Thalaivar 170 Team: தலைவர் 170ல் இணைந்த பிரபலங்கள்... யாருமே எதிர்பார்க்காத மாஸ் கூட்டணி!
சென்னை: ஜெயிலர், லால் சலாமை தொடர்ந்து தலைவர் 170 படத்தில் நடிக்கவுள்ளார் ரஜினிகாந்த்.
லைகா தயாரிப்பில் தசெ ஞானவேல் இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவுள்ளது.

இதனையடுத்து தலைவர் 170 டீம் அப்டேட்டை தயாரிப்பு நிறுவனம் அடுத்தடுத்து வெளியிட்டு வருகிறது.
அதன்படி, ரஜினியின் தலைவர் 170 படத்தில் ரித்திகா சிங், துஷாரா விஜயன் ஆகியோர் இணைந்துள்ளனர்.
தலைவர் 170 படத்தில் இணைந்த பிரபலங்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தசெ ஞானவேல் இயக்கவுள்ள திரைப்படம் தலைவர் 170. லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினி, தசெ ஞானவேல், அனிருத், லைகா கூட்டணியில் தலைவர் 170 உருவாகவுள்ளது பற்றி ஏற்கனவே அபிஸியலாக அறிவிப்பு வெளியானது. அதே அப்டேட்டை மீண்டும் நேற்று அறிவித்தது லைகா புரொடக்ஷன்ஸ்.
அதன் தொடர்ச்சியாக இன்றும் தலைவர் 170 டீம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். நேற்றைய தினம் வெயிட்டான அப்டேட்டை எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. அதனால், இன்றாவது தரமான அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்தனர். அதன்படி இன்றும் தலைவர் 171 டீம் பற்றிய அப்டேட் வெளியானாலும், அதில் ரசிகர்களுக்கு பெரிய சர்ப்ரைஸ் இல்லை என்றே சொல்லலாம்.

இன்றைய தினம் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பில், தலைவர் 170 படத்தில் துஷாரா விஜயன் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்து பிரபலமானவர் துஷாரா விஜயன். அதனைத் தொடர்ந்து நட்சத்திரங்கள் நகர்கிறது, அநீதி, கழுவேர்த்தி மூக்கன் போன்ற கதைக்கும் பாத்திரத்துக்கும் முக்கியத்துவமான படங்களில் நடித்துள்ளார். இந்த வரிசையில் தற்போது தலைவர் 170 படத்தில் துஷாரா கமிட்டாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
துஷாராவைத் தொடர்ந்து ரித்திகா சிங்கும் தலைவர் 170 படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இறுதிச் சுற்று படத்தில் பாக்ஸராக நடித்து பலரையும் திரும்பிப் பார்க்க வைத்த ரித்திகா சிங், ஓ மை கடவுளே, ஆண்டவன் கட்டளை உட்பட மேலும் சில படங்களில் நடித்துள்ளார். மாதவன், விஜய் சேதுபதி போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துள்ள ரித்திகா சிங், முதன்முறையாக உச்ச நட்சத்திரமான ரஜினியின் படத்தில் இணைந்துள்ளார்.
தலைவர் 170 படத்தில் ஓய்வுப்பெற்ற போலீஸ் ஆபிஸர் கேரக்டரில் ரஜினி நடிப்பதாக சொல்லப்படுகிறது. மரண தண்டனைக்கு எதிராக போராடும் பவர்ஃபுல்லான கேரக்டர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தலைவர் 170 படத்திற்காக 50 நாட்கள் மட்டுமே கால்ஷீட் கொடுத்துள்ளாராம் ரஜினி. இதனால், அடுத்த வாரம் தொடங்கும் லால் சலாம் ஷூட்டிங், அடுத்தாண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்திற்குள் நிறைவுபெறும் என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











