Thalaivar 170: தக் லைஃப் டீசருக்கு டஃப் கொடுக்கும் தலைவர் 170 டைட்டில்... அப்டேட்டுக்கு ரெடியா..?
சென்னை: ஜெயிலர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தலைவர் 170ல் நடித்து வருகிறார் ரஜினிகாந்த்.
தசெ ஞானவேல் இயக்கும் இந்தப் படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்து வருகிறது.

தலைவர் 170 படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வரும் நிலையில், இந்தப் படத்தின் டைட்டில் ரிலீஸ் குறித்து அப்டேட் கிடைத்துள்ளது.
கமலின் தக் லைஃப் டைட்டில் டீசர் வெளியாகி மிரட்டி வருவதால், தலைவர் 170 டைட்டில் டீசர் ரிலீஸ் தேதியை படக்குழு முடிவு செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
தலைவர் 170 டைட்டில் டீசர்
சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கிய ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவான இந்தப் படம், பாக்ஸ் ஆபிஸில் 600 கோடி வரை வசூலித்தது. இதனையடுத்து ரஜினி, லோகேஷ் கூட்டணியில் தலைவர் 171 படம் உருவாகவுள்ளதாக சன் பிக்சர்ஸ் அறிவித்திருந்தது.
இன்னொரு பக்கம் லால் சலாம், தலைவர் 170 படங்கள் ரஜினியின் லைன் அப்பில் காத்திருக்கின்றன. இதில் லால் சலாம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனையடுத்து தசெ ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார் ரஜினி. இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் திருவனந்தபுரத்தில் தொடங்கியது. தொடர்ந்து நெல்லை, கன்னியாகுமரி, மும்பையில் ஷூட்டிங் நடைபெற்றது.
மும்பை படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பிய ரஜினி, தற்போது ஓய்வில் இருக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் டீசரை விரைவில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாம். கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் 234வது படத்தின் டைட்டிலை படக்குழு தற்போது அறிவித்துள்ளது. தக் லைஃப் என்ற டைட்டிலை டீசருடன் வெளியிட்டு மாஸ் காட்டியுள்ளார் மணிரத்னம்.
இதனால், ரஜினியின் பிறந்தநாள் ஸ்பெஷலாக தலைவர் 170 டைட்டில் டீசரை வெளியிட லைகா புரொடக்ஷன்ஸ் முடிவு செய்துள்ளதாம். இந்தப் படத்திற்கு வேட்டையன் என டைட்டில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின. ஆனால், அதுபற்றி படக்குழு தரப்பில் இருந்து எந்த அப்டேட்டும் கொடுக்கவில்லை. அதனை டீசருடன் வெளியிட வேண்டும் என்பதால், இன்னும் ரகசியம் காத்து வருகிறது படக்குழு.
அதேபோல், ரஜினியின் பிறந்தநாள் ஸ்பெஷலாக தலைவர் 171 படத்தில் இருந்தும் அப்டேட் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முதன்முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினி - லோகேஷ் கனகராஜ் கூட்டணி இணைந்துள்ளதால், தலைவர் 171 படம் பற்றிய எதிர்பார்ப்பு இப்போதே எகிற ஆரம்பித்துள்ளது.


Click it and Unblock the Notifications











