Vijay: விஜய் படத்தை பச்சை குத்திய நான் தற்குறிதான்.. சொல்லாமல் சொல்லும் நடிகர்.. மானத்த வாங்கிட்டாரே
சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் தொடங்கிய சில மாதங்களுக்கு உள்ளாகவே, தன்னை அந்தக் கட்சியில் இணைத்துக் கொண்டவர் நடிகர் தாடி பாலாஜி. காமெடியனாகவும் விஜய்யின் நண்பராகவும் பல படங்களில் விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் தவெகவில் இணைந்த பின்னர் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். மாநாட்டிலும் கலந்து கொண்டார். இப்படியான சூழலில் அவருக்கு பொறுப்பு எதுவுமே வழங்கப்படாமல் இருந்தது. இப்படியான நிலையில் அவரது வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும் தவெகவில் இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில், தமிழக வெற்றிக் கழகம் என்ற தனது கட்சியைப் பதிவு செய்தார். இது தமிழக அரசியல் சூழலில் பலரது கவனத்தினை ஈர்த்தது. கட்சி தொடங்கி ஒரு ஆண்டு ஆகியுள்ள நிலையில், விஜய் மீது அதிகம் வைக்கப்படும் விமர்சனமாக பார்க்கப்படுவது, அவர் மக்கள் பிரச்னைகளை கையில் எடுத்து, போராட்டங்களை முன்னெடுப்பதில்லை, மக்களைச் சந்திக்க களத்திற்கு வருவதில்லை. எப்போதும் டிவிட்டரில் அறிக்கைகள் விட்டு அரசியல் செய்து வருகிறார் என விமர்சனம் முன்வைக்கப்பட்டது.

கட்சி சார்பில் பலர் ஊடகங்களைச் சந்தித்தாலும், விஜய் இன்னும் ஊடகங்களைச் சந்திக்காமல் இருப்பதால் அதுவுமே பெரும் விமர்சனமாக அவர்மீது வைக்கப்படுகின்றது. இப்படியான நிலையில், கடந்த வாரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தில், ஆதவ் அர்ஜுனா இணைந்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய அவர், கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்குப் பிறகு, தவெகவில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். தவெகவில் ஆதவ் அர்ஜுனா இணைந்ததும், அவருக்கு தேர்தல் பிரிவு பொதுச்செயலாளர் என்ற பொறுப்பு வழங்கப்பட்டது.
தாடி பாலாஜி: ஆனால் கட்சி தொடங்கிய சில மாதங்களில் இருந்து கட்சியில் தன்னை இணைத்து, கட்சிப் பணிகளை செய்து வரும் தாடி பாலாஜிக்கு மாவட்ட அளவிலான பொறுப்பு, அல்லது மாநில அளவிலான பொறுப்பு என எதுவும் வழங்கப்படவில்லை. இதனால் மனமுடைந்த தாடி பாலாஜி தனது வாட்ஸ் ஆப் பக்கத்தில் போஸ்ட் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் ஆதவ் அர்ஜுனாவை, புஸ்ஸி ஆனந்த் வரவேற்கும் புகைப்படமும், விஜய்யை தனது நெஞ்சில் தாடி பாலாஜி பச்சை குத்திக் கொண்ட புகைப்படமும் உள்ளது. இதில் முதல் படத்திற்கு, "அவளோ புது பாய் பிரண்டோடு ஹேப்பியா இருக்கா" இரண்டாவது படத்திற்கு "தற்குறி நானோ அவளின் நினைவோடு" என பதிவிட்டுள்ளார்.

பொறுப்பு: இந்த மீம் தவெக வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக தனக்கு கட்சியில் எந்தப் பொறுப்பும் வழங்காததால்தான் தாடி பாலாஜி இவ்வாறு பதிவிட்டுள்ளார் என பேச்சுகள் எழுகின்றது. மேலும் கட்சி தொடங்கியதில் இருந்து உடன் இருந்து பணியாற்றிய தனக்கு எந்தப் பொறுப்பும் வழங்காமல், கட்சியில் இணைந்த உடனே, ஆதவ் அர்ஜுனாவுக்கு பொறுப்பு வழங்கியிருப்பது குறித்த தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

மானத்த வாங்கிட்டார்: தாடி பாலாஜி சுமார் 7 மணி நேரத்திற்கு மேலாக செலவு செய்து தனது நெஞ்சில் விஜய்யின் முகத்தை பச்சை குத்திக் கொண்டார். இது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வேகமாக பரவியது. அதேபோல், தவெகவில் தன்னை இணைத்துக் கொண்ட பின்னர், பல அரசியல் கட்சியினர் தவெக குறித்தோ, விஜய் குறித்தோ விமர்சிக்கும் போது அதற்கு பதிலடி கொடுத்து கவனத்தினையும் ஈர்த்துள்ளார். அவருக்கு கட்சியில் பொறுப்பு வழங்காமல் போனது ஏன் என்ற கேள்விக்கு விஜய்க்குத்தான் பதில் தெரியும், என பேசி வருகின்றனர். மொத்தத்தில் ஒற்றை மீமைப் போட்டு மொத்தமாக மானத்தை வாங்கிவிட்டார் தாடி பாலாஜி.


Click it and Unblock the Notifications











