Thalaivar 171: தலைவர் 171 ரஜினியின் கடைசி படம் இல்லை... காத்திருக்கும் இயக்குநர்கள் லிஸ்ட்!!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி தற்போது தலைவர் 170 படத்தில் நடித்து வருகிறார்.
தசெ ஞானவேல் இயக்கும் இந்தப் படம் அடுத்தாண்டு சம்மரில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தலைவர் 171ல் நடிக்கவுள்ளார் ரஜினி.
ஆனால், தலைவர் 171 தான் ரஜினியின் கடைசி படம் என சொல்லப்பட்டது உண்மையில்லை என லோகேஷ் கனகராஜ் கூறியுள்ளார்.

தலைவர் 171 ரஜினியின் கடைசிப் படம் இல்லை
சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியாகி 600 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. இதனால், ரஜினி நடிப்பில் அடுத்து வெளியாகும் லால் சலாம் மீது அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்கிறார் ரஜினிகாந்த். அதில் தலைவர் 170 படத்தை தசெ ஞானவேல் இயக்க, லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
தலைவர் 170 படத்தில் ரஜினியுடன் ஃபஹத் பாசில், அமிதாப் பச்சன், ராணா, மஞ்சு வாரியர், துஷார விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இதனையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் தலைவர் 171 படத்தில் நடிக்கவுள்ளார் சூப்பர் ஸ்டார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் அடுத்தாண்டு பிப்ரவரியில் தொடங்கும் என சொல்லப்படுகிறது.
இதனிடையே தலைவர் 171 தான் ரஜினியின் கடைசிப் படம் என சொல்லப்பட்டது. அதாவது லோகேஷுடன் ஒரு படம் பண்ண வேண்டும் என ரஜினியே விரும்பியதாகவும், அதுவே தனது கடைசித் திரைப்படமாக இருக்க வேண்டும் என அவர் விரும்பியதாகவும் சொல்லப்பட்டது. ஆனால், இதுபற்றி விளக்கம் கொடுத்துள்ள லோகேஷ் கனகராஜ், தலைவர் 171 ரஜினி சாரின் கடைசிப் படம் இல்லை என்றுள்ளார்.
லியோ ஷூட்டிங்கில் இருக்கும் போது திடீரென ரஜினி சாரிடம் இருந்து அழைப்பு வந்தது. அப்போது தன்னிடம் கதை இல்லையென்றும் லோகேஷ் கூறியுள்ளார். அதன்பின்னர் திடீரென ரஜினி சாரிடம் ஒரு கதை சொன்னதாகவும், அவரும் அதற்கு ஓக்கே சொல்லிவிட்டதாகவும் லோகேஷ் தெரிவித்துள்ளார். அதேபோல், தலைவர் 171 ரஜினி சாரின் கடைசிப் படம் இல்லையென்றும், அடுத்தடுத்து அவருடன் இணையவுள்ள இயக்குநர்களின் லிஸ்ட் தனக்குத் தெரியும் எனவும் லோகேஷ் கனகராஜ் மனம் திறந்துள்ளார்.
இதனால் ரஜினியின் கடைசித் திரைப்படம் தலைவர் 171 இல்லை என்பது உறுதியாகியுள்ளது. அதேபோல், ரஜினியின் அடுத்தடுத்த படங்களை யார் இயக்கவுள்ளனர் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இருப்பினும் தலைவர் 171 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் வரை, ரஜினியின் அடுத்த படம் குறித்து அறிவிப்பு வெளியாகாது என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











