Thaai Kizhavi Day 4 Box Office - தாய் கிழவி 4வது நாள் வசூல் இத்தனை கோடியா?.. பாக்ஸ் ஆஃபிஸில் ராதிகா ஆட்சி
சென்னை: சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் தாய் கிழவி. படத்திலிருந்து வெளியான அப்டேட்டுகள் எல்லாம் பெரிய எதிர்பார்ப்பை படத்தின் மீது அதிகரித்தது. பற்றாக்குறைக்கு படத்தின் ப்ரீமியர் ஷோவை பார்த்த செலிபிரிட்டிகளும் ஏகபோகமாக இப்படத்தை கொண்டாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தாய் கிழவி படத்தின் நேற்றைய வசூல் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
நடிகராக வென்றுவரும் சிவகார்த்திகேயன்; தயாரிப்பாளராகவும் சிறந்த முறையில் இயங்கிவருகிறார். எஸ்கே புரொடக்ஷன்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய அவர்; திரைத்துறையில் இருக்கும் தனது நண்பர்கள், திறமை வாய்ந்த புதுமுகங்கள் என பலரையும் இயக்குநர்களாக அறிமுகப்படுத்திவருகிறார். அப்படி அவர்களால் உருவாக்கப்படும் படங்களும் சோடை போகவில்லை. இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் கவனம் ஈர்க்கக்கூடிய படங்களாகத்தான அமைகின்றன.

தாய் கிழவி: தற்போது அவர் தாய் கிழவி படத்தை தயாரித்திருக்கிறார். இதில் ராதிகா சரத்குமார் லீடு ரோலில் நடித்திருக்கிறார். அவருடன் தம்பி இராமையா, அருள்தாஸ், பாலசரவணன், முனீஸ்காந்த், ரேச்சல் ரெபேக்கா உள்ளிட்டோர் நடிக்க; நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருக்கிறார். ஆண்பாவம் பொல்லாதது படத்தின் கதாசிரியர் சிவக்குமார் முருகேசன் இப்படத்தை இயக்கியிருக்கிறார். படத்தின் செலிபிரிட்டி ஷோ திரைத்துறை பிரபலங்களிடமும், பத்திரிகையாளர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.
தியேட்டர்களில் ரெஸ்பான்ஸ்: செலிபிரிட்டிகள் ஆஹா ஓஹோவென படத்தை புகழ்ந்து சோஷியல் மீடியாக்களில் பதிவிட்டாலும்; உண்மையான ரிசல்ட் ரசிகர்களிடம்தான் இருக்கும். எனவே ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெறுமா என்ற பெரிய கேள்வியுடன் கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ஏற்கனவே பற்ற வைக்கப்பட்ட ஹைப்பின் காரணமாக ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பலதரப்பினர் தியேட்டர்களுக்கு சென்று படத்தை பார்த்தார்கள். அவர்களும் தங்களது முழு ஆதரவை படத்துக்கு கொடுத்திருக்கிறார்கள்.
ராதிகாவுக்கு குவியும் பாராட்டு: இயக்குநரின் கதை, திரைக்கதை, வசனம் எல்லாம் பெரிய ரெஸ்பான்ஸை பெற்றன. சிவக்குமாரின் உழைப்பை பார்க்கும்போது இது அவருக்கு முதல் படம் மாதிரியே தெரியவில்லை; பெண்களுக்கு அவசியமான படத்தை எந்தவித சமரசமுமின்றி கொடுத்திருக்கிறார் என கொண்டாடுகிறார்கள். அதேபோல் இத்தனை வருடங்கள் தேசிய விருது கொடுக்காததை நினைத்து அனைவரும் வெட்கி தலைகுனியும் அளவுக்கு ராதிகா இதில் நடித்திருக்கிறார் என்றும்; நிச்சயம் இப்படத்துக்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை கொடுக்க வேண்டும் என்றும் அவர்கள் சோஷியல் மீடியவில் சொல்லவும் செய்கிறார்கள்.
தாய் கிழவி பாக்ஸ் ஆஃபிஸ்: விமர்சன ரீதியாக படம் அனைவரையும் கவர்ந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். என்னதான் விமர்சன ரீதியாக பெரிய வரவேற்பை பெற்றாலும் வணிக ரீதியாக வென்றால்தான் இந்தப் படத்தை தயாரித்தவருக்கும், இயக்கியவருக்கும் இதேபோல் இன்னொரு படம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் உளவியல் ரீதியாக இன்னும் அதிகமாகும். எனவே படத்தின் வசூலும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. தயாரிப்பு நிறுவனத்தை பொறுத்தவரை மூன்று நாட்களில் 22 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்திருப்பதாக அறிவித்திருக்கிறது.
நான்கு நாட்கள் வசூல்: இந்நிலையில் Sacnilk இணையதளம் நான்காவது நாளான நேற்று படம் செய்திருக்கும் வசூல் குறித்த தகவலை வெளியிட்டிருக்கிறது. அதன்படி நேற்று இப்படம் மொத்தம் இரண்டு கோடியே 75 லட்சம் ரூபாய் வசூலித்திருக்கிறதாம். இனி வரும் நாட்களில் இன்னும் இந்த வசூல் அதிகரிக்கும் என்றுதான் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படமானது பத்து கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இப்போதைக்குவரை படம் நல்ல லாபத்தை பார்த்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.


Click it and Unblock the Notifications















