராமில் பார்த்து விட்டோம் என்றும் ஏகப்பட்ட ரசிகர்கள் மீம்களை போட்டு வருகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பர் 25ம் தேதி ப்ளூ ரே வெர்ஷனை படக்குழு வெளியிட உள்ளதால், ஹெச்.டி. பிரின்ட்டும் சீக்கிரமே வந்து விடும் என்றும் சில நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











