Thalaivar 171: தலைவர் 171 படத்தை தயாரிக்க கடும் போட்டி... தாறுமாறாக உயரும் ரஜினியின் சம்பளம்?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் வரும் விநாயகசதுர்த்தி விடுமுறைக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து த செ ஞானவேல் இயக்கும் தலைவர் 170 படத்தில் நடிக்கவுள்ளார்.
இன்னொரு பக்கம் ரஜினியின் தலைவர் 171 படத்தை தயாரிக்க கடும் போட்டியே காணப்படுகிறது.
5 முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் தலைவர் 171 படத்தை தயாரிக்க போட்டிப் போட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ரஜினியின் தலைவர் 171:சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்தப் படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனையடுத்து லைகா தயாரிக்கும் தலைவர் 170 படத்தில் நடிக்கிறார். தசெ ஞானவேல் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.
இன்னொரு பக்கம் ரஜினியின் தலைவர் 171 படம் குறித்த தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. இதுதான் ரஜினியின் கடைசிப் படமாக இருக்கலாம் என சொல்லப்பட்டது. அதனால், தலைவர் 171 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கலாம் எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினியும் தனது கடைசிப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க வேண்டும் என விரும்புகிறாராம்.
ரஜினி - லோகேஷ் கூட்டணி கண்டிப்பாக இணையும் பட்சத்தில், அது LCU கான்செப்ட்டில் தான் இருக்கும் என சொல்லப்படுகிறது. அதனால், ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் ரஜினியின் நெருங்கிய நண்பர் கமல்ஹாசனே தலைவர் 171 படத்தை தயாரிக்கலாம் என திட்டமிட்டுள்ளாராம். ஆனால், அதற்கு இடம் கொடுக்காமல் மேலும் 4 முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் போட்டிப் போட்டு வருவதாக தெரிகிறது.
அதன்படி, ரஜினிக்காக இயக்குநர் சுதா கொங்கராவும் ஒரு கதையுடன் காத்திருக்கிறாராம். இந்தப் படத்தை தயாரிக்க ஹோம்பலே பிலிம்ஸ் ரெடியாக உள்ளதாம். கேஜிஎஃப், காந்தாரா படங்கள் மூலம் பிரபலமான ஹோம்பலே பிலிம்ஸ், தலைவர் 171 படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரிக்கும் முடிவில் உள்ளதாம். இதனால் ரஜினி - சுதா - ஹோம்பலே கூட்டணி இணையலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல், தலைவர் 171 படத்தை தயாரிக்க சன் பிக்சர்ஸும் களத்தில் இறங்கியுள்ளதாம். ஜெயிலர் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் தயாரித்து வருகிறது. இந்தப் படம் வெளியாகும் முன்னே ரஜினியுடன் அடுத்த டீல் பேசி முடித்துவிடலாம் என சன் பிக்சர்ஸ் முயற்சித்து வருகிறதாம். மேலும், 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனங்களும் தலைவர் 171 படத்தை தயாரிக்க மல்லுக்கட்டி நிற்கின்றன.
முக்கியமாக ரஜினியின் கால்ஷீட்டுக்காக அவருக்கு 150 கோடி வரை சம்பளம் கொடுக்க தயாரிப்பு நிறுவனங்கள் ரெடியாக உள்ளதாம். இதனால் கோலிவுட்டே தலை சுற்றிப் போய் நிற்கிறது. ரஜினியின் படங்களுக்கு முன்பைப் போல ரசிகர்களிடம் வரவேற்பு இல்லை சொல்லப்படும் நிலையில், 5 முன்னணி தயாரிப்பு நிறுவனங்கள் வரிசைக் கட்டி நிற்கின்றன. இருப்பினும் ரஜினி தனது நண்பரான கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ்க்கு தான் கால்ஷீட் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











