அம்மா மனமிறங்குங்க... தலைவா ரிலீஸ் ஆகலேன்னா நடுத்தெருவுக்கு வந்துருவேன்- சந்திரபிரகாஷ் ஜெயின்
சென்னை: முதல்வர் ஜெயலலிதா மனமிறங்கி இந்த திரைப்படம் நாளை (16.8.2013) வெளிவர வேண்டிய நடவடிக்கை எடுத்து எங்களை காப்பாற்ற வேண்டும் என்று தாழ்பணிந்து கேட்டுக் கொள்கிறேன் என தலைவா படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தலைவா படத்தை வெளியிட பல்வேறு வழிகளிலும் அதன் குழுவினர் முயற்சித்து வருகின்றனர்.
நேற்று நடிகர் விஜய் வீடியோ மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் இன்று அதன் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் பேட்டி அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். கூடவே படத்தின் இயக்குநர் விஜய்யும் உடன் இருந்தார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

அம்மா...
அம்மா நான் ஒரு திரைப்பட தயாரிப்பாளர். இதற்கு முன் இரண்டு படங்கள் தயாரித்து நல்ல விதமாக வெளியிட்டு இருக்கிறேன்.

நல்ல தயாரிப்பாளர்... நாணயமானவன்
நான் ஒரு நல்ல தயாரிப்பாளனாகவும், நாணயமான தயாரிப்பாளனாகவும் தமிழ் திரை உலகில் பேர் எடுத்து இருக்கிறேன்.

4 வருடமாக முயற்சித்து
கடந்த 4 வருடங்களாக முயற்சி செய்து நடிகர் விஜய்யின் கால்ஷீட் பெற்று பல கோடிகள் கடன் வாங்கி மிகுந்த பொருட்செலவில் இந்த தலைவா திரைப்படத்தை தயாரித்து இருக்கிறேன்.

9ம் தேதி வெளியிட ஒப்பந்தம்
கடந்த 9.8.2013 அன்று படத்தை வெளியிடுவதாக விநியோகஸ்தர்களிடம் ஒப்பந்தம் செய்து இருக்கிறேன்.

யாரோ குண்டு மிரட்டல் விட்டுட்டாங்கம்மா...
இந்த தலைவா திரைப்படம் வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தியேட்டர்களுக்கு யாரோ இந்த திரைப்படத்தை வெளியிட கூடாது என்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இருக்கிறார்கள்.

தியேட்டர்காரர்கள் பயந்துட்டாங்கம்மா
இதனால் தியேட்டர் அதிபர்கள் படத்தை திரையிட பயந்து படம் 9-ந் தேதி வெளியிட முடியாமல் ஆகிவிட்டது.

வெளிமாநிலத்தில் வெளியாகிடுச்சேம்மா...
ஆனால் அதே நாளில் வெளிநாடுகளிலும், கேரளா, கர்நாடக, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களிலும் படம் வெளியாகி தமிழ்நாட்டில் மட்டும் வெளிவராமல் நின்றுவிட்டது.

திருட்டு டிவிடி வந்துருச்சேம்மா...
இதற்கு இடையில் இன்டர்நெட்டிலும், திருட்டு வி.சி.டிகளிலும் படம் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதனால் எனக்கு பல கோடிகள் நஷ்டம் ஏற்படும் நிலைமை உருவாகிவிட்டது.

பெரிய கடனாளியாகி விடுவேன்
இந்த படம் இந்த வாரம் கூட அதாவது 16.8.2013 (நாளை) அன்று கூட வெளியாகாவிட்டால் நான் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் மிகுந்த கஷ்டத்திற்கு ஆளாவேன்.

மன உளைச்சல்
இந்த திரைப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களும், திரை அரங்கு உரிமையாளர்களும் மிகவும் நஷ்டத்திற்கும் மன உளைச்சலுக்கும் உள்ளாகி உள்ளார்கள்.

அம்மா மனமிறங்கி...
ஆகவே முதல்- அமைச்சர் ஜெயலலிதா மனமிறங்கி இந்த திரைப்படம் நாளை (16.8.2013) வெளிவர வேண்டிய நடவடிக்கை எடுத்து எங்களை காப்பாற்ற வேண்டும் என்று தாழ்பணிந்து கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











