தாய் கிழவி படம் எப்படி இருக்கு?.. ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்.. சிவகார்த்திகேயனை வெளுத்துட்டாரே
சென்னை: சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா நடித்திருக்கும் திரைப்படம் தாய் கிழவி. இளவரசு, அருள்தாஸ், தம்பி இராமையா, பாலசரவணன், முனீஸ்காந்த், ரேச்சல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படம் இன்று வெளியாகவிருக்கிறது. நேற்று முன்தினம் திரையுலக பிரபலங்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சன வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.
தயாரிப்பாளராக தொடர்ந்து நல்ல படங்களை கொடுத்துவரும் சிவகார்த்திகேயன் தற்போது தாய் கிழவி படத்தை தயாரித்திருக்கிறார். ஆண்பாவம் பொல்லாதது படத்தின் கதாசிரியர் சிவக்குமார் முருகேசன் முதன்முறையாக இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறது. படத்தின் ட்ரெய்லர், க்ளிம்ப்ஸ் எல்லாம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டின. மேலும் கமல்ஹாசன் படத்தை பார்த்துவிட்டு ஏகபோகமாக பாராட்டியிருந்தார். எனவே மேற்கொண்டு இப்படமானது கவனத்தை பெற்றது.
ப்ரீமியர் ஷோவிலும் ரெஸ்பான்ஸ்: அதனையடுத்து சில நாட்கள் முன்பு திரையுலக பிரபலங்களுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. அதிலும் படம் எக்கச்சக்கமான வரவேற்பை பெற்றது. ஜோதிகா, பிரபு உள்ளிடோரெல்லாம் பயங்கரமாக பாராட்டியிருந்தார்கள். பத்திரிகையாளர்களும் தங்களது சோஷியல் மீடியா பக்கத்தில் பாராட்டவே செய்திருந்தார். இப்படி எங்கு திரும்பினாலும் தாய் கிழவி குறித்த பாசிட்டிவ் பேச்சாகத்தான் இருந்தன. எனவே கோலிவுட்டின் முக்கியமான படங்களில் ஒன்றாக இது அமையுமா என்ற கேள்வி எழுந்தது.

ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்: படம் இன்று வெளியாகவிருக்கும் சூழலில் பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது விமர்சன வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் அவர், "தாய் கிழவி படம் அப்படி இருக்கிறது இப்படி இருக்கிறது சூப்பராக இருக்கிறது என கடந்த 10,15 நாட்களாக ஒரே கூவலாக இருந்தது. கொஞ்சம் உற்று கவனித்தால் இந்தப் படத்தை திடீர் தளபதி (சிவகார்த்திகேயன்) வழங்குகிறார் என இருந்தது. அவர் உள்ளே நுழைந்தாலே அதில் ஒரு ஸ்கேம் இருக்கும்.
அவர் நினைத்தால் சோஷியல் இல்லாததை இருக்கும் என்றும் இருப்பதை இல்லாதது மாதிரியும் செய்ய முடியும். அப்படி ஏதோ ஒரு ஸ்கேம் செய்து சிக்க வைக்கப்போறாங்களோ என்ற பயம் இருந்தது. அதேபோல் படத்தின் ப்ரோமோஷனை பார்த்தால் ஒரு தண்டட்டி கிழவி கூலிங் கிளாஸ் போட்டு சுருட்டு பிடிக்குது. நாட்டி பாட்டியாக இருக்குமோ; இதனிடம் சென்று மாட்டிக்கொள்ள வேண்டுமோ என இருந்தது. படம் ஆரம்பித்து முதல் பாதியில் இலக்கு இல்லாமல் போனது. பாட்டி கேரக்டரை கொஞ்ச நேரத்திலேயே படுக்க வைத்துவிட்டார்கள். அது நன்றாக இருந்தது.
இரண்டாவது பாதி: ஆனால் இரண்டாவது பாதியில் கதையையே புரட்டி போடுவது மாதிரி ஒரு சீன் இருந்தது. அதாவது பெண் விடுதலை பற்றி பெரியார் இத்தனை வருடங்கள் சொன்னதை பாடம் எடுக்காமல் அழகாக செய்தது படத்தின் கலரை மாற்றிவிட்டது. எல்லா சொதப்பல்களையும் மறக்கடிக்கும் மாதிரி சில நல்ல சீன்கள் இருக்கின்றன. அத்தனை கேரக்டர்களுக்கும் முக்கியத்துவம் இருந்தது. மதுரை மாவட்டத்தில் கருமாத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு மொழி பேசுவார்கள். அதனை ராதிகாவால் மேட்ச் செய்ய முடியவில்லை. அதனால் அந்தக் கேரக்டராகவே அவர் தெரியவில்லை. அந்த ஏரியாவை மட்டும் இயக்குநர் கொஞ்சம் கவனித்திருந்தால் இன்னும் சூப்பராக இருந்திருக்கும். மொத்தத்தில் பெண்கள் அவசியம் பார்க்க வேண்டிய படம்" என்றார்.


Click it and Unblock the Notifications