தயாரிப்பாளர் சங்கத்துக்கு தேர்தல்: தலைவர் பதவிக்கு தாணு- கேயார் போட்டி!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுகிறது.
இந்த சங்கத்தில் மொத்தம் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர்.
அவர்களில் ஓட்டுப்போட தகுதியுள்ளவர்கள் 800 பேர் முதல் 900 பேர் வரை உள்ளனர். கடந்த முறை தலைவராக எஸ்.ஏ.சந்திரசேகரன், துணைத் தலைவர்களாக டி.ஜி.தியாகராஜன், டி.சிவா, செயலாளர்களாக பி.எல்.தேனப்பன், கே.முரளிதரன், பொருளாளராக எஸ்.தாணு ஆகியோர் தேர்தலில் வெற்றி பெற்று பொறுப்பேற்றனர்.
ஆனால் தொடர்ந்து இந்த அணி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
கேயார் தலைமையிலான படஅதிபர்கள் அணி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்ததைத் தொடர்ந்து, பதவிக் காலம் முடிவடைவதற்கு முன்பே, தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அடுத்த மாதம் (செப்டம்பர்) 7-ந்தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு ஏற்கனவே பொருளாளராக இருந்த எஸ்.தாணு போட்டியிடுகிறார்.
இன்னொரு அணியில் தலைவர் பதவிக்கு கேயார் போட்டியிடுகிறார். ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஜெகதீசன், வெங்கட்ராமன் ஆகிய இருவரும் தேர்தல் அதிகாரிகளாக இருந்து தேர்தலை நடத்துவார்கள். ஓட்டுப்பதிவு செப்டம்பர் 7-ந்தேதி காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறும்.


Click it and Unblock the Notifications











