Thaai Kizhavi Day 6 Box Office - தாய் கிழவி 6ஆவது நாள் வசூல்.. பாக்ஸ் ஆஃபிஸில் பட்டையை கிளப்புதே பாஸ்
சென்னை: சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ராதிகா உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் தாய் கிழவி. சிவக்குமார் முருகேசன் என்ற புதுமுகம் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இவர்தான் ஆண்பாவம் பொல்லதது படத்தின் கதாசிரியர் ஆவார். இவர் இயக்கிய முதல் படமே செலிபிரிட்டிகளிடமும், ரசிகர்களிடமும் பெரிய அப்ளாஸை அள்ளியிருக்கிறது. விமர்சன ரீதியாக கொண்டாடப்படும் படம் வசூலிலும் சக்கைப்போடு போடுகிறது. இந்நிலையில் ஆறாவது நாளான நேற்று படம் எவ்வளவு வசூல் செய்திருக்கிறது என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஹீரோயினாக 80களில் கலக்கிய ராதிகா அதன் பிறகு குணசித்திர வேடங்களில் கலக்க ஆரம்பித்தார். தனக்கு எந்த ரோல் கொடுக்கப்பட்டாலும் அதை அசால்ட்டாக செய்து கைத்தட்டல்களை வாங்குகிறார். அவர் இப்போது சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் தாய் கிழவி படத்தில் நடித்திருக்கிறார். தோற்றத்தில் மாற்றம், பாடி லாங்குவேஜில் மாற்றம் என டோட்டலாகவே மாறிய ராதிகாவை பார்த்து கமல் உட்பட ஒட்டுமொத்த திரைத்துறையினரும் ஆச்சரியத்தில் வாயடைத்து போனார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

ரிலீஸான படம்: ரிலீஸுக்கு முன்பே திரைத்துறை பிரபலங்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. ப்ரீமியர் ஷோவில் படம் பார்த்தவர்கள்; ஏற்கனவே இருந்த எதிர்பார்ப்பை மேற்கொண்டு ஏற்றி வைத்தார்கள். கண்டிப்பாக ராதிகாவுக்கும், தமிழ் சினிமாவுக்கும் முக்கியமான படமாக இது அமையும் எனவும் ஆரூடம் கூறினார்கள். இப்படி பல ஹைப்புகளை சுமந்துகொண்டு கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி திரைப்படமானது தியேட்டர்களில் ரிலீஸானது. ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை வெளியிட்டது. இந்தப் படத்தை ஒற்றைக் காலில் நின்று அந்நிறுவனம் வாங்கியதாக சிவா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ரசிகர்களிடமும் வரவேற்பு: செலிபிரிட்டிகளிடம் பெற்ற வரவேற்பை போன்றே ரசிகர்களிடமும் படம் பெற்றிருக்கிறது. இதனால் படக்குழு நிம்மதியடைந்திருக்கிறது. சிவக்குமாரின் இயக்கம், வசனம் உள்ளிட்டவைகளையும் படத்தில் நடித்திருந்தவர்களின் நடிப்பையும் பாராட்டி தள்ளிவிட்டார்கள். படத்துக்கு ரிப்பீட் ஆடியன்ஸும் கிடைத்திருக்கிறார்கள். தங்களது குடும்பத்தினர் அனைவரையும் தியேட்டருக்கு ரசிகர்கள் அழைத்து செல்வதால் நாளுக்கு நாள் கூட்டமும் நன்றாகவே இருக்கிறது.
ராதிகாவை பிரமிக்கும் ரசிகர்கள்: எல்லோரும் கூறியது போல் ராதிகாவின் நடிப்பு ரசிகர்களிடம் அதீத ஆதரவை பெற்றிருக்கிறது. இப்படத்துக்காவது ராதிகாவுக்கு தேசிய விருது கொடுக்க வேண்டும்; இல்லையென்றால் அந்த விருதுக்கே மதிப்பில்லை என்றெல்லாம் சொல்கிறார்கள். அந்த அளவுக்கு ராதிகா மிரட்டியிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். இந்நிலையில் படம் வெளியாகி நேற்றோடு ஆறு நாட்கள் முடிந்திருக்கும் நிலையில் படத்தின் பாக்ஸ் ஆஃபிஸ் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாய் கிழவி ஆறாவது நாள் வசூல்: Sacnilk இணையதளம் வெளியிட்டிருக்கும் தகவல்படி நேற்று இப்படமானது இரண்டு கோடி ரூபாய் வசூலித்திருக்கிறதாம். மொத்தம் இதுவரை 21.45 கோடி ரூபாயை அள்ளியிருப்பதாக அந்த இணையதளம் கூறுகிறது. இப்படத்தின் பட்ஜெட் பத்து கோடி ரூபாய்தானாம். இப்போதுவரை படம் செமத்தியான லாபத்தை சம்பாதித்திருப்பதாக தெரிகிறது. இதன் காரணமாக எஸ்கே ரொம்பவே மகிழ்ச்சியாக இருப்பார் என்று நம்பலாம்.


Click it and Unblock the Notifications















