சம்பளப் பாக்கி.. டைட்டிலில் பெயர்... பரபரப்பு புகாருக்குப் பின் 'தலைவி' டீம் எடுத்த அதிரடி முடிவு!
சென்னை: எழுத்தாளரும் வசனகர்த்தாவுமான அஜயன் பாலா பரபரப்பு புகார் தெரிவித்திருந்ததை அடுத்து, தலைவி புதிய முடிவை எடுத்துள்ளது.
Recommended Video
சென்னையில் ஒருநாள், உதயநிதி நடித்த மனிதன், பிரபுதேவா நடித்த லட்சுமி உட்பட பல்வேறு படங்களுக்கு வசனம் எழுதியிருப்பவர் அஜயன் பாலா.
அமீரின் நாற்காலி, கிரிமினல் உட்பட சில படங்களுக்கு இப்போது எழுதி வருகிறார். விஜய் இயக்கிய மதராசபட்டினம் உட்பட சில படங்களில் குணசித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.

ஜெயலலிதாவின் கதை
இவர் எழுதிய புத்தகத்தின் அடிப்படையில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதை சினிமாவாக்கப்பட்டு வருகிறது. இதை விஜய் இயக்குகிறார். 'தலைவி' என்ற பெயரில் உருவாகும் இந்தப் படத்தில், கங்கனா ரனவத் ஜெயலலிதாவாக நடிக்கிறார். அரவிந்த்சாமி, எம்.ஜி.ஆராக நடிக்கிறார்.

'தலைவி' மூலமாக
இந்நிலையில், இயக்குனர் விஜய் தனது முதுகில் குத்திவிட்டார் என்று அஜயன்பாலா பரபரப்பு புகார் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் பேஸ்புக்கில், சினிமாவில் நம்பிக்கைத் துரோகத்தை பலமுறை சந்திந்திருந்தாலும், ஜெயலலிதாவின் 'தலைவி' படம் மூலமாக எனக்கு நேர்ந்திருக்கும் அவமானத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

பெயரை நீக்கிவிட்டார்கள்
நான் 6 மாத காலம் ஆய்வு செய்து எழுதிக் கொடுத்த நாவலை அடிப்படையாக வைத்து, கோர்ட் வழக்குகளில் ஆதராமாகப் பயன்படுத்தி வழக்கில் வெற்றிபெற்ற பின், என் பெயரை சுத்தமாக நீக்கிவிட்டார்கள். பத்தாண்டு நட்புக்காக இயக்குனர் விஜய்யிடம் பல இழப்புகளையும் துரோகங்களையும் அனுமதித்துக் கொண்டேன். இதை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

ஒப்பந்தமில்லாமல்
ஆய்வு எழுத்து, ரைக்கதை விவாதம் என என் ஒன்றரை வருட உழைப்புக்கு கிடைத்த பலன், முதுகில் குத்தியதுதான். இப்படி எழுதியதால் முறையாக சேரவேண்டிய சம்பள பாக்கியைக் கூட கொடுக்க மாட்டர்கள். நட்பிற்காகக் கூட சினிமாவில் முறையான ஒப்பந்தமில்லாமல் யாரும் பணி புரியவேண்டாம்' என்று கூறியிருந்தார். இந்த புகார் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. பின்னர் இந்த பதிவை அவர் நீக்கி இருந்தார்.

பதிவை நீக்கினார்
தன்னிடம் தயாரிப்பாளர் பேசியதாகவும் பிரச்னையை பேசிக்கொள்ளலாம் என்று தெரிவித்ததை அடுத்து, அந்தப் பதிவை நீக்கிவிட்டதாகக் கூறி இருந்தார். இந்நிலையில், தனது பெயரை படத்தில் போடவேண்டும் என்றும் சம்பள பாக்கியைக் கொடுக்க வேண்டும் என்று அவர் தயாரிப்பாளரிடம் கோரிக்கை வைத்தார். அதை ஏற்றுக்கொண்ட அவர்கள், சம்பள பாக்கியை கொடுத்துள்ளனர். இதனால் பிரச்னை முடிந்துவிட்டதாக அஜயன் பாலா பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











