Thalaivar170: ஜெயிலர் தந்த நம்பிக்கை... முழு வீச்சில் வேட்டையனாக மாறிய ரஜினி... தலைவர் 170 அப்டேட்
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் கடந்த வாரம் வெளியாகி மாஸ் காட்டி வருகிறது. இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பால் உடனடியாக தலைவர் 170ல் நடிக்க ரஜினி ரெடியாகிவிட்டாராம்.
லைகா தயாரிப்பில் தசெ ஞானவேல் இயக்கும் இந்தப் படம் குறுகிய காலத்தில் உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது இந்தப் படத்தின் டைட்டில், ஷூட்டிங் தொடங்கும் நாள் குறித்து தகவல்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

வேட்டையனாக மாறிய சூப்பர் ஸ்டார் : பேட்ட, தர்பார், அண்ணாத்த படங்களால் ஆட்டம் கண்டிருந்த ரஜினியின் மார்க்கெட், ஜெயிலர் ரிலீஸுக்குப் பின்னர் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. ஜெயிலர் படத்தின் வெற்றியால், தலைவர் தான் எப்போதுமே சூப்பர் ஸ்டார் என அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். முத்துவேல் பாண்டியனாக மிரட்டிய ரஜினிகாந்த், அடுத்து வேட்டையனாக அவதாரம் எடுக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.
ஜெயிலரில் நடித்துக்கொண்டிருக்கும் போதே லைகா தயாரிக்கும் இரண்டு படங்களில் நடிக்க கமிட்டானார் ரஜினி. அதன்படி, அதில் ஒரு படத்தை ரஜினியின் மகள் ஐஸ்வர்யா இயக்க, 'லால் சலாம்' என்ற டைட்டிலில் வெளியாகவுள்ளது. ரஜினி இந்தப் படத்தில் மொய்தீன் பாய் என்ற கேமியோ ரோலில் நடித்துள்ளார். லால் சலாம் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்ட நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், தற்போது ஜெயிலரும் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்துவிட்டது. இதனால், விரைவில் லால் சலாம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக ரஜினியின் 170வது படத்தை 'ஜெய்பீம்' புகழ் தசெ ஞானவேல் இயக்குகிறார். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. தலைவர் 170 படத்தின் ப்ரீ புரொடக்ஷன் வேலைகளை முடித்துவிட்ட ஞானவேல், ரஜினியுடன் நடிப்பவர்களையும் தேர்வு செய்துவிட்டாராம்.
'ஜெய்பீம்' போல தலைவர் 170 படமும் சமூகத்துக்கான முக்கியத்துவம் உள்ளதாக இருக்கும் என சொல்லப்படுகிறது. அதாவது மரண தண்டனைக்கு எதிராக போராடும் ஓய்வுப் பெற்ற போலீஸ் ஆபிஸர் கேரக்டரில் ரஜினி நடிக்கவுள்ளாராம். மேலும், இதில் முஸ்லிம் கேரக்டரில் ரஜினி நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதேநேரம் இந்தப் படத்தின் டைட்டில் 'வேட்டையன்' எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செப்டம்பர் முதல் அக்டோபர் வரை தலைவர் 170 படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ள ரஜினி, மொத்தமே 50 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்துள்ளாராம். இதனால் முதலில் ரஜினியின் போர்ஷன் முழுவதையும் ஒரே ஷெட்யூலில் முடித்துவிட இயக்குநர் ஞானவேல் ரெடியாகிவிட்டாராம். அதன்படி, செப்டம்பர் 15ம் தேதி தலைவர் 170 எனப்படும் வேட்டையன் படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தப் படத்தில் ரஜினியுடன் நானி, அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், மஞ்சு வாரியர் ஆகியோர் நடிப்பதும் உறுதியாகியுள்ளது. ஃபஹத் பாசில், அமிதாப்பச்சன் இருவரும் ரஜினிக்கு வில்லனாக நடிப்பதாகத் தெரிகிறது. தலைவர் 170 படத்தின் மொத்த படப்பிடிப்பையும் இந்தாண்டு இறுதிக்குள் முடித்துவிட்டு, 2024 சம்மரில் ரிலீஸ் செய்ய லைகா பிளான் செய்துள்ளதாம். இதனையடுத்து இமயமலையில் இருந்து சென்னை திரும்பிய ரஜினி, தற்போது 170 மேக்கப் டெஸ்ட் ஷூட்டிங்கில் கலந்துகொண்டுள்ளாராம்.


Click it and Unblock the Notifications











