தயாரிப்பாளர் போனி கபூரின் மாஸ் திட்டம்.. பான் இந்திய படமாகும் வலிமை? பரபரக்கும் கோலிவுட்!
சென்னை: தல அஜித்தின் வலிமை திரைப்படம் பான் இந்திய படமாக உருவாக உள்ளதாக தகவல்கள் வைரலாகி வருகின்றன.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும் பிரபல பாலிவுட் தயாரிப்பாளருமான போனி கபூர், நடிகர் அஜித்தின் வலிமை படத்தை தயாரித்து வருகிறார்.
முன்னதாக பிங்க் படத்தின் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை படமும் இவரது தயாரிப்பில் வெளியாகி வெற்றியடைந்தது.

கொரோனாவால் தள்ளிப் போன வலிமை
2020ம் ஆண்டு தமிழ் சினிமாவில் பல பெரிய படங்கள் வரிசை கட்டி வரப் போவதாகவும், பாக்ஸ் ஆஃபிஸ் கலெக்ஷன் எகிறும் என்றும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் பலரும் கணித்து கணக்குகள் போட்டு வந்தனர். ஆனால், அவை அத்தனையும் கொரோனா எனும் ஒற்றை வைரஸ் தவிடு பொடியாக்கி விட்டது. இந்த தீபாவளிக்கு வர வேண்டிய வலிமை படத்தின் ரிலீசும் தள்ளிப் போனது.

பாதியில் நிற்கும் ஷூட்டிங்
எச். வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படம் பற்றிய தகவல்களை படக்குழு மிகவும் ரகசியமான முறையிலேயே பேணிக் காத்து வருகிறது. லாக்டவுனுக்கு முன்னதாக பைக் ரேஸ் காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டதை தொடர்ந்து, அதன் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகின. வலிமை படத்தின் ஷூட்டிங் பாதியிலேயே நிற்பது குறிப்பிடத்தக்கது.

பான் இந்தியா
இந்த கொரோனா லாக்டவுன் சினிமாக்காரர்களுக்கு ஏகப்பட்ட நஷ்டத்தை கொடுத்திருந்தாலும், சில புதிய வாய்ப்புகளையும் அவ்வப்போது வழங்கிக் கொண்டு தான் வருகிறது. இந்த கால தாமதத்தை பயன்படுத்தி, தற்போது தல அஜித்தின் வலிமை படத்தை இந்தியிலும் உருவாக்கி பான் இந்தியா படமாக வெளியிட போனி கபூர் திட்டம் தீட்டி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

பாலிவுட் நடிகை
வலிமை படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்து வருவதால், இந்தி மொழியில் வலிமை படம் வெளியானாலும், நல்ல கலெக்ஷனை அள்ளும் என போனி கபூர் ஐடியா செய்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. ஆனால், இது குறித்து, எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படக்குழு வெளியிடாதது குறிப்பிடத்தக்கது.

எப்போ ரிலீஸ்
தளபதி விஜய்யின் மாஸ்டர், சூர்யாவின் சூரரைப் போற்று, தனுஷின் ஜகமே தந்திரம், விக்ரமின் கோப்ரா, நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்கள் எல்லாம் ஷூட்டிங் முடிந்தே இன்னும் எப்போ ரிலீஸ் செய்யப் போகிறோம் என்பது தெரியாமல், தவித்து வருகின்றன. வலிமை படத்திற்கு வெளிநாட்டில் எல்லாம் ஷூட்டிங் செய்ய வேண்டிய சூழலில் படத்தின் ரிலீஸ் அடுத்த சம்மர் அல்லது தல பிறந்தநாளான மே 1ம் தேதி வெளியாக வாய்ப்புகள் அதிகம் என்ற பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications











