Thaai Kizhavi Day 5 Box Office - தாய் கிழவி 5வது நாள் வசூல் சூப்பர்.. பவுனுத்தாயி பக்கா மாஸ் பாஸ்
சென்னை: சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா நடித்திருக்கும் படம் தாய் கிழவி. இதுதான் சிவக்குமாருக்கு முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் படத்திலேயே அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்துவிட்டார். விமர்சன ரீதியாக பெரிய அளவில் கொண்டாடப்படும் தாய் கிழவி வசூலிலும் சக்கைப்போடு போடுகிறது. இந்நிலையில் ஐந்தாம் நாளான நேற்று படம் செய்திருக்கும் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தயாரிப்பாளராக ஜொலித்துவரும் சிவகார்த்திகேயன் இப்போது சிவக்குமார் முருகேசன் என்பவரை இயக்குநராக அறிமுகம் செய்திருக்கிறார். இவர்தான் ஆண்பாவம் பொல்லாதது படத்தின் கதாசிரியர். தாய் கிழவி படத்தை இயக்கி அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். ரிலீஸுக்கு முன்பு செலிபிரிட்டி ஷோவை திரையிட்டு காண்பித்த படக்குழு பாராட்டு மழையில் நனைந்தது. இந்தப் படம் தமிழ் சினிமாவை ஒரு படி மேலே எடுத்து சென்றிருக்கிறது என ஜோதிகா உள்ளிட்டோர் எல்லாம் பலமாகவே பாராட்டினார்கள்.

ரசிகர்களிடமும் பாராட்டு: செலிபிரிட்டிகளிடம் மட்டுமின்றி ரசிகர்களிடமும் மிகப்பெரிய பாராட்டை பெற்றிருக்கிறது படம். பெண் விடுதலை, சமத்துவம் உள்ளிட்ட விஷயங்கள் குறித்து தமிழில் படங்கள் வருவது அதிகரித்திருந்தாலும்; இது ஸ்பெஷலான இடத்தை பிடித்திருக்கிறது. கிராமிய வாழ்வியலோடு இருக்கும் ஒரு பெண்ணை வைத்து இப்படி ஒரு விஷயத்தை பேசியதன் மூலமே அப்ளாஸை அள்ளிவிட்டார் இயக்குநர். அதுமட்டுமின்றி தனது மேக்கிங் மூலமும் மிரட்டிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். பார்த்தவர்கள் அத்தனை பேரும் இது இயக்குநருக்கு முதல் படமா என்று ஆச்சரியத்தோடு கேள்வியை முன்வைத்தார்கள்.
ராதிகா நடிப்பில் மெர்சல்: இப்படத்தின் இன்னொரு தூணாக இருப்பவர் ராதிகா சரத்குமார். பவுனுத்தாயி கேரக்டரில் மெர்சல் செய்துவிட்டார் என ரசிகர்கள் அவரை கொண்டாடுகிறார்கள். இத்தனை வருடங்கள் தமிழ் சினிமாவில் அவர் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினாலும்; அவருக்கு தேசிய அளவிலான அங்கீகாரம் கிடைக்காமல் இருக்கிறது. அதற்கெல்லாம் தகுதியான ஆள் தான் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்தாலும் ஏனோ இதுவரை கிடைக்கவில்லை. அந்த ஏக்கம் எல்லாம் தாய் கிழவி படத்தோடு முடிந்துவிடும் என்பது ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது.
ஆண்களும் வரவேற்பு: தாய் கிழவி ரிலீஸின்போதும், ப்ரீமியர் ஷோவின்போதும் இது பெண்களுக்கான படம் என்று சொல்லப்பட்டது. ஆனால் தியேட்டர்களில் அவர்கள் மட்டுமின்றி ஆண்களிடமும் படம் பலமான வரவேற்பை பெற்றிருக்கிறது. குடும்பம் குடும்பமாக மீண்டும் மீண்டும் சென்று பார்ப்பவர்களும் இருக்கிறார்கள். அதன் காரணமாக படத்தின் வசூலும் நாளுக்கு நாள் படிப்படியாக உயர்ந்துவருகிறது. இந்நிலையில் ஐந்தாவது நாளான நேற்று படம் செய்திருக்கும் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தாய் கிழவி வசூல்: Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கும் தகவல்படி ஐந்தாவது நாளான நேற்று மொத்தம் 2 கோடியே 65 லட்சம் ரூபாய் வசூலித்திருக்கிறதாம். மேலும் இதுவரை மொத்தம் 19 கோடியே 30 லட்சம் ரூபாயை அள்ளியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தின் பட்ஜெட் பத்து கோடி ரூபாய் என்பது நினைவுகூரத்தக்கது. கண்டிப்பாக இப்படம் பெரிய லாபத்தை எஸ்கேவுக்கு பெற்றுத்தரக்கூடும்.


Click it and Unblock the Notifications















