முருகதாஸா? புஷ்கர் காயத்ரியா? திடீரென டிரெண்டான ’தல 61’
இந்தியளவில் ட்விட்டர் டிரெண்டிங்கில் திடீரென தல 61 ஹேஷ்டேக் அஜித் ரசிகர்களால் டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.
சென்னை: 'தல 61' என்ற ஹேஷ்டேக் திடீரென டிரெண்டாகி வருகிறது. தற்போது இந்தியளவில் தற்போது 4வது இடத்தில் அந்த ஹேஷ்டேக் உள்ளது.
எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் தனது 60வது படத்தில் நடித்து வருகிறார். என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு மீண்டும் போலீஸ் அதிகாரி வேடத்தில் அஜித் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில், ஏ.ஆர். முருகதாஸா அல்லது விக்ரம் வேதா படத்தை இயக்கிய புஷ்கர் காயத்ரியா யார் தல 61 படத்தை இயக்கினால் நன்றாக இருக்கும் என்ற Poll நடைபெற்று வருகிறது.

என்ன காரணம்
தளபதி 65வது படம் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி 2வாக உருவாகும் என ரசிகர்கள் சில நாட்களுக்கு முன்பு ட்விட்டரில் டிரெண்ட் செய்து வந்தனர். அதற்கு பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் பிகில் ரிலீசை முன்னிட்டு போட்ட துப்பாக்கி 2வுக்கு வெயிட்டிங் என்ற ஹேஷ்டேக் அடித்தளம் அமைத்திருந்தது.
இந்நிலையில், தற்போது அஜித் - ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணி குறித்து ட்விட்டரில் அஜித் ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

தீனா
2001ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான அஜித்தின் தீனா படத்தை இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியிருந்தார். அந்த படத்திற்கு பிறகு தான் அல்டிமேட் ஸ்டார் அஜித்தை ரசிகர்கள் 'தல' என அழைக்கத் தொடங்கினர். கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் கடந்த நிலையில், மீண்டும் அஜித் - முருகதாஸ் கூட்டணி இணைய வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

கடும் போட்டி
ஏ.ஆர். முருகதாஸுக்கு இணையாக விக்ரம் வேதா படத்தை இயக்கி இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த இயக்குநர்கள் புஷ்கர் மற்றும் காயத்ரி தம்பதியினரின் பெயரும் அடிபட்டு வருகின்றன. மேலும், சிலர் துருவங்கள் பதினாறு, மாஃபியா படங்களை இயக்கியுள்ள கார்த்திக் நரேன் பெயரையும் மற்றும் சிலர் மாநகரம், கைதி, தளபதி 64 படங்களை தொடர்ந்து லோகேஷ் கனகராஜும் தல 61 படத்தை இயக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

வாய்ப்பிருக்கா
இந்நிலையில், தர்பார் படத்தில் பிசியாக பணி புரிந்து வரும் ஏ.ஆர். முருகதாஸ் மற்றும் ‘தல 60' படத்தில் பிசியாகியுள்ள நடிகர் அஜித் கூட்டணி தற்போதைக்கு இணைய வாய்ப்பில்லை என்றும் தல 61 குறித்த பேச்சுவார்த்தையில் ஏ.ஆர். முருகதாஸ் இறங்கியுள்ளார் என்றும் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











